Powered By Blogger

Saturday, April 27, 2024

உள்ளேன் ஐயா !

 நண்பர்களே,

 

வணக்கம். ஒற்றை ஞாயிறுக்கு லீவு போட்டான பின்னே இதோ மறுக்கா “உள்ளேன் ஐயா!” என்றபடிக்கே ஆஜராகியுள்ளேன்! நிஜத்தைச் சொல்வதானால் சமீப வாரங்களில் பதிவுப் பக்கத்தில் பெருசாய் ஒரு சுறுசுறுப்பு தென்படாத காரணத்தினால் போன வியாழனிரவு அந்த ”எலக்ஷன் செலக்ஷன்” பதிவைப் போட்டு விட்டு, அதையே அந்த வாரயிறுதிக்கான பதிவாகவும் ஒப்பேற்றிட எண்ணியிருந்தேன்! ஆனால் ஞாயிறுக்கும் பதிவு வரக்காணோம் என்ற பிற்பாடு, ஏகப்பட்ட கவலை தோய்ந்த குரல்கள் எனது வாட்சப்பில் மாத்திரமன்றி, நமது ஆபீஸ் வாட்சப் நம்பரிலும் பதிவாகியிருந்ததைப் பார்த்த போது “ஜெர்க்” அடித்தது! உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கோபால் பல்பொடி ரேஞ்சுக்கு  அசல்நாடுகளிலிருந்தும் “எல்லாம் ஓ.கே. தானுங்களா?” என்ற வினவல்கள் வரப்பெற, ரொம்பவே பப்பி ஷேமாகிப் போச்சு – லீவு லெட்டர் கூட ஒப்படைக்காது காணாது போனது குறித்து!

 

Truth to tell – மாதாமாதம் மேஜையில் வந்து குவியும் கதைகளுக்குள் புகுந்து பட்டி-டிங்கரிங் பார்க்கும் பணிகளிலேயே கணிசமான “தம்” காலாவதியாகிப் போவதால், இன்ன பிற பணிகளுக்குள் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்க ஜீவன் இருக்க மாட்டேன்கிறது! And no different this month too – ரெகுலர் தடம் + ஆன்லைன் மேளாவுக்கான இதழ்கள் என்ற பட்டியலுடன் ! ரெகுலர் தடத்து மெயின் இதழான டேங்கோவுக்குப் பேனா பிடித்தது நானே என்பதால் அங்கே எடிட்டிங்கில் பெருசாய் நோகவில்லை தான்! ஆனால் கதைக்குள் பயணிக்கும் போது கதாசிரியர் Matz-ன் கதை நகற்றும் பாணிகளுக்கு அட்ஜஸ்ட் ஆகிக் கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்ததென்னவோ நிஜம் தான்! கதை மாந்தர்கள் உரையாடிக் கொள்வது பாதி என்றால் பின்னணியில் இருந்தபடிக்கே கதாசிரியர் monologue-ல் சொல்வது மீதி! அந்தக் குரலில் லைட்டான நையாண்டி; கொஞ்சம் தத்துவார்த்தம்; மேலோட்டமாய் வரலாறு என்றெல்லாம் இழையோட வேண்டியிருப்பதால், அதற்கேற்ற கரணங்களை கூகுள் துணையோடு அடிக்க வேண்டியிருந்தது! இம்முறை டேங்கோ & மரியோ சாலடிப்பதோ ஈக்வெடோ தேசத்தில்! And வழக்கம் போலவே கும்பல் கும்பலாய் தறுதலைகள் நம்ம லோன்ஸ்டாரை வேட்டையாடப் பின்னணியில் துரத்தி வருகின்றனர். மிரட்டலான லாங்-ஷாட் ஓவியங்கள்; இயற்கை காட்சிகள் என்று ஓவியர் தாறுமாறு - தக்காளிச் சோறு கிண்டுகிறாரெனில், கலரிங் ஆர்டிஸ்டும் தனது பங்குக்கு வூடு கட்டி அடித்துள்ளார்! And லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பாணி என்பதால் அச்சிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது! So இம்மாதத்து ”தவணையில் துரோகம்வாசிப்பில் தவணை முறையினைக் கோரிடாது! கதைக்குள் புகுந்தால் நிச்சயமாய் 30 நிமிடங்களுக்காவது வேறெந்த வேலைக்குள்ளேயும் ஈடுபட மனசு வராது என்பேன்! செம ஸ்பீடான த்ரில்லர் இது! ஒரே ஒரு வேண்டுகோள் though! இதற்கு முன்பான 3 டேங்கோ சாகஸங்களையும் மேலோட்டமாய், லைட்டாய் ஒரு புரட்டு புரட்டிக் கொண்டீர்களேயானால் – ”இந்த அத்தாச்சி எதுக்கு டுப்பாக்கியைத் தூக்கிட்டு சொர்ணாக்காவா பாயுது?”; ”அந்த மொட்டை பாஸ் எதுக்கு கோட்டும் சூட்டும் போட்டுகினு மிக்சர் சாப்பிட்டுத் திரியறான்?”. நம்ம நாயகர்களுக்கு ஈக்வெடோவில் என்ன ஜோலி? என்பனவெல்லாம் சுலபமாகி விடும்! Of course – என்னைப் போலான வெண்டைக்காய் பார்ட்டியாக நீங்கள் இல்லாது முன் கதைகள் ஸ்பஷ்டமாய் நினைவிருக்கும் பட்சத்தில், no worries – dive right in! இதோ – ஒரிஜினல் அட்டைப்படம், லேசான கலர் மாற்றங்களோடு and உட்பக்கப் பிரிவியூக்களுமே!




போன வாரத்தில் என்னை பிஸியாக்கிய அடுத்த கோஷ்டி – நம்ம உட்சிட்டியின் அட்ராசிட்டி போல்ஸ்கார்ஸ் தான்! இப்போதெல்லாம் ஆண்டுக்கு ஒருவாட்டி டாக்புல் & ஆர்டின் தலை காட்டினாலே பெரிய சமாச்சாரம் என்றான பிற்பாடு, அந்த ஒற்றை ஆல்பமும் இயன்றமட்டுக்கு சிரிப்புகளுக்கு பஞ்சம் வைக்கப்படாது என்ற ஆதங்கம் எனக்கு! So ”கடமையைக் கைவிடேல்” பணிகளுக்குள் கடமை கந்சாமியாய் புகுந்த போது நிறையவே மாற்றி எழுதினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது! அப்புறமென்ன, உட்சிட்டியிலேயே சில தினங்களுக்கு டேரா! And சமீப இதழ்களைப் போலவே இதனிலும் ஆர்டினுக்குத் தான் ஒளிவட்டத்தின் பெரும்பங்கு! So ப்ரான்கோ-பெல்ஜிய கவுண்டமணி, செந்தில் ஜோடிக்கு இயன்றமட்டும் நியாயம் செய்வதில் மெனக்கெட்டால் தப்பில்லை என்று பட்டதால் இதனுள் கணிசமாகவே நேரத்தை செலவிட்டேன் - செம ஜாலியாய்! இதோ – நம்ம சிரிப்பு போலீஸாரின் அட்டைப்பட முதல் பார்வை !! பொதுவாய் ”கார்டூன்களாாாா??” என்று ஜெர்க் அடிப்போராக நீங்கள் இருந்தாலுமே இந்த ஒற்றை இதழுக்கு உங்களது கொள்கைகளை தளர்த்திக் கொண்டால் தப்பிராது என்பேன் – becos இது யாருக்கும் பிடிக்காது போக வாய்ப்புகள் ரொம்ப கம்மி! An absolute laugh riot folks!

“ரைட்டு மாதத்தின் இரண்டு கலர் இதழ்களையும் சமாளிச்சாச்சு.. நம்ம V காமிக்ஸின் ”தலைவனுக்கொரு தாலாட்டு” ரெடியாகி இருந்தால் மேலோட்டமாய் ஒரு பார்வை பார்த்துப்புட்டு அச்சுக்கு அனுப்பிடலாம்!” என்று சாவகாசமாக இருந்தேன்! ஆனால் V காமிக்ஸின் எடிட்டர் எனக்குப் போட்டியாக ‘திருதிரு‘வென முழித்தபோதே புரிந்தது – மைசூர்பாகில் பதம் சொதப்பி இருக்கும் போலும் என்பது! என்ன பிரச்சனை? என்றபடிக்கே கதையை வாங்கிப் பார்த்த போது தான் புரிந்தது – இதனில் பணி செய்திருந்த சகோதரி கேப் வி்ட்டு, கேப் விட்டு எழுதியிருக்கிறார் என்பது! அனுபவம் வாய்க்கும் வரையிலுமாவது கதைகளின் பணிகளில் பெரியதொரு இடைவெளி விடுவது அத்தனை சுகப்படாது என்பதை நான் நிரம்பவே பார்த்திருக்கிறேன்! ஒரு கதைக்குள் மாத ஆரம்பத்தில் சீட்டியடித்தபடிக்கே ஜாலியாகப் புகுந்திடும் போது வரும் வரிகளுக்கும், மாதக் கடைசியில் E.B. பில்லைப் பார்த்த வவுத்தெரிச்சலோடு தயாரி்த்திடும் வரிகளுக்கும்  மத்தியில் கணிசமாகவே வேற்றுமைகள் இருப்பதுண்டு! And இங்கே ஆகச் சரியாய் அதுவே நிகழ்ந்திருக்கிறது! V எடிட்டர் அதனைச் செப்பனிட முயன்றிருந்தும் கதையின் பின்பகுதி முழுசுமாய் மாற்றி எழுதிடாது தேறாது என்பது புரிந்தது! பெருமூச்சு, சிறுமூச்சு என்ற சிக்கின மூச்சிகளையெல்லாம் விட்டபடிக்கே அதனுள்ளும் புகுந்திருக்கிறேன்! இதோ, இந்தப் பதிவை எழுதி முடித்த கையோடு கடைசி 30 பக்கங்களை புதுசாய் எழுத  ஓடிட வேண்டும்! இது மாதிரியான நிகழ்வுகள் தொடர்கதைகளாகிக் கொண்டே போகும் போது தான் – மறுபதிப்புகளும் நமது கருணையானந்தம் அங்கிள் எழுதித் தரும் க்ளாஸிக் கதைகளும், ராஷிகண்ணா + தமன்னாவின் டபுள் டமாக்கா டான்ஸாட்டம்  என்னை வசியம் செய்கின்றன!



மறுபதிப்பா? ரைட்டு!! ‘க்‘...‘ப்‘....‘ச்‘... ஒற்றுப் பிழைகளைப் பார்த்துப்புட்டு அப்படியே வண்டியை அச்சாபீஸ் திசையில் சுளுவாய் திருப்பிவிட்டுப்புடலாம்!

 

க்ளாஸிக் கதைகளா? அந்தக் கதை பாணிகளுக்குக் காலமாய் ‘செட்‘ ஆகிப் போயுள்ள எழுத்து நடையே தாராளம் என்பதால் அங்கேயும் எனக்கு பிழைதிருத்தங்களைத் தாண்டிய நோவுகள் லேது! Of course – ஏக் தம்மில் எட்டோ – ஒன்பதோ, பத்துக் கதைகளைச் சமாளிப்பது என்பது வேறு விதத்தில் நாக்குத்தள்ளச் செய்யும்தான்; But at least நான் மண்வெட்டி கடப்பாரை சகிதம் ஸ்கிரிப்டுகளுக்குள் புகுந்திட அவசியம் இராதே! So ”கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?” என்ற சபலம் எனக்கு அவ்வப்போது எழுவது இவ்விதம் தான்! 


இதோ – நம்ம V காமிக்ஸின் previews படலம்!




