Tuesday, 6 December 2016

மறைந்திருப்பது ஒரு சகாப்தம் எனும் பொழுது மௌனத்துக்கும், மரியாதைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், அன்பான நினைவு கூர்தல்களுக்குமான  நேரமன்றோ இது ? 

R.I.P our beloved Amma !Sunday, 4 December 2016

கேள்விப் படலம் 2016 !

நண்பர்களே,
            
வணக்கம். வருஷம் முழுக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லி ‘மாங்கு மாங்கென்று‘ இங்கே எழுதுவது என் பொறுப்பு- என்றாகி வருடங்கள் 5 ஆகப் போகிறது ! அதிலும் ‘ஞாயிறுதோறும் பதிவு‘ என்ற நடைமுறையை நாமாக அமல்படுத்திக் கொண்டும் கிட்டத்தட்ட 2 ½ ஆண்டுகளாகப் போகிறதென்று நினைக்கிறேன் ! ஆனால் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு மட்டுமாவது நான் பேச்சைக் குறைத்துக் கொண்டு – உங்கள் எண்ணங்களுக்கு, விமர்சனங்களுக்கு, அபிப்பிராயங்களுக்கு, ஆண்டின் அனுபவங்களுக்கு, முக்கியத்துவம் தரலாமென்று மனதுக்குப் பட்டது ! So- ஞாயிறு காலைகளில் சோம்பல் முறித்துக் கொண்டே செல்போனில் எனது அன்றையப் பதிவைப் படித்து விட்டுப் புரண்டு படுத்துத் தூக்கத்தைத் தொடர்வதற்குப் பதிலாய்- உங்கள் எண்ணங்களை எழுத்தாக்கும் வேளையிது folks !

For starters – எனது முதல் கேள்வியானது : உங்கள் பார்வைகளில்  2016-ன் Top 3 இதழ்கள் எதுவோ ? என்பதே !  “என் பெயர் டைகர்”; “ஈரோட்டில் இத்தாலி”; “சர்வமும் நானே”; “தலையில்லாப் போராளி”; “லக்கி ஸ்பெஷல்” என்று நிறையவே மெகா இதழ்களும் ; ஜேஸன் ப்ரைஸ் ; பெட்டி பார்னோவ்ஸ்கி ; பென்னி என்று புதுவரவுகளும் ; ‘தல‘யின் ஏகப்பட்ட தாண்டவங்களும் அரங்கேறிய ஆண்டிது ! So ஒவ்வொருவரின் ரசனைகளின் அளவுகோல்களுக்கேற்ப  இந்தாண்டின் Top 3 இதழ்கள் விதவிதமாய் அமைந்திடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! இந்த வருடத்தை மனதில் ஓடவிட்டு, நினைவுகளைத் தட்டியெழுப்பி - ஆண்டின் Top 3 இதழ்களைத் தேர்வு செய்யுங்களேன் - ப்ளீஸ் ?

2. எனது கேள்வி # 2 என்னவாகயிருக்குமென்று நிச்சயம் யூகித்திருப்பீர்கள் ! இதற்கான பதிலும் என்னவாகயிருக்குமென்று நாம் பரவலாய் அறிவோம் தான் ! But still – ஓராண்டின் வாசிப்பு அனுபவத்திற்குப் பின்பாய்- ‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
 • அட்டகாசம் – A
 • குட்... ஆனால் கொஞ்சம் போல எண்ணிக்கையைக் குறைத்தால் தப்பில்லை ! – B
 • திகட்டுது ஷாமியோவ் ! – C 

3. இந்தாண்டின் இன்னுமொரு துவக்கம்- பிரத்யேக கார்ட்டூன் தடத்திற்குமே ! டெக்ஸ் வில்லரின் அளவுக்குக் கார்ட்டூன் genre-ஐயும் நம்மில் பெரும்பாலானோர் ரசிப்பதுண்டு தான் என்றாலும் - அந்த ரசிக எண்ணிக்கை உத்தேசமாய் என்ன சதவிகிதம் என்றறிவதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக நினைக்கிறேன் ! So நடப்பாண்டின் சந்தா C பற்றியும் ; காட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
 • A – நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்!
 • B–ஆசைக்கு ஓரிரண்டு வருடங்கள் இதனை முயற்சிப்பது ஓ.கே. தான்!
 • C–வேறு பாணிகளுக்கும் கவனம் தந்து பார்க்கலாமே?

4. இது Evergreen மறுபதிப்பு நாயகர்கள் பற்றிய கேள்வி ! இந்தாண்டின் 10 மும்மூர்த்தி + ஸ்பைடர் மறுபதிப்புகளுள் நீங்கள் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ? எத்தனையை வருடித் தந்து- ‘அந்தக் காலத்திலே...‘ என்ற நினைவலைகளுக்குள் மூழ்கி விட்டுப் புத்தகத்தை மூலை சேர்த்திருப்பீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளலாமா ? 
 • A – படித்தது – 10/10
 • B – பாதிக்குப் பாதி !
 • C – ஹாவ்வ்வ்வ்! 

5. 2016-ன் பல தருணங்கள் நமக்குப் பளீரென்று நினைவில் தங்கியிருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! அவை நமது வாசகச் சந்திப்பு வேளைகளாக இருந்திருக்கலாம் ; ஏதேனும் memorable இதழ்களின் வெளியீட்டு மாதமாக இருந்திருக்கலாம் ; அல்லது ஏதேனும் ஒரு ஞாயிறின் பதிவாகவோ, அது சார்ந்த உற்சாகப் பங்களிப்பாகவும் இருந்திருக்கலாம் ; அல்லது தொடரும் ஆண்டின் அட்டவணை unveil செய்யப்பட்ட வேளையாக இருந்திருக்கலாம் ! என் கேள்வியெல்லாம் இதுவே : “2016-ன் மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்” என்று எந்த 2 நிகழ்வுகளைப் பட்டியலிடுவீர்கள் ? அது பற்றி லேசாகவோ / விரிவாகவோ எழுதினால் இன்னும் சூப்பர் !

6. Best of the lot – என்ற கேள்வியினை இந்தாண்டின் அட்டைப்படங்கள் பக்கமாகவும் கொண்டு செல்லும் போது- உங்கள் கண்களுக்கு 2016-ன் Top 3 ராப்பர்களாகத் தோன்றுவது எவையாக இருக்குமோ ? வரிசைப்படுத்திடலாமே ?

7. Best-களைப் பார்த்து விட்டு, ‘பாதாள பைரவிகளைப்' பார்க்காது செல்வது முறையாகாதல்லவா ? So “2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்” எவையாக இருக்குமென்று வெளிச்சம் போட்டுக் காட்டுங்களேன் ப்ளீஸ் ? எவை சோடை போன இதழ்கள் என்பது பற்றிய கோடு போடப்படும் போது - தொடரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள் எவையென்ற புரிதலும் எங்களுக்குக் கிட்டி விடும் என்பதால் இதுவொரு முக்கிய கேள்வி என்பேன் ! So சற்றே சிந்தித்துப் பதில்கள் ப்ளீஸ் ? 

8. ஆண்டில் புதுவரவுகளென்று பார்த்தால் ஜேஸன் ப்ரைஸ் & பென்னி மாத்திரமே கைதுதூக்கி நிற்கின்றனர் ! இந்த இருவரும் – இரு மாறுபட்ட கதைபாணிகளின் பிரதிநிதிகள் ! இவர்களை rate செய்வதெனில் உங்களின் மதிப்பெண்கள் எவ்வளவாக இருக்குமோ ? 
 • A – ஜேஸன் ப்ரைஸ்
 • B – சுட்டிப் புயல் பென்னி 

9. சந்தா முறையில் இதழ்களைப் பெற்று வருபவர்களாக நீங்கள் இருப்பின் - நடப்பாண்டில் எங்களின் செயல்பாடுகளை நீங்கள் எவ்விதம் பார்த்திடுவீர்கள் ? தவறுகளின்றி, flawless performance தந்திருப்போமென்ற பகற்கனவெல்லாம் எனக்கில்லை! ஆனால் on a scale of 1 to 10 இந்தாண்டின் “சந்தா அனுபவத்தை” எவ்விதம் பார்த்திடுவீர்களோ ? 