 

பதிவு வண்டி ஸ்டார்ட்டிங் ட்ரபிள் கொள்வதற்கு இன்னொரு காரணம் – டி.ராஜேந்தர் அவர்கள் பாணியில் நானே கதை எழுதி; மீசிக்கும் போட்டு, நடிக்கவும் முனைவதால் தான்! முன்பெல்லாம் பதிவுகளை பேப்பரில் எழுதிக் கொடுத்து விடுவேன் & சனி மாலைக்குள் டைப்படித்து வந்து சேர்ந்து விடும்! ஆனால் நாளாசரியாய் டைப்பாகி வரும் ஸ்க்ரிப்டில் தாமதமாகிக் கொண்டே போக, நானே மண்டைக்குள் வரிகளை வடிவமைத்துக் கொண்டே, நானே டைப்பும் அடித்து விடுவதென்று தீர்மானித்தேன்! முறையான டைப்பிங் பயிற்சியில்லாத நமக்கு கீபோர்டில் ஒருவிரல் கிருஷ்ணாராவ் ரேஞ்க்குத் தான் லொட்டு – லொட்டென்று தட்ட முடியுமென்பதால் ஒரு decent நீளத்திலான பதிவை பூர்த்தி செய்ய குறைந்தது 4 மணி நேரங்களாவது ஆகிப் போகிறது! ஏற்கனவே ஒரு கத்தைப் பணிகளை முடித்து வந்த கையோடு பதிவில் 4 மணி நேரங்களைச் செலவிட்டு விட்டு மறுக்கா இன்னொரு லோடு பணிகள் காத்திருப்பதை நினைக்கும் போதே கண்ணை இருட்டிக் கொண்டு வருவதுண்டு ! So மரியாதையாய், பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு பதிவை எழுத மட்டும் செய்வது தான் இனி சுகப்படும் என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டேன்! இதோ – இன்றைய இந்தப் பதிவு விறுவிறுவென்று எழுதும் போது ஒன்றரை மணி நேரத்திற்குள் பூர்த்தியாகி விட்டது! இனி எல்லாம் பேப்பரே!

 

இவையெல்லாம் குட்டியும், குருமானுமான காரணங்களெனில், மெயினான காரணமோ – பொதுவான சோம்பல் / அயர்ச்சி என்பேன்! பொதுவாக எல்லாப் பொதுவெளி முயற்சிகளுக்குமே ராக்கெட் எரிபொருளாக அமைவது மறுபக்கத்தில் உள்ள நண்பர்களின் interactions தான்! ”பாருங்கோ ஷார்ர்ர்... கம்பி மேலே நடக்குது! அல்லாரும் ஜோரா ஒரு தபா கைதட்டுங்க!” என்று சாலைகளில் வித்தை காட்டுவோரிடம் இருந்து நாமும் பெரிதாய் இந்த விஷயத்தில் மாறுபட்டிருப்பதில்லை! கைதட்டல்களோ, கழுவி ஊற்றலோ – இரண்டில் எது கிட்டினாலுமே உங்களிடமிருந்தான interactions என்ற திருப்தியில் வண்டி ஓட்டமெடுக்கும்! மாறாக – ‘ஆங்... சரி... ரைட்டு... அம்புட்டு தானே! சரி... படிச்சாச்சி! நான் கிளம்பறேன்!‘ என்றபடிக்கு நண்பர்களில் பலர் மௌனம் காக்கும் போது, புதுப்பேட்டை படத்தில் தனுஷ் ”யாராச்சும் இருக்கீங்களா? ரொம்ப பயம்மாாாா கீது!” என்ற கூவும் sequence தான் மனதில் ஓடும்! Of course தளத்தில் கிட்டிடும் page views இன்னமும் சீராய்த் தொடர்ந்திடுகிறது! So நீங்களிங்கு ஆஜராவதும், வாசிப்பதும் ஐயமின்றிப் புரிகிறது! But ‘எங்க ஊரிலே மாடு செவல கலரிலே கன்று போட்டுருக்கு – தெரியுமோ?‘ என்ற ரேஞ்சுக்கேனும் எதையேனும் பின்னூட்டமிட்டால், சக்கரங்கள் கீறிச்சிடாமல் சுழலக்கூடுமல்லவா guys? And yes – ஏதாச்சும் ஸ்பெஷல் அறிவிப்புகள்; flashbacks; க்ளாசிக் பார்ட்டிகளின் மறுவருகை - என்ற ரீதியில் பதிவுகள் அமையும் போது ‘கில்லி‘ படத்து ரீ-ரிலீசுக்கான கூட்டத்தைப் போல இங்கு அதகளங்களை அரங்கேற்ற நீங்கள் தவறுவதில்லை தான்! So உங்களைக் குறை சொல்வது நிச்சயமாய் பொருத்தமாகிடாது! இதை போல அந்நாட்களில் பேஸ்தடித்த ஒரு மதியம், சூட்டைக் கிளப்பிடுவதற்காகவே அறிவித்தது தான் MEGA DREAM ஸ்பெஷல்! அது நமது லிஸ்டில் ஒரு மெகா ஹிட்டாகியதை நாமறிவோம்! ஆனால் இன்றைக்கோ சும்மானாச்சும் ஸ்பெஷல் இதழ்களை அறிவிப்பது நடைமுறையில் சாத்தியக்குறைவாகவே உள்ளதெனும் போது  அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது!

 

ஆனால் இதோ – வாகாக ஒரு வாய்ப்பு இந்த மே மாதத்தில் ”ஆன்லைன் மேளா”வின் புண்ணியத்தில் வாய்த்துள்ளதால் உள்ளாற பட்டாப்பெட்டி இருக்கிற தைரியத்தில் வேஷ்டியை ஏற்றிக் கட்டிக்கினு களமிறங்கத் தயாராகி வருகிறோம்! மே மாதத்தின் முதல் வார இறுதியையே நடப்பாண்டின் ஆன்லைன் மேளாவுக்கென ஒதுக்கிடலாமா guys? ‘ஓ.கே.‘ என்றீர்களானால் ஏற்பாடுகளைச் செய்திட வேண்டியது தான்! What say all?

 

ரைட்டு... மே மாதத்தின் ரெகுலர் இதழ்களில் டேங்கோ & சிக் பில் பிரிண்ட் ஆகியாச்சு! இன்றும், நாளையுமாய் ஏஜெண்ட் ராபினையும் நிறைவு செய்திட்டால் – திங்களன்று அவரும் அச்சுக்கு சென்றிடுவார்! பைண்டிங்கிலிருந்து புக்ஸ் கிடைக்கப்பெறுவதற்கு ஏற்ப புதனன்றோ, வியாழன்றோ டெஸ்பாட்ச் இருந்திடும்! So ‘தலைவனுக்குக்கொரு தாலாட்டு‘ பாட நான் புறப்படுகிறேன்! Have a Sunny weekend all! See you around!!

Thursday, April 18, 2024

ஆற்றுவோமா கடமையை ?

 நண்பர்களே,

வணக்கம். விடிஞ்சால் தேர்தல் ! நாமளும், நம்ம சத்துக்கு அலப்பறை பண்ணாட்டி எப்புடி ? இதோ - கவிஞர் முத்துவிசயனாரின் கைவண்ணத்தில் பற்பல வேட்பாளர்களும், அவர்களது தேர்தல் வாக்குறுதிகளும் !! IPL மேட்சுகளுக்கு இடையே நேரம் கிடைக்கும் போது 'சப்பக்'னு ஒரு குத்து - ப்ளீஸ் ?

https://strawpoll.com/3RnYlGJRJye

அப்டியே இங்கேயும் ரெண்டு வரிகள் ?

Happy Polling !! See you around !!
















Saturday, April 13, 2024

தூங்கும் அழகிகள் !

 நண்பர்களே,

வணக்கம். முன்கூட்டிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! காத்திருக்கும் குரோதி ஆண்டானது, நலமும், வளமும், நட்பும் ஒங்கச் செய்ய புனித மனிடோ அருள்புரிவாராக ! 

ஏப்ரலின் நடுவாக்கில் நிற்கிறோம் - பெளன்சர் அடித்துள்ள சிக்ஸரை ரசித்தபடிக்கே ! இப்போதெல்லாம் மீள்வருகை நாயகர்கள் செமையாய் ஸ்கோர் பண்ணுகிறார்கள் - ஜனவரியில் லார்கோ ஆரம்பித்து வைத்த அமர்க்களத்தை, இதோ, இப்போது பெளன்சர் தொடர்ந்திடுகிறார் ! நிஜத்தைச் சொல்வதானால், பிதாமகர் Jodorowski இல்லாத இந்த ஆல்பம் எத்தனை தூரத்துக்கு ரசிக்குமோ ? என்ற சின்னஞ்சிறு ஐயம் எனக்குள் இருக்கவே செய்தது ! எதையுமே சுலபமாய்ச் ; சுமூகமாய்ச் சொல்வது Jodorowski-க்குப் பிடிக்கவே பிடிக்காத சமாச்சாரம் ; சகலத்திலும் ஒரு shock factor சேர்ப்பதே  அவரது ஸ்டைல். So இதற்கு முன்பான ஆல்பங்களில் நாம் பார்த்த ராவான ஒற்றைக்கர ஹீரோவுக்கும், இங்கு களமாடும் சற்றே நிதானமான நாயகருக்கும் மத்தியிலான அந்த மாறுதல்கள் நெருடுமோ ? என்ற 'டர்' எனக்கிருந்தது ! ஆனால் கதைப்பொறுப்பினையும் கையில் இம்முறை எடுத்திருக்கும் ஓவியர் Boucq - உறுத்தல் தரா ஒரு crisp த்ரில்லரை உருவாக்கியிருப்பதால், "சாபம் சுமந்த தங்கம்" பௌன்சரின் இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு ரூட் போட்டுத்தந்துள்ளது ! அடுத்த டபுள் ஆல்பத்தில் Jodoroswki திரும்பிடுகிறார் ; so அங்கே என்ன மாதிரியான ட்ரீட்மெண்ட் காத்துள்ளதென்பதைப் பார்க்க ஆவலாய் வெயிட்டிங் ! ஒற்றைக்கரத்தாரை 2025-க்கும் டிக் அடித்து விடலாமுங்களா ? 

இம்மாதத்து காரிகன் ஸ்பெஷலும் செம brisk சேல்ஸ் - - ஆன்லைனிலும் சரி, முகவர்களிடமும் சரி ! சொல்லப்போனால், இம்மாதத்து ஆன்லைன் ஆர்டர்களின் மிகுதியே பெளன்சர் + காரிகன் காம்போ தான் ! Of course - கலர் வேதாளர் பற்றிச் சொல்லவே வேண்டாம் - நடப்பாண்டின் புத்தக விழாக்கள் circuit-ஐத் தாண்டி "வேதாளருக்குத் திருமணம்"  கையிருப்பில் இருக்குமா ? என்பது சந்தேகமே ! ஜனவரியில் வந்த "வீரனுக்கு மரணமில்லை" கடைசி 2 கட்டுக்கள் மட்டுமே கிட்டங்கியில் உள்ளன என்ற நிலவரத்தில் இருக்க, விற்பனைகளில் டெக்ஸுக்கு tough தர வேதாளர் ரெடியாகிவிட்டார் என்பது புரிகிறது ! ஏற்கனவே வந்த வேதாளர் ஸ்பெஷல் - 1 & 2 முழுசுமாய்க் காலி ! So நமது கொடௌனை ஊருக்குள்ளானதொரு கபாலக் குகையாய் மாற்றிடும் அவசியங்கள் எழாதென்றே தோன்றுகிறது !

Looking ahead, மே மாதத்தின் ரெகுலர் தடத்துப் பணிகள் on track ஓடிக்கொண்டிருக்க, காத்துள்ள ஆன்லைன் மேளா சார்ந்த பணிகளும் ஓசையின்றி ஓடி வருகின்றன ! அவை பற்றிய கொஞ்சமே கொஞ்சமான தகவல்கள் : 

*4 முழுநீள புக்ஸ் & 4 குட்டி புக்ஸ் என்பதே இப்போதைய திட்டமிடல்

*4 குட்டி புக்சினில், ஒரு செம ஜாலியான சர்ப்ரைஸ் இதழும் காத்துள்ளது !  Trust me guys, இது மெய்யாலுமான ஜாலி இதழ் ! 