10. இறுதியாய் ஒரேயொரு கேள்வி ! நிச்சயமாய் ஒவ்வொரு தரப்பிலும் மாற்றங்கள் / முன்னேற்றங்களை நனவாக்கிட ஆனமட்டிலும் முயற்சித்தே வருகிறோம் ! கதைத் தேர்வில் தொடங்கி, மொழிமாற்றம், தயாரிப்பு, அட்டைப்பட உருவாக்கம், பைண்டிங், தாமதத்தைத் தவிர்த்தல், புத்தக விழாக்களின் பங்கேற்பு என்று பல பரிமாணங்களிலும் தினம் தினமும் ஏதேனும் கற்றறிய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம் ! இந்தத் தொடர் பயணத்தில் எங்களை 2016-ல் எவ்விதம் rate செய்வீர்கள்- ப்ளீஸ்?

A – சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது !
B – மேலே போகவில்லை; கீழே பாயவுமில்லை !
C – ஊஹும்.... திருப்தி லேது !

 ஆக- இவையே இந்த ஞாயிறுக்கான எனது கேள்விகள் ! ‘அட போய்யா... ATM-ல் நின்று தாவு தீர்ந்து போச்சு ; நீ வேற இந்த வயசிலே பரீட்சை வச்சுக்கிட்டு !! என்ற சலிப்பு முகத்தைக் காட்டாது - இவற்றிற்குப் பதில் சொல்ல மெனக்கெட்டால் - நிச்சயமாய் அதனில் நம் அனைவருக்குமே பலனிருக்கும் ! ‘2017-ன் அட்டவணை தான் ஏற்கனவே அறிவிச்சாச்சே...? நான் இப்போ அபிப்பிராயம் சொல்லிப் புதுசாய் எந்த ஆணியைப் பிடுங்குவதாக உத்தேசம் ?‘ என்ற கேள்வியும் சிலபல மனங்களில் எழாது போகாது தான் ! ஆனால் ஒரு முடிவிலாப் பயணத்திற்கு இந்த inputs ரொம்பவே விலைமதிப்பற்றவை தானே ? 2017-க்கு  இல்லாது போனாலும் தொடரும் அடுத்த  ஆண்டுக்கு அவை பயனாகுமல்லவா ?

வழக்கம் போலவே வேண்டுகோள் folks : அவரவர் கருத்துக்களை – அவரவர் ரசனைகளின் பிரதிபலிப்புகளாய் மட்டுமே பார்த்திட்டால் தலைவலிகள் எழாது ! So அவரவரது அபிப்பிராயங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் ப்ளீஸ் ?!

Before I sign off - பாருங்களேன் நண்பர் அஜயின் அட்டகாசக் கைவண்ணத்தை ! இதனை SUPER 6-ன் ‘இளவரசி இதழுக்கு‘ ராப்பராக்கிடலாமா ? ஓ.கே.எனில் - இந்த நான்கில் உங்களது தேர்வு எதுவாக இருக்கும் ? சொல்லுங்கண்ணே... சொல்லுங்க ! 
அப்புறம் சந்தாப் புதிப்பித்தல்கள் & புது வரவுகள்இவ்வாரம் செம வேகமாய் நடந்து வருவது மகிழ்வாய் உள்ளது ! நீங்களும் 2017 -க்கான சந்தா ரயிலுக்கு டிக்கெட் போட்டு விடலாமே ? Bye all ! மீண்டும் சந்திப்போம் ! 

P.S.: டிசம்பர் விமர்சனங்கள் தொடரட்டுமே ப்ளீஸ்?

கிராபிக் நாவல்கள் பற்றியதொரு இந்திய பார்வை !! - என்ற விதமாய் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு ஸ்பெஷல் கட்டுரை வெளியாகியுள்ளது பாருங்களேன் !! அழகாய் இதனை செதுக்கியுள்ள எக்ஸ்பிரஸ் எடிட்டோரியல் டீமுக்கும், அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்த சென்னையைச் சார்ந்த feature writer Ms .ஜெயந்தி சோமசுந்தரத்துக்கும் நமது நன்றிகள் !! 
http://epaper.newindianexpress.com/1023546/The-Sunday-Standard-Magazine/04-12-2016#page/2/1

Tuesday, 29 November 2016

நவம்பரில் டிசம்பர் ..!

நண்பர்களே,

வணக்கம். டிசம்பர் இதழ்கள் இன்றைய மதியமே கூரியரில் புறப்பட்டு விட்டன !