*4 பெரிய புக்சினில் கூட ஒரு சர்ப்ரைஸ் புது வரவு வெயிட்டிங் ! 

*And சர்ப்ரைஸ் இதழ்கள் இரண்டுமே கலரில் !  

*இவை அனைத்துமே சிலபஸில் இல்லாத சமாச்சாரங்கள் என்பதால், குறைவான பிரிண்ட்ரன் மட்டுமே கொண்டிருக்கும். But still, விலைகளை நார்மலாகவே அமைத்திட நிச்சயம் மெனெக்கெடுவோம் !

*ஒரேயொரு மறுபதிப்பு ; பாக்கி அனைத்துமே புதுசுகள் ! 

*And இன்னொரு action நாயகர் கூட தனது மீள்வருகைக்கு பிரமாதமானதொரு ஆல்பத்தோடு வெயிட்டிங் !

இப்போதைக்கு இந்த preview போதுமென்பதால் அடுத்த சமாச்சாரங்களுக்குள் புகுந்திடலாமா ? 

சமீபமாய், லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தேன் - பொழுது போகாத ஒரு ராப்பொழுதினில் ! பரிசீலனைக்கென நாம் வாங்கிக் குவித்துள்ள புதுத்  தொடர்கள் / one shots என டன் டன்னாகக் குவிந்து கிடப்பது ஒரு பக்கமெனில், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு வேகத்தில் வாங்கிப் போட்ட, இன்னமும் பகலைப் பார்த்திருக்கா கதைகள் ஒரு லோடு இருப்பதையும் காண முடிந்தது ! அவற்றை என்ன செய்வதென்று சற்றே உரக்க சிந்திக்க நினைத்தேன் - இந்த வாரப் பதிவினில் ! 

1.விண்வெளி வேங்கை - Lady Spitfire !!

விரைவில்.....மிக விரைவில்...இந்த அம்மணியின் ஆல்பம்ஸ் # 2 & 3 நம் பீரோவில் குடியேறி ஆண்டுகள் 10 ஆகப் போகின்றன ! அதனைக் கொண்டாட ஒரு கேக் வெட்டாட்டியும் கூட, கருப்பட்டி ஆப்பத்தை வாங்கியாச்சும், celebrate செய்திட உத்தேசம் !! சமீபத்தைய நண்பர்களுக்கு இவர் யாரென்று பெரிதாய் நினைவிலிருக்க வாய்ப்புகள் குறைவு - becos முதல் ஆல்பத்துக்கு நீங்கள் வழங்கிய விளாசலில், இந்த World War II யுத்த காலத்துப் பெண் பைலட்டின் மீத சாகசங்கள் மீது அப்டியே ஒரு கூடையைப் போட்டு மூடி விட்டிருந்தோம். பிரமாதமான சித்திரங்களும், கலரிங்கும் இந்த தொடரின் பலங்கள் என்ற பெரும் நம்பிக்கையில், கொள்முதல் பண்ணும் போதே - ஒன்றுக்கு மூன்றாய் ஆல்பங்களை ஏக் தம்மில் வாங்கி விட்டிருந்தோம் ! And எனக்கு அந்த முதல் ஆல்பம் நன்றாக வந்திருந்ததாகவே தோன்றியது ! ஆனால் மூ.ச.க்களில் "பழகிப் பார்க்கும் படலங்கள்" அரங்கேறிய அந்தத் துவக்க நாட்களில், சும்மா சகட்டு மேனிக்கு மொத்துக்கள் விழுந்ததைத் தொடர்ந்து உடனடி VRS தந்திருந்தோம் - இந்த அம்மையாருக்கு ! But இது takeoff ஆகிடாததன் காரணத்தை இன்றளவில் யூகிக்க இயலவில்லை ! 

மொத்தம் 4 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர் தலா 2012 ; 2013 ; 2014 & 2015-ல் வெளியாகி நிறைவு கண்டது !!  Phewwww !!


2.பிரளயம் - PANDEMONIUM !! 

ஆர்வக் கோளாறு இருக்கலாம் - - தப்பில்லை ; ஆனால் கோளாறான ஆர்வம் இருக்கலாகாது - என்பதை நான் உணர்ந்த சமீபத் தருணங்கள் 2 ! முதலாவது தருணம் - ஜம்போவில் வெளியான "காலவேட்டையர்" ஆல்பத்துக்கென நான் புரண்ட பொழுதுகளில் ! எப்படியென்று  நினைவில்லை ; ஆனால் இந்த ஆக்கத்தின் இங்கிலீஷ் பதிப்பினை ஏகப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னமே வாசித்த சமயத்தில் எனக்குத் தாறுமாறாய் பிடித்துப் போயிருந்தது ! So இதன் உரிமைகளுக்கென பல்டிக்கள் அடிக்க அவசியமான போதும் - 'ஆட்றா ராமா...தாண்ட்றா ராமா !!' என்று சளைக்காது அடித்திருந்தேன் ! ஆனால் கதையினை வெளியிட வேண்டிய சமயத்தில் எடிட்டிங்கில் அமர்ந்தால் கிறுகிறுத்துப் போனது ! எங்கெங்கிருந்தெல்லாமோ காதில் சரம் சரமாய் புய்ப்பங்களைக் கோர்ப்பது போலவே தோன்றிட, "இதுக்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா ?" என்று வினவிக் கொள்ளத் தோன்றியது ! 

And அதே போலான இன்னொரு தருணம் தான் PANDEMONIUM என்ற முப்பாக ஆல்பத்துக்கு ரைட்ஸ் வாங்கிய வேளையிலும் நிகழ்ந்தது ! 

செம டெரரான ராப்பர்களையும், கதை பிரிவியூக்களையும் நெட்டில் பார்த்ததை தொடர்ந்து, இது செமத்தியான திகில் கதை போலும் ; அமானுஷ்ய ஐட்டங்கள் தூக்கலாக இருக்கும் போலுமென்று எண்ணியிருந்தேன் ! ஆனால் கதையும் வந்து, மொழிபெயர்ப்பினையும் தொடங்கிய போது தான், இங்கே தூக்கலாக இருந்த சமாச்சாரங்களே வேறு என்பது புரிந்தது ! இது ஒரு திகில் கதையல்ல ; மாறாக ஒரு காசநோய் மருத்துவமனையில் அரங்கேறிய அவலங்கள் சார்ந்த மிகையான கற்பனைகள் என்பது புரிந்தது ! நிஜமாகவே அமெரிக்காவில் இருந்த / இருக்கும் காசநோய் மருத்துவமனை தான் இந்தக் கதையின் பின்னணி ! இதோ விக்கிப்பீடியாவில் பாருங்களேன் : https://en.wikipedia.org/wiki/Waverly_Hills_Sanatorium 

இந்த முப்பாக ஆல்பத்துக்கு ஹாரர் கதை ஸ்பெஷலிஸ்டான Christophe Bec (இவர் யாரென்று தெரிகிறதா guys ?) தான் கதாசிரியர் என்பதால், எனது அனுமானம் கொஞ்சம் பிசகாகி விட்டது ! So பரணில் துயிலும் பார்ட்டிகளில் இது வெயிட்டானது - in more ways than one !!

3.ட்யூக் - அத்தியாயம் 3 : 

ஓவியர் ஹெர்மனை நாம் 1985 முதலே அறிவோம் - பரட்டை மண்டை கேப்டன் பிரின்ஸ் உபயத்தில் ! பின்னாட்களில் ஜெரெமியா அறிமுகமான பொழுதுகளில் மீண்டும் அவரோடு கை குலுக்கும் வாய்ப்பு கிட்டியது ! And அந்த நொடியில் எனக்குள் எழுந்த வேகம் தான் "ட்யூக்" தொடரை இட்டு வரக் காரணமாகியது ! 2017-ல் தொடங்கிய இந்த வன்மேற்குத் தொடருக்கு ஹெர்மன் ஓவியங்கள் போட, அவரது புதல்வர் Yves H கதை இலாக்காவினைப் பார்த்துக் கொண்டிருந்தார் ! இந்தக் குடும்பத்தொடர் இன்று வரையிலும் பிரெஞ்சில் டீசெண்டாய் வண்டி ஒட்டிக் கொண்டே செல்கிறது - 2023-ல் ஆல்பம் # 7 வெளியாகியுள்ளது ! நம் மத்தியில் "ஒருமுறை கொன்று விடு !" என்று டபுள் ஆல்பமாய் ட்யூக் அறிமுகம் ஆனார் ! And தொடரின் கதை # 3 இன்னமும் பரணில் ஸ்லீப்பிங் ! இதோ - அவரை நினைவூட்ட ஆல்பம் # 2-ன் அட்டைப்படம்  ! 



4.சட்டித் தலையன் ஆர்ச்சி:

மூன்றோ – நான்கோ ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.40/- விலையில் – எல்லோரும் வாங்கும் விதமான புக்ஸ் போட எண்ணி, அதற்கொரு பிரத்தியேக சந்தாத் தடமும் உருவாக்கியிருந்தோம் – நினைவிருக்கிறதா? க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட்; பெரிய சைஸில் டயபாலிக்; மாடஸ்டி; ஆர்ச்சி என்றெல்லாம் அதில் போட்டிருந்தோம்! ஆனால் மிகச் சரியாக கொரோனா லாக்டௌன் புலர, அந்த முயற்சி பிசுபிசுத்துப் போனது! தவிர, விலை நாற்பதோ – நானுாறோ; வாங்குவது சுற்றிச் சுற்றி அதே வட்டம் தான் என்றான பின்னே, புராதனம் சொட்டிய அந்தக் கதைகள் எதுவுமே பெருசாய் ரசிக்கவில்லை! So அந்தத் திட்டமிடலை மொத்தமாய் மூட்டை கட்டியிருந்தோம்! அந்நேரம் வாங்கிப் போட்டிருந்த கதைகளில் ஒரு சட்டித் தலையன் கதையும் உள்ளதென்பது ஞாபகத்துக்கு வருகிறது! நம்மாளை மறுக்கா களமிறக்கினால் எதைக் கொண்டு சாத்துவீர்கள்? என்ற யோசனையில் மோவாயைத் தடவிக் கொண்டிருக்கிறேன்!


5.  மேட் டில்லன்:


அதே தனித்தடம்; அதே நாற்பது ரூபாய் தொடருக்கென வாங்கியிருந்த இன்னொரு கதை இது! ஆனால் அண்ணாச்சியை ராணி காமிக்ஸில் ஏற்கனவே போட்டு விட்டார்களென்பதை நீங்கள் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன்! So ‘அப்பாலிக்கா பார்த்துக்கலாம்‘ என்று கிடத்திய கதை இன்று வரை கரை சேர்ந்தபாடில்லை!



 6. வைகறைக் கொலைகள்!


சித்திரங்களைப் பார்த்து மயங்கியே வாங்கிப் போட்ட b&w கிராபிக் நாவல் இது! வழக்கமான கோட்டோவியங்களாய் அல்லாது, அற்புதமாய் wash டிராயிங்க் பாணியில் இதனை ஓவியர் Rene Follet வரைந்திருக்கிறார்! And கதையோ 1952ல் பிரான்சில் நிஜமாகவே நடந்ததொரு கொலைச் சம்பவம் சார்ந்தது! இங்கிலாந்திலிருந்து விடுமுறைப் பயணமாய் ப்ரான்ஸிற்கு வந்திருந்ததொரு குடும்பத்தின் மூன்று பெண் பிள்ளைகள் சுடப்பட்டு இறந்து விடுகிறார்கள்! அது சார்ந்த விசாரணையில் ஒரு உள்ளுர் பெரியவரும் கைதாகுகிறார்! ஆனால் நீண்டு சென்ற விசாரணையின் முடிவில் ஆதாரங்கள் வலுவாக இல்லையென்று அவர் விடுவிக்கப்படுகிறார்! ப்ரெஞ்சில் திரைப்படமாகவும் வெளிவந்த இந்த விவகாரத்தின் காமிக்ஸ் வார்ப்பு தான் நான் குறிப்பிடும் மேற்படி ஆல்பம்! ஜம்போவில் அறிவிக்கவும் செய்து, ப்ரெஞ்ச் மொழி to இங்கிலீஷ்; பின்னே இங்கிலீஷ் to தமிழும் மொழிபெயர்க்கப்பட்டு, DTPம் முடிந்து என் மேஜைக்கு வந்த புண்ணியத்தையும் இது தேடிக் கொண்டது! ஆனால் 15 பக்கங்கள் தாண்டுவதற்குள்ளாகவே புரிந்து விட்டது; பேனா பிடித்திருந்த கருணையானந்தம் அங்கிளுக்கு இந்தக் கதையின் களம் சார்ந்து நிறையவே gaps இருப்பது! இங்கிலீஷ் ஸ்க்ரிப்டுமே ரொம்பவே சுமாராக இருக்க, அந்நேரத்து அவசரத்துக்கு வேறு கதை எதையோ களமிறக்கி விட்டு, “வை.கொ”வை பீரோவில் வை! என்று மைதீனிடம் சொல்லியிருந்தேன்! வேறு பணிகள் சார்ந்த பிரஷர் இல்லாததொரு நாளில் இதனை fresh ஆக அணுகிட எண்ணியுள்ளேன். அந்த pressure free நாள் தான் ஏதோ?


7. உலகத்தின் கடைசி நாள்!

அந்த நாளைத் தேடும் முனைப்பில் கண்ணில் பட்டது தான் ”உலகத்தின் கடைசி நாள்”! போன பத்தியின் வரிகளை அப்படியே இங்கே copy-paste பண்ணிக்கலாம்! அப்படியே களத்திற்குள் மர்ம மனிதன் மார்டினையும், அமானுஷ்யங்களின் துப்பறிவாளரான டைலன் டாக்கையும் இழுத்துப் போட்டுக் கொண்டால் கச்சிதமாக முடிந்தது! அதே மிதமான ஆங்கில ஸ்க்ரிப்ட்; புரிதலில் ஏகமாய் பிசகுகள் கொண்டதொரு தமிழாக்கம் & மண்டையை ஏகமாய் பிய்த்துக் கொள்ளச் செய்யும் கதைக்களம்! போன பத்தியின் கடைசி வரியையே இங்கேயும் போட்டுக்கலாம்! அட்டைப்படமெல்லாம் பிரிண்ட் ஆகி ரெடியாக உள்ள இதழிது!

 

8. கதிரவன் கண்டிரா கணவாய்:


Black & White கிராபிக் நாவல்களில் பரீட்சார்த்தம் செய்து வந்த பொழுதுகளில் வாங்கிப் போட்ட கிராபிக் நாவல்களுள் இதுவும் ஒன்று! கொஞ்சம் கவர்ச்சி; கொஞ்சம் ஆக்ஷன்; கொஞ்சம் ஹாரர் என்று பயணிக்கும் 150+ பக்க ஆல்பமிது! கி.நா.க்கள் மொத்து வாங்கிய பின்னணியில் பீரோவுக்குப் பின்னே போன கதையில் இதுவும் ஒன்று!


9. கைப்புள்ள ஜாக்-புக் #2 :

விலையில்லா இணைப்பாய், சின்னச் சின்ன கதைகளோடு வந்த இந்தச் சுள்ளானை நினைவுள்ளதா folks? இவனது ஆல்பம் # 2 முழுசாய் பெரும் தூக்கம் துயின்று வருகிறது பீரோவுக்குள்!



10.
நெவாடா # 2&3 :

2023-ல் அறிமுகமான தொடரிது என்பது நினைவிருக்கலாம் guys! ஹாலிவுட்டிலிருந்து காணாமல் போகும் சூப்பர் ஸ்டாரை தேடிப் பிடித்து மீட்டு வரும் ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக அறிமுகமானவர்! அத்தனை பிரமாதமான வரவேற்பினைப் பெற்றிருக்கவில்லை இவரது முதல் ஆல்பம்! And ஏற்கனவே மெயின் தடத்திலிருந்த SODA; ஆல்பா; சிஸ்கோ; ப்ளுகோட்; போன்றோரே ‘அப்டிக்கா‘ ஓரமாய்ப் போய் விளையாடும் அவசியம் இந்த 2024ல் எழுந்திருக்க “நெவாடா – சித்தே சும்மா கிடடா!” என்று சொல்ல வேண்டிப் போச்சு! தொடரின் ஆல்பம்ஸ் # 2 & 3 கைவசமுள்ளன!



11. தரைக்கு வந்த வானம்!


கதை சார்ந்த previews; நெட்டில் தட்டுப்பட்ட சிலாகிப்புகளால் நாம் பாய்ந்த ஆல்பம் இது! ஆனால் அப்புறமாகத் தான் புரிந்தது முதல் ஆல்பத்துக்கு ஒரு open end தந்து கதையை இரண்டாம் & மூன்றாம் பாகங்கள் வரை இழுத்துச் சென்றுள்ளனர் என்பது! So அவற்றையும் வாங்கியான பிற்பாடு ‘ஏக் தம்மில்‘ வெளியிட்டாக வேண்டும்!

 

12. நீதி தேவன் நம்பர் #1 :



இவரது மினி சாகஸங்கள் நிறையவே கையிருப்பில் உள்ளன! ஏகமாய் அந்த british ஹ்யூமர் இழையோடும் வசனங்களுக்குப் பொருத்தமான தமிழாக்கம் தந்திட, ஆராமான பொழுதுகள் அவசியம்! அந்தப் பொழுதுகள் கிட்டிடும் சமயம் இவர் மறுபடியும் நீதி பரிபாலனம் செய்ய குட்டி விலைகளிலான புக்குகளில் ஆஜராவார்!

Phew!! அதற்குள்ளாகவே ஒரு டஜன் வந்து விட்டது எண்ணிக்கை! இன்னமும் கொஞ்சம் உருட்டினால் – ஓராண்டுச் சந்தாவுக்குப் போடும் அளவிற்கான கதைகள் கிட்டினாலும் வியப்பிராது! இந்த பீரோ பார்ட்டிகளை சிறுகச் சிறுக வெளிச்சத்தைப் பார்க்கச் செய்வதானால் உங்களின் dos & donts அறிவுரைகள் என்னவாகயிருக்குமோ folks? கொஞ்சம் சொல்லுங்களேன்?! 

 

And இந்த ஒற்றை டஜனிலிருந்து மூன்றை தேர்வு செய்வதாக இருப்பின் - what would be your choices ?


Bye for now... Have a fun weekend! See you around! 

Sunday, April 07, 2024

ஜஸ்ட் மிஸ்ஸ்ஸ்ஸ் !

நண்பர்களே,

வணக்கம். இது இங்கே-அங்கேவென லாந்தித் திரியப் போகும் ஒரு ஜாலியான unplugged பதிவே தவிர, வந்துள்ள புக்ஸ் / வரப்போகும் புக்ஸ் பற்றியெல்லாம் பெருசாய் தகவல்ஸ் கொண்டிருக்கப் போகும் களஞ்சியமல்ல ! So IPL மேட்ச்களின்  நடு நடுவே எழக்கூடிய மொக்கை phase-களிலோ, மட்டன் வாங்கப் போய் அங்கே தேவுடு காக்கும் நேரங்களிலோ, புள்ளைகளை கட்டிங் பண்ண சலூனுக்கு கூட்டிப் போய் காத்திருக்கும் சமயங்களிலோ, இங்கே தயக்கமின்றிக் குதித்திடலாம் ! 

ஏப்ரலின் இதழ்கள் நான்கையும் அனுப்பிய கையோடு what next ? என்று எப்போதும் போலவே பார்வையை நீள விட்டால் - மே மாதத்தின் ரெகுலர் இதழ்கள் டென்க்ஷன் தரும் ரகமல்ல என்பது புரிகிறது ! 

  1. லோன்ஸ்டார் டேங்கோ ஒரு சோலோ சாகசத்தில் புதுசாயொரு தென்னமெரிக்க தேசத்தில் கலக்குகிறார்...
  2. நம்ம உட்ஸிட்டி சிரிப்பு போலீசோ வழக்கம் போல தமது ரகளைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் ...and.....
  3. நம்ம V காமிக்சில் ஏஜெண்ட் ராபினின் "தலைவனுக்கொரு தாலாட்டு" காத்துள்ளது ! 

மூன்றுமே fast ; racy ; crisp புக்ஸ் ! And வாசிப்போரையும் சரி, வரிகளுக்கு உயிர் சுவாசிக்க முனைவோரையும் சரி - பெருசாய் படுத்திடாத இதழ்கள் !! So  சற்றே breezy ஆன இந்த May அட்டவணையினைப் பார்க்கப் பார்க்க, ஸ்டேடியங்களில் ஆரஞ்சு சொக்காயில் காவ்யா மாறனைப் பார்த்த ஜனத்தைப் போல, எனக்கும் செம குஷி ! 

Of course - மே மாதத்தின் நடுவாக்கில் "ஆன்லைன் மேளா" என்ற கூத்துக்கள் வெயிட்டிங் என்பதாலேயே, முதல் தேதிக்கான ரெகுலர் தடத்தில் பெருசாய் பளு ஏற்றியிருக்கவில்லை என்பது கொசுறுச் சேதி ! தவிர, பௌன்சர் போலானதொரு intense பணிக்கும், காரிகன் போலானதொரு குண்டுப் பணிக்கும் பின்னே ஒரு மினி ப்ரேக் அத்தியாவசியமே என்பதை கொஞ்சம் முன்கூட்டியே தீர்மானித்துமிருந்தேன் ! அரசாங்க உத்தியோகத்தில் இருந்திருப்பின், பொன்னாடை போர்த்தி, ஸ்வீட், காரம் வாங்கிக்கொடுத்து, வழியனுப்பு விழா நடத்தி, ரிட்டயர்மென்டுக்குள் அனுப்பிடும் வயசானது கூப்பிடு தொலைவிலிருக்க, இப்போதெல்லாம் பேட்டரிகளை மறுக்கா சார்ஜ் ஏற்றிக் கொள்ள அவகாசம் அவசியமாகிறதே ! Moreso becos - மாதாந்திர ரெகுலர் பணிகளுக்கிடையே அடுத்த டின்டின் டபுள் ஆல்பத்துக்கான 124 பக்க மொழிபெயர்ப்புகளையும் இணைத்தடத்தில் செய்து கொண்டே இருந்தேன் ! பக்கமொன்றுக்கு சுமார் 15 கட்டங்கள்...கட்டமொன்றில் குறைந்த பட்சம் 2 வசனங்கள் எனும் போதே பக்கத்துக்கு 30 boxes எழுதணும் ! இதே ரீதியில் 124 பக்கங்கள் எனும் போது தோராயமாக 3700 பெட்டிகள் என்றாகிறது !! செம ஜாலியான கதையே என்றாலும், பணியின் sheer பளு சொற்பமே அல்ல தான் ! அவை முழுசுமாய் முடிந்து, முதல் பாகத்துக்கான படைப்பாளிகளின் ஒப்புதலும் கிட்டியாச்சு எனும் போது - நாக்காரின் சமீபத்தைய தொங்கலுக்கு ஆகஸ்டில் வர வேண்டிய டின்டினும் ஒரு முக்கிய காரணம் ! 