நவம்பரிலேயே   டிசம்பருக்கான இதழ்களை அழகு பார்க்கும் வாய்ப்பு சாத்தியமாகியது - அதனால் ஒரு நாள் முன்பாகவே "பொட்டிகள்" புறப்பட்டு விட்டன ! காலையில் கூரியர் கதவுகளை தட்டிப் பாருங்களேன் ?

மீண்டும் சந்திப்போம்.
இப்போது விற்பனையாளர்களுக்கு புத்தகங்கள் வைக்க பிரத்தியேக ரேக் தருகிறோம் !

அப்புறம், இந்தாண்டில் நாங்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் என்னவென்று தெரிந்திட ஆவலாய்க் காத்திருப்போம் ! கூரியர் "பொட்டிகளுக்குள்" உள்ள இந்த ரிப்போர்ட் கார்டைப் பூர்த்தி செய்து அந்தக் கவரில் போட்டு அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? 

And last - but not the least !! 


Sunday, 27 November 2016

ஒரு சோம்பல் முறிப்பு !

நண்பர்களே,
            
வணக்கம். ஒவ்வொரு சனிக்கிழமையும் பொழுது சாய்ந்த பின்பாகப் பேப்பரையும், பேனாவையும் தூக்கிக் கொண்டு, இந்த வாரத்துப் பதிவுக்கு என்ன எழுதலாமென்ற ‘ரோசனைக்குள்‘ லயிப்பது வழக்கம். ஆனால் இந்தப் பதிவை நான் எழுதியதோ- வியாழன் இரவினில் ! டிசம்பரின் தயாரிப்பில் வண்ண இதழ்கள் சகலமும் இம்முறை சடுதயாய்த் தயாராகிட, b&w இதழான “நீதிக்கு நிறமேது?” மாத்திரம் பின்தங்கி விட்டது ! “அட.... கறுப்பு வெள்ளை இதழ் தானே ? நொடியில் தயார் பண்ணிக்கலாம் !” என்ற மெத்தனம் லேசாய் மனதில் குடியிருந்ததும் இதற்கொரு காரணம் ! ஆனால் பக்க நீளமும் சற்றே அதிகம் ; கதையினில் வசனங்களும் கூடுதல் என்ற போது நான் எதிர்பார்த்ததை விடவும் இந்த இதழின் பணிகள் அதிக நேரம் பிடித்துவிட்டது ! ஒரு வழியாய் வியாழன் இரவில் என் பேனாவின் பணிகள் நிறைவுற - "ஹை !! நடப்பாண்டின் பணிகள் சகலமும் முடிந்தது டோய் !!" என்ற ஞானோதயம் பிறந்தது !  ‘அக்கடா‘வென அந்த நொடியின் ஏகாந்தத்தை அனுபவித்த போதே - இவ்வாரத்துப் பதிவையும் எழுதிடத் தோன்றியது ! ஒரு 12 மாதப் பயணத்தின் இறுதி இதழின் பணிகளுக்கு ‘சுப மங்களம்‘ போடும் அந்தத் தருணம் கொஞ்சமே கொஞ்சமாய் ரசித்திட வேண்டிய பொழுதாகப்பட்டது எனக்கு ! ஒவ்வொரு டிசம்பரிலும் இப்போதெல்லாம் இது போன்றதொரு வேளை உதிப்பதுண்டு தான் ; நிமிர்ந்து பார்ப்பதற்குள் ஜனவரியும், இன்னுமொரு நெடும் பயணமும் காத்திருப்பதும் புரிகிறது தான் ! ஆனாலும் முழுப்பரீட்சை லீவுகள் அறிவிக்கப்படும் அந்த நாளினில் ஒரு மாணவன் அனுபவிக்கும் குதூகலத்தில் ஒரு குட்டி சதவிகிதம் எனக்குள் இந்த நிமிடத்தில் அலையடிக்கிறது!