Anyways இப்போதைக்கு கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் அவகாசம் கிட்டியிருக்க, YouTube-க்குள் புகுந்து ரீல்சும், மீம்ஸுமாய் பார்த்தபடிக்கே பொழுதுகளை ஓரிரண்டு நாட்களுக்கு நகற்றினேன் ! தலையில் காரக்குழம்பை ஊற்றிய கையோடு, ஜீன்ஸின் பாதியைக் கிழித்து வைத்துக் கொண்டு, பசங்களும், புள்ளைகளும் ஊர் ஊராய் ; நாடு நாடாய் ; டிசைன் டிசைனாய், மொட்டை மாடிகளிலும், டிராபிக் சிக்னல்களிலும் டான்ஸ் ஆடுவதும், ஆங்காங்கே உள்ள காமெடிகளுக்கு voice-over தருவதும் ரீல்சில் வரிசை கட்டி வர, ஒவ்வொருவருக்கும் தனி channel ; மூணரை / நாலரை லட்சம் followers என்றிருப்பதை திரு திருவெனப் பார்த்தேன் ! And ஒவ்வொரு முப்பது நொடி ரீல்சுக்கும் லட்சங்களில் பார்வைகள் இருப்பதைப் பார்த்த போது தான் உறைத்தது - 'இங்கே 500 பார்வைகள் கிடைக்கவே நம்மளுக்கு மூணு மூத்திரச் சந்தும், நாலு முட்டுச் சந்தும் அவசியமாகுதே !!!' என்ற யதார்த்தம் ! ரைட்டு....ஏற்கனவே தாய்வானில் துரதிர்ஷ்ட நிலநடுக்கம் ; இந்த அழகில் நாமளும் shuffle dance ; சுரைக்காய் டான்ஸ்லாம் படிச்சுப் போட்டு, டான்ஸ்லாம் ஆடி, லட்சங்களிலே பார்வைகளை அள்ளுற கொடுமையை பூமி சத்தியமாய்த் தாங்காதென்றபடிக்கே, Facebook பக்கமாய் நகன்றால், அங்கே நிறைய நோஸ்டால்ஜியா பதிவுகள் - courtesy நம்ம வேதாளர் மறுபதிப்பு + காரிகன் மறுபதிப்பு ! 'அட, இம்புட்டு பேருக்கு தங்களது பால்ய வாசிப்புகள் சார்ந்த நினைவுகள், ஆதியோட 'மடாலய மர்மம்' மெரி இவ்ளோ தெளிவா இருக்குதே ? நமக்கு மட்டும், மொசு மொசுன்னு இருக்கே...? அதனில் கொஞ்சம் தண்ணி தெளிச்சுப் பார்ப்போமா ?' என்று தோன்றியது ! 

So here goes - சின்ன வயசிலே வாசிக்க எனக்கு வாய்த்த வாய்ப்புகள் பற்றியொரு flashback !! பயம் வேணாம் மக்கா - இது சத்தியமா frankfurt சார்ந்த yet another காதில தக்காளிச் சட்னி நினைவலைகளே அல்ல - பால்ய வயசில் எனது வாசிப்புகள் பற்றிய மொக்கை மட்டுமே ! And for sure - இதனைத் தெரிந்து கொண்டு இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்தவெல்லாம் முடியாது தான் ; but இந்த ஞாயிறின் ஒரு அரை மணி நேரத்தை போக்க வேணுமானால் செய்யலாம் !

நான் எப்போது வாசிக்கப் பழகினேன் என்பதோ, எதை முதலில் வாசித்தேன் என்பதோ நினைவில்லை ! ஊரில் அப்போது தான் ஆரம்பித்திருந்த இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் என்னைச் சேர்த்ததே டைரெக்டாய் அரை கிளாசில் ! அது ஏனென்று எனக்கும் தெரியாது ; சேர்த்து விட்ட சீனியர் எடிட்டருக்கும் தெரியாது ! வீட்டில் மூத்த சகோதரிகள் இருவரும் தமிழ் மீடியம் ; நம்ம மட்டும் இங்கிலீஷ் - என்பதில் எப்போதுமே ஒரு கெத்து உண்டு ! And ஸ்கூலில் தமிழில் பேசவே கூடாது என்பது ரூல் ; so வேற வழியே இல்லாமல்...what boy ? what girl ? ரேஞ்சில் ஆரம்பித்த மொழிப்பயிற்சி, மெள்ள மெள்ள இங்கிலீஷில் வாசிக்க ரூட் போட்டுத் தந்தது ! 

எனது வாசிப்பு சார்ந்த நினைவுகளில் முதலில் வருவது - அந்நாட்களில் அமர் சித்ர கதாவோ ; அல்லது வேறு யாரோவோ வெளியிட்ட பினோக்கியோ காமிக்ஸ்  தான் ! பொம்மலாட்டக்காரர் செய்திடும் ஒரு மர பொம்மை ; பொய் சொன்னால் அதன் மூக்கு நீண்டு விடும் என்று செல்லும் அந்தக் கதை புக்கை அப்பாவின் ஆபீசில் பிரிண்ட் செய்தார்கள் என்பதான ஞாபகம் ! அதே போல அமர் சித்ர கதாவின் ஏதோவொரு இதழினை இங்கிலீஷிலும், இன்னும் சில பிராந்திய மொழிகளிலும் இங்கு பிரிண்ட் செய்தார்கள் என்பதும் நினைவில் உள்ளது ! அதுவும் எனது துவக்க கால 'படம் பார்க்கும் படலத்தில்' சேர்த்தி !அப்பாவுக்கு நிறையவும், அவரது தம்பிக்கு ஒரு மிடறு குறைவாகவும் காமிக்ஸ் மோகம் உண்டு ! So அவர்கள் வாங்கிக் குவித்திருந்த  எக்கச்சக்கமான காமிக்ஸ் இதழ்கள் விரல் தொடும் அண்மையில் குவிந்திருந்தன ! வீட்டில் இறைந்து கிடந்த வேதாளர் புக்ஸ் & மாண்ட்ரேக் புக்ஸ் எனக்கு ரொம்பச் சின்ன வயது முதலே தோழர்கள் ! சீனியரிடம் அவற்றிலிருந்து கதை கேட்பது ஒரு பக்கம், முத்து காமிக்ஸ் வெளியீடுகளுக்கென இலண்டனிலிருந்து Sea-மெயிலில் வரும் லாரன்ஸ்-டேவிட் ; மாயாவி கதைகளிலிருந்தும் கதை கேட்பது இன்னொரு பக்கம் என்று நாட்கள் நகர்ந்தன !

Early '70s-களில்  ஒற்றை ரூபாய்க்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையான GoldKey காமிக்ஸ் இதழ்களையுமே வண்டி வண்டியாய் வாங்கி வைத்திருந்தனர் ! அந்நாட்களில் முத்து காமிக்ஸ் செயல்பட்டு வந்து ஆபீஸின் மாடியில் இதற்கென ஒரு லைப்ரரியே உண்டு !  டொனால்டு டக் ; அங்கிள் ஸ்க்ரூஜ் ; மிக்கி மவுஸ் ; பக்ஸ் பன்னி ; daffy duck ; பீகிள் பாய்ஸ்  ; பீப்-பீப் தி ரோட் ரன்னர் ; ஸ்கூபி-டூ ; சூப்பர் goof ; பேபி ஸ்நூட்ஸ் ; லிட்டில் லூலூ - என்று அந்நாட்களது அமெரிக்க டி-வி கார்ட்டூன்களின் காமிக்ஸ் வார்ப்புகள் ஒவ்வொன்றும் கலரில், குட்டிக் குட்டிக் கதைகளில் பின்னிப் பெடலெடுக்கும் ! எனது அதிர்ஷ்டமோ - என்னவோ, அப்பாவுடன் பிறந்த அத்தனை சகோதரர்களின் பிள்ளைகளுக்குமே வாசிப்பில் இம்மி கூட நாட்டம் கிடையாது ! So ஆபீசில் குவிந்து கிடந்த காமிக்ஸ் புக்குகளை பங்கு போட ஈ-காக்காய் கூட இராது ! நான்பாட்டுக்கு திறந்த வீட்டுக்குள் டாபர்மேன் நுழைவதைப் போல புகுந்து இஷ்டத்துக்கு அள்ளி வீட்டுக்கு கொண்டு போய்விடுவேன் ! "குப்பையா சேக்குறான் !!" என்றபடிக்கே அவ்வப்போது அவற்றை ஆபீசுக்கே அம்மா கத்தையாக திருப்பி அனுப்புவது நேர்ந்தாலும், நான் சளைக்காது மறுக்கா எடுத்து வந்து விடுவேன் ! அதிலும் Super Goof என்றதொரு டிஸ்னி பாத்திரம், எனக்கு செம favorite ! சொங்கி போலானதொரு நாய்...ஆரஞ்சு கலரில் சொக்காய் போட்டுக் கொண்டு சுற்றித் திரியும். ஆனால் அதன் தோட்டத்தில் விளையும் Super Goober எனும் விசேஷ கடலைக்கு சூப்பர் ஆற்றலுண்டு ! அதை விழுங்கினால், மறுகணம் சூப்பர்மேன் டிரெஸ் ; முதுகில் ப்ளூ அங்கி என்று மாறுவது மாத்திரமன்றி, சூப்பர்மேனின் ஆற்றல்கள் சகலமுமே கிட்டி விடும் ! தலையில் அணிந்திருக்கும் தொப்பிக்கு அடியில் இந்த சூப்பர் கொட்டைகளை வைத்திருக்கும் ; எவனாவது களவாணிப் பயலை மடக்க வேணுமெனில், அள்ளி வாய்க்குள் போட்டுக் கொண்டு 'TAH DAH' என்றபடிக்கே பறந்து புறப்பட்டு விடும் ! நல்ல பருசான வேர்கடலையைப் பார்க்கும் போதெல்லாம் இன்றைக்குமே எனக்கு அந்த சூப்பர் hero தான் நினைவுக்கு வரும் ! 

GoldKey தவிர்த்து என்னை கட்டுண்டு வைத்திருந்த இன்னொரு காமிக்ஸ் வரிசை - இந்திரஜால் காமிக்ஸ் தான் ! வீட்டுக்கு ரொம்பவே கிட்டே இருந்த உள்ளூர் நியூஸ் ஏஜெண்ட்டின் கடையில் அப்போதெல்லாம் சிறார் புக்ஸ் குவிந்து கிடக்கும் & இந்திரஜால் தமிழிலும், இங்கிலீஷிலும் தருவித்திருப்பார் ! வேதாளர் & மாண்ட்ரேக் என ஆரம்பித்து, பின்னாட்களில் ரிப் கிர்பி ; சார்லி கதைகள் என்றெல்லாம் டிராவல் செய்த இந்திரஜாலிலோ எனது favorite பகதூர் என்றதொரு உள்நாட்டுத் தயாரிப்பு ஹீரோ ! மத்திய பிரதேஷின் சம்பல் பள்ளத்தாக்குகளில் பூலான் தேவி & இன்ன பிற கொள்ளைக் கும்பல்கள் கோலோச்சி வந்த நாட்களவை ! அந்தக் கொள்ளையரை மடக்கும் ஒரு சாகச வீரராய் அறிமுகமான பகதூரை ரொம்பவே ரசித்த ஞாபகம் உள்ளது ! And of course - எனது ஆதர்ஷ வேதாளருடனான பயணமும், மாண்ட்ரேக் + லோதாருடனான நட்பும் இந்திரஜாலில் தான் முழு வீச்சில் தொடர்ந்தது ! அதிலும் "களிமண் ஒட்டகம்" என்றதொரு மாண்ட்ரேக் சாகசம் இன்னமும் நினைவில் நிற்கிறது ! அதனைப் படித்துள்ளோர் இங்கிருப்பின் - நிச்சயம் நம்ம செட் என்பதில் சந்தேகமே இராது ! 



வளர வளர, முத்து காமிக்சின் முதல் வாசகனாகவும் மாறியிருந்தேன் ! ரொம்பச் சீக்கிரமே ஆபீசில் போய் பராக்குப் பார்த்தே இவற்றின் தயாரிப்பின் மீது ஒரு இனம்புரியா வசீகரம் வளர்ந்திருக்க, ஆர்டிஸ்ட்கள் பிரஷ் கொண்டு தடவிக் கொண்டிருந்த பக்கங்களிலேயே கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன் ! தமிழகமே காதலித்த மாயாவி மீது எனக்கு எழுந்த மையல் பாம்புத்தீவு இதழ் முதலாய் உச்சம் கண்டது ! And "பாதாள நகரம்" எனது alltime favorites-களுள் ஒன்று ! "காலேஜ் படிக்கிறதுக்கு உன்ன லண்டன் அனுப்புவேன்" என்று அள்ளி விடும் படலத்தினை சீனியர் எடிட்டர் அந்நாட்களிலேயே ஆரம்பித்திருக்க, மாயாவியோடு சேர்த்து அவர் பணியாற்றிய அந்த நகரம் மீதும் ஒரு லவ்ஸ் வளர்ந்திருந்தது எனக்கு ! மெய்யாலுமே அந்த ஊரில் "நிழல்படை" என்று ஒரு அமைப்பு இருக்கும் போலும் ' என்னிக்காச்சும் அதைப் போய் பார்க்கணும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன் !  "பாதாள நகரம்" இதழில், மாயாவி லண்டனின் ரிஜெண்ட் பார்க் வழியாய் நடந்து போகும் போது அடுத்த பணி சார்ந்த சங்கேதத் தகவல் தரப்படும் sequence இருக்கும் ! "உடனே ஸ்டேஷனுக்குச் செல்லவும் - அவசரம்" என்று ஒரு சாலையோர ட்ரம் அடிக்கும் ஆசாமி மூலமாய் மாயாவி உஷார்ப்படுத்தப்படும் அந்தப் பக்கங்களை எத்தனை முறை வாயைப் பிளந்தபடிக்கே நான் புரட்டியிருப்பேன் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் ! And மாயாவியைக் கடத்தியிருக்கும் குண்டு சுல்தான் அவரை ஏதோவொரு கண்ணாடி மிஷினுக்குள் போட்டு ஏதோ கதிர்களால் தாக்குவான் ; நம்மாளோ அதிலிருந்து மின்சாரத்தை straw போட்டு உரிஞ்சிக்கினு மிஷினை தெறிக்க விட்டு வெளியேறும் காட்சிக்கெல்லாம் அந்நாட்களில் நான் சிதற விட்ட சில்லறை ஏகம் ! மஞ்சள் பூ மர்மமும் எனது சூப்பர்-டூப்பர் இதழ்கள் லிஸ்ட்டில் உண்டு - கதைக்காகவும், இலண்டன் லவ்ஸ்காகவும் ! ஜானி நீரோவிலோ - "கொலைக்கரம்" என்னை மிரட்டியதொரு ஆல்பம் ! 'டேய்...டேய்...ஜானிக்கு வலிக்கும்டா...கழுத்தை நெரிக்காதே...விட்டுப்புடு !!' என்று கழுத்தை நெரித்தே கொல்லும் அந்த ஒய்வு பெற்ற சிப்பாய்-வில்லனை சபித்ததெல்லாம் எனது நினைவலைகளின் ஒரு அங்கம் ! ஆனால் நிஜத்தைச் சொல்வதானால் ஜாக்கி நீரோவை எனக்கு ரொம்பவெல்லாம் பிடித்ததில்லை ; ஜானி in லண்டன் ; மைக்ரோஅலைவரிசை 848 ; மூளைத் திருடர்கள் போன்ற கதைகளெல்லாம் எனக்கு அவ்வளவாய்ப் புரியலை என்பது காரணமோ - என்னவோ ! கொஞ்ச காலம் கழித்து அறிமுகமான ரிப் கிர்பியோ 'கண்டதும் காதல்' கொள்ளச் செய்த ஹீரோவாக அமைந்து போனார் ! அதிலும் "ரோஜா மாளிகை ரகசியம்" top of the list ! விங்-கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி - என்று முத்துவில் அறிமுகங்கள் தொடர, அவர்களுக்கும் விசில் போட நான் தவறியதில்லை ! But ஏனோ தெரியலை - காரிகனை பிடிக்கவே பிடிக்காது ! 

ரெகுலர் வாசிப்பில் இந்த அமெரிக்க ஹீரோக்களெல்லாமே ரொம்பவே நெஞ்சுக்கு நெருக்கமாகியிருந்த சூழலில் தான் - "மாலைமதி காமிக்ஸ்" அறிமுகமாகி எனது சந்தோஷக் கோட்டையின் செங்கல்களை உருவியது ! கொடைக்கானலில் விடுமுறைக்காக ஒரு பெரும் கும்பலாய் சித்தப்பா - பெரியப்பா - அத்தையின் குடும்பங்களோடு போயிருந்த சமயம் தான், குமுதம் குழுமம் காமிக்ஸ் உலகினுள் நுழைய உள்ள தகவல் காதில் விழுந்தது ! மாலைமதி காமிக்ஸ் என்ற பெயரிலான வாராந்திர வெளியீடுகளில் அதுநாள் வரை முத்துவில் வெளிவந்து கொண்டிருந்த முக்கால்வாசி நாயகர்கள் வலம் வரவிருப்பதை தனது பிரதர்ஸிடம் அப்பா சொல்லிக்கொண்டிருக்க, எனக்கோ செம காண்டு ! ஏதோ, நம்ம வீட்டுப் பொருளை ஊரார் எடுத்து பயன்படுத்தப் போகிறார் என்ற ரீதியில் கோபமும், அழுகாச்சியுமாய் வந்தது ! And வீட்டுக்குப் பக்கத்திலான அதே புத்தகக்கடையில் முதல் இதழ் விற்பனைக்கு வந்த போது - எனது காண்டையும் மீறி, அதனை வாங்கிடும் ஆர்வமே மேலோங்கியது ! நல்ல compact சைஸ் ; டிசைன் டிசைனான கதைப் பெயர்கள் ; எனக்கு ரொம்பவே பரிச்சயமான நாயகர்கள் -என்ற போது கடுப்பை விழுங்கிக்கொண்டே வாங்க ஆரம்பித்தேன் ! ஒவ்வொரு வெள்ளியும் குமுதம் இதழோடு மாலைமதி காமிக்ஸ் இதழும் வீடு வர ஆரம்பிக்க, பக்கத்து வீட்டில் நிற்கும் அழகான மோட்டார் சைக்கிளை கடுப்போடே ரசிக்கும் பாவனையில் ரசிக்க ஆரம்பித்தேன் ! ஆனால்...ஆனால்...ஓரிரு ஆண்டுகளிலேயே மாலைமதி காமிக்ஸ் - மாலைமதி நாவல் என உருமாற்றம் கண்டது - அவர்கள் எதிர்பார்த்த விற்பனைகள் காமிக்சில் சாத்தியமாகிடாது போனதால் ! So உரிமைகள் மறுக்கா முத்து காமிக்ஸுக்கே திரும்பிடும் என்பது புரிந்த போது, ஒரு அரை நாளைக்கு பேட்மேன் படத்தில் வரும் ஜோக்கரைப் போலவே "ஈஈஈஈ" என்று இளித்துக் கொண்டே திரிந்தேன் ! 

உள்நாட்டு புக்ஸ் தமிழ் வாசிப்புக்குத் தீனி தந்து கொண்டிருக்க, இங்கிலீஷிலோ War Comics எனது அடுத்த craze ஆகிப் போனது ! அத்தனையும் இரண்டாம் உலக யுத்தப் பின்னணியிலான கதைகள் ; அம்புட்டிலும் ஜெர்மன்காரன்கள் நம்பியார்களாகவும், இங்கிலாந்துக்காரன்கள் எம்.ஜி.ஆர்.களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பர் ! நமக்குத் தான் லண்டன் பக்கத்து ஊடு ரேஞ்சுக்கு மனசளவில் நெருக்கமாகி இருந்ததே ; அதன் மீது குண்டு வீசும் பயபுள்ளைகளை பொறுக்கவாச்சும் முடியுமா ? டன் டன்னாய் யுத்த காமிக்ஸ் வாசித்தேன் ! அதிலும் ரகங்கள் இருக்கும் ; காலாட்படைகளின் சாகஸம்ஸ் ; tank-களில் அரங்கேறும் அதிரடிகள் ; கப்பற்படை கதைகள் ; வான்வெளி யுத்த சாகசங்களென்று ! எனக்கோ tank கதைகள் & வான்வெளிக் கதைகள் மீது தான் கொள்ளை லவ்ஸ் ! அதன் நீட்சி தான் 10 வருஷங்களுக்கு முன்னே "விண்ணில் ஒரு வேங்கை" என்றொரு வான்வெளி யுத்தக் கதையை கலரில் போட்டு உங்கள் குடல்களை உருவியது ! ஆவேசப்பட்டு அந்தக் கதையின் முதல் 3 ஆல்பங்களுக்கும் உரிமைகளை வாங்கிப் போட்டிருந்தேன் ; ஆனால் முதல் இதழுக்கே நீங்கள் பிடரியில் போட்ட போட்டுக்கு சப்த நாடிகளும் ஒதுங்கியிருக்க, மீத இரண்டை பரணில் கடாசிப்புட்டோம் ! ஆத்தீ...என்னா அடி !  

And யுத்த காமிக்ஸ் பைத்தியம் பிடித்திருந்த நாட்களிலேயே இன்னொரு துப்பாக்கி வீரரும் என்னை முழுசாய் ஆட்கொண்டிருந்தார் ! இவரோ இரண்டாம் உலக யுத்தத்தில் சுட்டுத் தள்ளியவரல்ல - மாறாக Wild West-ல் ரகளை செய்த மனிதர் ! இங்கிலாந்தில் TopSellers என்றதொரு பதிப்பகம் வெளியிட்டு வந்த cowboy காமிக்ஸில் அதிரடியாய் அறிமுகம் ஆன டெக்ஸ் வில்லர் தான் அந்த ஜாம்பவான் ! அந்த கம்பீரமான பெயர் ;  (மீசையில்லா) சிவாஜி கணேசன் சாரை லைட்டாய் நினைவூட்டிய முகவெட்டு ; மின்னலான செயல்வேகம் ; வித்தியாசமான கதைக்களங்கள் - என்று ஒவ்வொரு சாகசமும் என்னை செமத்தியாக வசியம் செய்தது !! "டிராகன் நகரம்" கதையினையும் தலைவாங்கிக் குரங்கையும் அன்றைக்கு நான் படித்த அதே வேகத்துக்குப் பாடங்களையும் படித்திருந்தால் district topper ஆக்கவாச்சும் வந்திருப்பேன் ! பின்னாட்களில் இந்த அசாத்தியர் தான் நமக்கு சோறு போடுவாரென்பது அன்றைக்கே தெரிந்திருந்தால், இன்னுமே கூட ஒரு மிடறு கூடுதல் பயபக்தியோடு வாசித்திருப்பேனோ - என்னவோ ; but still மண்டையினை முழுசுமாய் ஆக்கிரமித்திருந்தார் டெக்ஸ் !!  

கொஞ்சம் கொஞ்சமாய் எனது காமிக்ஸ் வாசிப்பு அடுத்த நிலைக்கு நகன்றதற்கான புண்ணியம் டின்டின் + ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ஆல்பங்களையே சாரும் ! டின்டின் புக்சின் பெரும்பகுதியினை நான் வைத்திருந்த நிலையில், ஸ்கூல் நூலகத்தில் குபீரென்று ஒரு வண்டி Asterix & Obelix காமிக்ஸ் இதழ்களை one fine day உட்புகுத்தி வியப்பூட்டினர் ! அதுநாள் வரைக்கும் இவர்களது இதழ்களை Higginbothams போலான கடைகளில் பார்த்திருந்தேன் தான் ; ஆனாலும் பெருசாய் ஈர்த்திருந்ததில்லை ! ஆனால் ஸ்கூல் லைப்ரரியில் ஓசியில் படிக்கும் வாய்ப்புக் கிட்டிய போது காய்ஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்த கதை தான் ! அதிலும் Asterix & The Cauldron மற்றும் Asterix & The Roman Agent கதைகளை தலா இருநூறு தபாவச்சும் வாசித்திருப்பேன் ! காமிக்ஸ் மோகம் ஒரு கிறுகிறுக்கும் உச்சம் தொட்ட நாட்களவை என்று சொல்லலாம் !  

இதனூடே நமக்குப் பரிச்சயமான Fleetway காமிக்ஸ்களுக்கொரு சந்தா செலுத்தும் வாய்ப்பும் எப்படியோ அமைந்தது ! இந்தியாவிலிருந்த ஏதோவொரு ஏஜென்சி மூலமாய் பணம் கட்டினால், அவர்கள் தருவித்துத் தருவார்கள் என்பது மாதிரியானதொரு ஏற்பாடு என்பதாக லேசாய் ஞாபகம் ! To his lasting credit - தொழில் செம சிரமத்தில் ஓடிக்கொண்டிருந்த நாட்களிலுமே எனது வாசிப்புகளுக்குத் தீனி போட சீனியர் எடிட்டர் யோசித்ததே இல்லை ! காமிக்ஸ் மட்டும் தானென்றில்லாது, நான் லிஸ்ட் போட்டுத் தரும் Enid Blyton ; Alfred Hitchcock's Three Investigators ; Hardy Boys ; Willard Price த்ரில்லர் நாவல்ஸ் சகலத்தையுமே தவறாது வாங்கித் தந்துவிடுவார் ! அதிலும் அந்த Three Investigators தொடர் அந்த வயதில் மெர்சலூட்டியதொரு வாசிப்பனுபவம் ! மூன்று ஸ்கூல் பசங்கள், தங்களை சூழ்ந்துள்ள ஊர்களில் அகஸ்மாத்தாய் சந்திக்கும் மர்மங்களை முடிச்சவிழ்க்கும் நாவல் வரிசை ! கொஞ்சம் டெரரான மர்மங்களுமே அவற்றுள் சேர்த்தி ! அந்த புக்ஸ் hardcover பதிப்புகளிலும் வெளிவரும் ; நார்மல் பதிப்புகளிலும் வந்திடும் ! எனக்கு ரெண்டையுமே வாங்கிட சீனியர் எடிட்டர் தயங்கியதில்லை ! தற்செயலாய் ஒரு நண்பனின் பையனுக்கு அந்த புக்கை வாங்கிப் பரிசளிக்க நினைத்து சமீபமாய் நெட்டில் தேடினால் அவையெதும் தற்போதைய புழக்கத்தில் இருப்பதாகத் தெரியக்காணோம் & பழைய புக்ஸோ நம்மூர் ஆர்வலர்கள் 'பாட்டில் பூதம்' இதழுக்குச் சொல்லும் விலையை விட மூணு மடங்கு ஜாஸ்தி இருந்தது ! அவற்றை எங்கேனும் தேற்ற முடிந்தால் உங்கள் ஜூனியர்களுக்கு வாசிக்கக் கொடுத்துப் பாருங்கள் folks - நிச்சயமாய் ரசிப்பார்கள் ! 


 

பின்னாட்களில் பெர்ரி மேசன் நாவல்கள் ; தமிழில் துப்பறியும் சாம்பு ; அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் ; சுஜாதா சார் நாவல்கள் என்று வாசிப்புகள் கிளை பிரிந்த போதும், காமிக்ஸ் தான் எனது பிரதான லவ்ஸ் என்பதில் மாற்றமே இருந்திருக்கவில்லை ! ஒவ்வொரு சாப்பாட்டு வேளையிலும் தட்டுக்கு இடப்பக்கம் இருக்கும் காமிக்ஸ் மட்டுமே மாறிடும் ! லக்கி லூக்கின் Western Circus (நமது சூப்பர் சர்க்கஸ்) & Jesse James சாப்பாட்டு மேஜையில் குடியிருந்த எண்ணற்ற நாட்கள் உண்டு ; பேட்மேன் குத்தகைக்கு எடுத்திருந்த நாட்களும் கணிசம் ; Fleetway-ன் "டைகர்" வாரந்திரியின் Annuals ; அமர் சித்ர கதா நிலைகொண்டிருந்த நாட்களும் அநேகம் ! பின்னாட்களில் இவற்றுக்குள்ளெல்லாம் வேறொரு அவதாரில் கால்பதிப்போமென்ற எண்ணங்கள் கிஞ்சித்தும் அன்று இருந்ததில்லை ; சந்தோஷமாய் பொம்ம புக் லோகத்தினில் உலாற்றியதே அந்த ஞாபகங்களின் துணைவன் !  

Looking back, 50 ஆண்டுகளுக்கு முன்பான இந்தியாவில் காமிக்ஸ் வாசிப்புக்கென எனக்குக் கிட்டிய வாய்ப்புகள் ரொம்பவே ஸ்பெஷல் என்பது புரிகிறது ! அப்பாவின் காமிக்ஸ் ப்ரேமமும், அவரது பயணங்களும் மட்டும் இல்லாது போயிருப்பின், இத்தனை பிரம்மாண்டமானதொரு சித்திரக்கதை உலகம் என் கண்முன்னே விரிந்திட அந்தக் காலங்களில் வாய்ப்பே இருந்திராது ! So அந்த வகையில் பெரும் தேவன் மனிடோவின் கருணைப் பார்வை என் மீதிருந்திருக்கிறது ! இல்லாங்காட்டி, காரக்குழம்பை கபாலத்தில் ஈஷிக் கொண்டு ஆப்-ட்ராயரைப் போட்டிக்கினு ரீல்ஸ் போடும் யூத்களுக்குப் போட்டியாக, ஸ்டீலின் கவிதைகளை நம்ம செயலர் எட்டுக்கட்டையில் பாட, பட்டாப்பட்டிகளில் தலீவரும், நானும் டான்ஸை போடும் கொடூரங்களை நீங்கள் ரசித்திருக்க வேண்டிப் போயிருந்திருக்கலாம் ! And ஞாயிறுக்கு பதிவை எதிர்பார்ப்பதற்குப் பதிலாய், எங்க லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோக்களை இணைய உலகே எதிர்நோக்கியிருக்கக்கூடும் !! Just missssssss !!   

Bye all...அம்மன்கோவில் பொங்கல் களை கட்டியிருக்க, ஊரே திருவிழா கோலத்தில் மினுமினுக்கிறது ! நமது அலுவலகம் நாளை ஒற்றை நாள் மட்டும் லீவு ; so இந்த ஞாயிறை ஆன்லைன் மேளாவுக்கான திட்டமிடலில் செலவிடப் புறப்படுகிறேன் ! MYOMS சந்தா செம வேகத்தில் ஆட்டத்தைத் துவக்கியுள்ளது ; இதே துரிதம் தொடர்ந்தால் சூப்பர் ! See you around ; have a cool Sunday !! 

P.S : Of course - இன்னுமே சில பல காமிக்ஸ் வாசிப்புகளை நான் குறிப்பிட மறந்திருக்கலாம் தான் ; பதிவின் அவசரத்தில் மறந்தவை அப்பாலிக்கா நினைவுக்கு வந்தால் இன்னொரு மொக்கையில்  சொல்கிறேன் ! 

Monday, April 01, 2024

The M.M.S !!

 நண்பர்களே,

வணக்கம். பெயரிடும் படலத்தின் முதல் பகுதி நிறைவு பெற்றுவிட்டது - நம்ம STV நேற்றிரவே தனது டாப் 2 தேர்வுகளைக் குறிப்பிட்டு அனுப்பிய நொடியில் ! அந்த இரண்டில் ஒன்றினை கொஞ்ச நேரம் அசை போட்டான பின்னே - The MAGIC MOMENT Special என்ற பெயரினில் இருவருமே freeze ஆனோம் ! ஆகையால் அடியேனின் பொறுப்பிலான ஆயிரமாவது இதழினை கொண்டாடும் ஸ்பெஷலாக வாகானதொரு தருணத்தில் "MMS" வந்திடும் ! இதன் பெயர் உபயம் - JSVP @ Tex Tiger என்ற பெயரில் பின்னூட்டமிட்டு வரும் நண்பர் ! தன்னை அறிமுகம் செய்து கொள்ள அவர் மெனெக்கட்டாரெனில், இதழ் வெளிவரும் சமயம் அதற்கான credit தந்திடலாம் ! So மேடைக்கு வந்திடுங்களேன் நண்பரே ?

காத்திருக்கும் வலைப்பதிவின் 1000-வது பதிவினை celebrate செய்திட வேண்டிய ஸ்பெஷலுக்கான பெயர் தேர்வினை இன்னமும் பூர்த்தி செய்திட இயலவில்லை ; in any case - அதற்கு இன்னமும் சில மாதங்கள் அவகாசம் இருப்பதால் - we'll take it as it comes !

And ஏற்கனவே ப்ராமிஸ் செய்தது போலவே, இன்று காலை ஏப்ரல் இதழ்களின் சகலமும் கூரியர்களில் கிளம்பி விட்டன ! இம்முறை hardcover இதழ்களே இரண்டெனும் போது டப்பிக்கள் நல்ல பருமனில் பயணிக்கின்றன ! அது மட்டுமன்றி, போன 2 மாதங்கள் முழுக்க முழுக்க black & white மாதங்களாய் காட்சி தந்திருக்க, இம்முறை அந்தக் கலர் வறட்சி நஹி !! பவுன்சரிலும், வேதாளரிலும் வர்ண தாண்டவங்கள் நிறைந்திருக்கும் ! அப்புறம் SUPREME '60s தனித்தடம் இம்மாதத்து காரிகன் ஸ்பெஷல் -2 சகிதம் நிறைவுறுகிறது ! இதன் பின்பான க்ளாஸிக் நாயக பவனி பற்றி ஜூன் மாதம் அறிவிப்போம் ! 

And புக்ஸ் அனுப்பிய கையோடு ஆன்லைன் லிஸ்டிங்கும் போட்டாச்சு guys ; so அவ்வப்போது வாங்கிடும் நண்பர்கள் ஆர்டர்களை போட்டுத் தாக்கிடலாம் ! எப்போதும் போலவே - happy shopping & happy reading folks ! See you around ! 

இதோ லிஸ்டிங்கின் லிங்க் : https://lion-muthucomics.com/latest-releases/1188-2024-april-pack.html  

Saturday, March 30, 2024

கண்ணாலமாம்..கண்ணாலம்..கலரிலே கண்ணாலம் !

 நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலின் புக்ஸ் பைண்டிங்கில் ரெடி ; ஆனால் அந்த பெளன்சர் hardcover இதழுக்கு காய்ந்திட கொஞ்சம் அவகாசம் தந்தால் நல்லதென்றுபட்டது ! அட்டைப்படம் பிரமாதமாய் வந்திருக்க, உட்பக்கங்களும் ரகளையாய் அச்சாகியிருக்க, பைண்டிங்கில் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் கூடுதல் டைம் தந்தால் - கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை நீங்கள் ஏந்திடல் சாத்தியமாகிடும் ! So திங்களன்று despatch இருந்திடும் guys ! அப்புறம் கடைசி நிமிட குட்டிக்கரணமும் உண்டு இந்த மாதத்தில் - but ஜூனியர் பொறுப்பிலான நம்ம V காமிக்சில் !

ஏஜெண்ட் ராபினின் "ஆரூடத்தின் நிழலில்" தான் ஏப்ரலுக்கான V காமிக்ஸ் ! And தமிழாக்கத்தை அடியேன் செய்து தருவது என்பதே திட்டமிடல். எப்போதுமே எழுதப் போகும் கதையை முழுசாய்ப் படிப்பதில்லை நான் ; படித்துக் கொண்டே, எழுதிக் கொண்டே போவதே வாடிக்கை ! நான்கு நாட்களுக்கு முன்னே பணியைத் துவக்கியிருந்தேன்  & இம்முறையும் அதே போலவே வண்டி ஓடியது !  And வழக்கம் போல flashback படலத்தில் கதை நகர்ந்து சென்றது !  கிட்டத்தட்ட கதையின் 90% ஓடியிருந்த நிலையில் - கதையின் ஒருசில விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஏதோவொரு flashback இருப்பது தெரிய ஆரம்பித்தது ! 'ஆஹா...இது எப்போ ?' என்றபடிக்கே தொடருக்குள் தேட ஆரம்பித்தால், இடைப்பட்டதொரு ஆல்பத்தில் அவர்களுக்கு ஒரு சின்ன  intro இருப்பதைப் பார்க்க முடிந்தது ! So அந்த ஆல்பத்தை  வரவழைத்து உட்புகுத்திய பிற்பாடே, "ஆரூடத்தின் நிழலில்" சரிப்படும் என்றுபட்டது ! கொஞ்ச நேரத்துக்கு ஜூனியர் பேந்தப் பேந்தவும் ; me மாமூலாயும்  முழித்துக் கொண்டிருந்தோம் ! இந்தக் கூத்து அரங்கேறியதோ வியாழன் மதியம் !! கையைப் பிசைந்து கொண்டிருந்த அந்த நொடியினில் தான் கலரில் காத்திருக்கும் "வேதாளருக்குத் திருமணம்" ஜூனியருக்கு நினைவுக்கு வந்தது ! "க்ளாஸிக் இதழ் ; செம cute கலரிங்கில் உள்ளது & ராப்பருமே ரெடி ; இதை fast forward பண்ணிப்புடலாம் !" என்று சொல்ல -  'ஆட்றா ராமா....தாண்ட்றா ராமா !' என வியாழன் மாலையே ஆபீஸ் பல்டியடிக்க ஆரம்பித்தது ! வியாழன் இரவோடு இரவாய் பிராசசிங் பணிகளைத் துவக்கி, வெள்ளி மதியம் அச்சும் முடித்து, இதோ - இன்றைக்கு பைண்டிங்குக்கு அனுப்பியுள்ளோம்  ! And நாளையோ, திங்கள்  காலைக்குள்ளோ, புக்ஸ் ரெடியாகிடும் - டப்பிகளுக்குள் அடைத்திட ஏதுவாக ! இதோ - மின்னல் முரளியாய் ரெடியாகியுள்ள வேதாளரின் அட்டைப்பட preview ! இது வேதாளர் தொடரின் ஒரு iconic தருணம் சார்ந்த கதை என்பதால், நடமாடும் மாயாத்மாவை உலக மொழிகளில் வெளியிட்டு வரும் அனைத்துப் பதிப்பகங்களுமே வெளியிட்டிருப்பர் ! And அவர்களின் பெரும்பான்மை பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைனை நமது புது டிஜிட்டல் ஓவியை நமக்குப் போட்டுத் தந்திருக்கிறார் !  இதோ - ஒரு கும்பலே மாயாத்மாவை வாழ்த்தும் அந்தக் காட்சி : 

And உட்பக்கங்களின் வண்ண preview இதோ : 


முத்து காமிக்சின் செம க்ளாஸிக் இதழான "பூவிலங்கு" தான் பெயர் மாற்றத்துடனும், வர்ணச் சேர்க்கையுடனும் வந்திடுகிறது என்பதை 70's & 80's kids அறிவர் ! அதற்குப் பின்பான யூத்மார்களுக்கு இதுவொரு புது ஆல்பமாகவே தோன்றிடலாம் ! Anyways - அட்சர சுத்தமாய் அந்நாட்களது சைஸ் ; பக்க அமைப்பு ; மொழிபெயர்ப்பு என சகலத்தையும் adopt செய்திருக்கிறோம் ! And yes -   

And இம்மாத இளம் டெக்ஸ் - இங்கு அடிக்கும் அனலுக்கு ஈடாய் சுட்டெரிக்கும் மெக்சிகோவில் அரங்கேறிடுகிறது ! And 'தேடப்படும் குற்றவாளியாய்' சின்னத் 'தல' ஓட்டமெடுக்கும் கதைச்சுற்றின் இன்னொரு சங்கிலியே இது ! இந்த ஆல்பத்தில் 2 ஸ்பெஷல் சமாச்சாரங்களுண்டு !! ஏற்கனவே ரேஞ்சராய் இருக்கும் கார்சன் சும்மா கரு கரு மீசையோடு ஆஜராகிறார் & 'கண்டவுடன் காதல்' கொள்ளும் மெக்சிகோ மங்கையொருத்தி இளம் டெக்ஸை கட்டினாலே ஆச்சு என்று தவம் நிற்கிறாள் ! 128 பக்கங்கள் ; 2 அத்தியாயங்கள் ; சின்ன அதிகாரியின் தொடர் ஓட்டம் - இதுவே காத்திருக்கும் "பகைவருக்குப் பஞ்சமேது ?" 



Moving on, அடுத்தடுத்த மாதங்களில் சிலபஸில் அல்லாத இதழ்களாய் கணிசமானவற்றைப் போட்டுத் தாக்க வேண்டிய தருணத்தினை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் ! அவற்றைப் பற்றியான உங்களின் உற்சாக எதிர்பார்ப்புகள் ; பரிந்துரைகள், சிந்திக்க நிறையவே தீனி தந்துள்ளன ! ஒருக்கா நானே உரக்க பேசிக்கொள்கிறேனே - எனது ஞாபகத்துக்கு :

1. Make My Own Mini Santha - MYOMS - 4 இதழ்களோடு - பிரத்தியேக முன்பதிவுகளுக்கு !! இதோ - அது சார்ந்த அறிவிப்பு guys ! 400 முன்பதிவுகள் ; அல்லது 90 நாட்கள் - இவற்றுள் எது முந்திக் கொள்கிறதோ ; அதற்கேற்பவே MYOMS-ன் வெளியீட்டுத் தேதி(கள்) நிர்ணயம் கண்டிடும் ! Maybe ....just maybe ....மூன்று மாத அவகாசத்திற்குள்ளும் முன்பதிவு எண்ணிக்கையினை தொட்டிட இயலாது போயின் - தொகைகள் refund செய்யப்படும் ! அதற்கெல்லாம் அவசியமிராதென்று Fingers crossed !!

2.அடுத்த இரு பெசல் ஐட்டங்களுமே ஆயிரம்வாலாக்கள் !! 

முதலாவது : "ஆயிரம்" என்ற வெளியீட்டு நம்பரை, இந்த ஆந்தைவிழியன் பொறுப்பேற்ற பிற்பாடு நமது குழுமம் தாண்டியுள்ளதைக் கொண்டாடிட !!  போன ஆண்டின் ஏதோவொரு தருணத்தில் இந்த நம்பரைத் தாண்டிப்புட்டு, தற்சமயாய் 1025+ போலானதொரு இலக்கில் பயணித்து வருவதாய் எனக்கு ஞாபகம் ! Anyways - அந்த ஆயிரத்தை தாண்டிய நொடிக்கான ஸ்பெஷலுக்கு - Jus' Like That ஸ்பெஷல் எனப் பெயரிடலாமென்று இந்த topic துவங்கிய 2018-ல் சொல்லியிருந்தேன் ! But அதற்கு நல்லதாய் வேறேதேனும் பெயரிடலாம் என்று தோணும் பட்சத்தில் - போட்டுத் தாக்கிடலாமே guys ? 'எடிட்டர் ஸ்பெஷல்' ; 'ஏட்டய்யா ஸ்பெஷல்' என்ற ரேஞ்சிலான பெயர்களை மட்டும் தவிர்த்து விட்டு - பொருத்தமான பெயர்களை நண்பர்கள் முன்மொழியலாம் ! And அவற்றுள் சிறந்ததை இந்த டாபிக்கை open பண்ணிய நம்ம டெக்ஸ் விஜயராகவனே தேர்வு செய்திடுவார் ! And ஞாயிறு மாலை - அதாவது நாளை மாலைக்குள்ளான பதிவுகள் மட்டுமே consider செய்து, ஒரு பெயரை செலெக்ட் செய்து விடலாம் ! ஓ.கே.வா all ?  

3.Next in line - நமது இந்தப் பதிவுப் பக்கம், தனது ஆயிரமாவது பதிவினை அடுத்த ஓரிரு மாதங்களில் தொட்டிடக் காத்துள்ளதன் நீட்சி ! So அந்த மைல்கல் தருணத்தினைக் கொண்டாடிடவும் ஏதேனுமொரு ஸ்பெஷல் வெளியீட்டினை பிராமிஸ் செய்திருந்தேன் ! So அதற்குமொரு பெயர் பரிந்துரை ப்ளீஸ் ? இந்த முறையோ - பொருத்தமான பெயரை தேர்வு செய்திடப் போவது, இந்தப் பதிவின் கோவைத் தூணான நம்ம கவிஞரும், நானும் தான் ! கோவை இரும்பார் 3 பெயர்களை shortlist செய்து எனக்குத் தந்திட வேணும் & அவற்றுள் ஒன்றினை நான் செலக்ட் செஞ்சூ ! Again ஓ.கே.வா all ? இக்கட முக்கிய கண்டிஷன் - நடுவர்(கள்) போட்டியில் கலந்துக்குப்படாது என்பதே !! ஓ.கே.வா ஸ்டீல் ?

"ரைட்டு....பேர்லாம் வைச்சுப்புடலாம் ; ஆனால் இந்த 2 ஸ்லாட்களுக்கும் எதை  வெளியிடப் போறே அம்பி ?" என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை ! கொஞ்சமே கொஞ்சமாய் அரைத்த மாவுகளிலிருந்து மாறுபடும் சில கதைகளுக்கு ; தொடர்களுக்கு சமீபமாய் முயற்சித்து வருகிறோம் ! அவற்றின் பலன்கள் இரண்டல்லது - மூன்று வாரங்களில் தெரிய வரும் ! தற்போது ஐரோப்பிய புத்தக விழாக்களின் circuit முழுமூச்சில் ஓடிக் கொண்டிருப்பதால், உரிமைகளுக்கான இலாக்காக்களைப் பார்த்து வரும் அனைவருமே அங்கே செம பிசி ! மாமூலான வினவல்களுக்குப் பதில் சொல்லவே நேரமின்றித் திணறி வருகின்றனர் ; so கொஞ்சமாய் பொறுமை காத்தோமெனில் அதற்கான பலனிருக்கக்கூடும் ! Let's wait a bit guys !

And before I sign out - இதோ ஜாலியானதொரு சமாச்சாரம் ! நேற்றைக்கு விளையாட்டாய் FB-ல் நமது நாயகர்கள் சார்ந்ததொரு கேள்வியைக் கேட்டு வைக்க, செம உற்சாக ரெஸ்பான்ஸ் அங்கே ! இதோ அது : Care to give it an answer folks ?


Bye all....மீண்டும் சந்திப்போம் ; அடுத்த டின்டின் டபுள் ஆல்பத்தின் க்ளைமாக்ஸ் பகுதி வெயிட்டிங் என்பதால் அவர்களோடு இன்கா பூமிக்கு விரைந்திடவுள்ளேன் ! ! Have an awesome week-end all !