2015-ம் கூட நமக்கொரு படுபிசியான ஆண்டே ! அப்போதும் 45+ இதழ்களைப் போட்டுத் தாக்கியிருந்தோம் தான் ! So சென்றாண்டின் இதே சமயத்திலும் கூட இந்த சந்தோஷச் சோம்பல் முறிப்பு அரங்கேறியிருக்கும் தான் ! ஆனால் 2016 - எண்ணிக்கையின் விகிதத்தில் மட்டுமன்றி, இன்னும் சில பல காரணங்களினால் ரொம்பவே unique ஆனதொரு ஆண்டென்று சொல்லத் தோன்றுகிறது ! கதைகளை genre வாரியாகப் பிரிக்கும் முயற்சிகளுக்கொரு பிள்ளையார் சுழி போட்டது நடப்பாண்டில் தான் எனும் போது அது காரணம் # 1 என்பேன் ! இது வரையிலும் ‘திகில்‘; ‘மினி லயன்‘; ‘ஜுனியர் லயன்‘ என்று முற்றிலும் வெவ்வேறு பத்திரிகைகளாக நாம் பிரசுரித்து வந்த (சொற்ப) நாட்களில் இந்தக் கதைகளுக்குள்ளான பாகுபாடு அமலில் இருந்தது ! ஆனால் அவை சடுதியில் சயனம் செய்ய நேர்ந்த பின்பாக இந்தாண்டு வரைக்கும் ஒரே இலையில் கூட்டு ; பொரியல் ; பாயாசம் ; பாயா; என்று சகலத்தையும் பரிமாறி வந்திருந்தோம் ! சந்தாக்களுள் தனித்தனித் தடங்கள் அவசியமானதொரு சமாச்சாரமாகிப் போனது - ‘தனி ராஜ்யம்‘ என்ற டெக்ஸ் வில்லர் கொடி பறக்கத் தொடங்கிய வேளை முதலாகவே என்பேன் ! 12 மாதங்களும் ; 12 விதவிதமான டெக்ஸ் கதைகளும் வெளியான பின்பாக ‘சர்வமும் நானே‘ என்று சொல்லிட நம்மவருக்கு சாத்தியமாகிறதென்றால் அதுவொரு சாதனையே என்று தான் சொல்வேன் ! ஆனால் அது பற்றிய அலசல்களுக்கு இன்னமும் நாட்கள் உள்ளன என்பதால் தற்சமயத்துக்கு steering clear of it!

ஆக்ஷன் கதைகளுக்கொரு சந்தா ; போனெல்லியின் b&w படைப்புகளுக்கொரு சந்தா ; கார்ட்டூன்களுக்கொரு சந்தா ; மறுபதிப்புகளுக்கென்று என்ற தெள்ளத் தெளிவான 4 தனித்தனிப் பாதைகளை 2016-க்கென வகுத்துக் கொண்டு பணியாற்றியதால் இந்த ஆண்டின் நிறைவில் எனக்குள் சந்தோஷம் ஒரு மிடறு ஜாஸ்தி என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அடுத்த சில நாட்களில் டிசம்பரின் ‘பொட்டி‘ உங்களைத் தேடிப் புறப்பட்டான பின்னே ; கதைகளை வாசித்திட / விமர்சித்திட ஓரிரு வார அவகாசம் தந்தான பின்னே - 2016 பற்றிய 'திரும்பிப் பார்த்தலைத்' துவக்கிடலாம் ! ஆனால் இந்த நொடியில் நான் திரும்பிப் பார்க்க விழைவதோ - கடந்துள்ள 365 நாட்களது எனது பணிசார்ந்த நினைவலைகளை ! 

சட்டத்திற்கொரு சவக்குழி”யோடு ஜனவரியைத் தொடங்கியது நேற்றைக்குப் போல ஒரு கணத்திலும், ஒரு மகாமகத்துக்கு முன்பான நிகழ்வு போல மறுகணத்திலும் தோன்றுகிறது ! 2016-ன் பக்க எண்ணிக்கையினில் ‘தல‘ தாண்டவம் மாத்திரமே சுமார் 2300 பக்கங்கள் என்பதை இப்போது ஆற அமர தலைக்குள் ஓட அனுமதிக்கும் போது திகைப்பாய் உள்ளது ! பேசிய அதே பன்ச் வரிகளை திரும்பவும் ஏதேனும் ஒரு இதழுக்கு எழுதித் தொலைத்து விடக் கூடாதே என்ற பயத்தில் - இரவுக் கழுகாருக்காக புதுசு புதுசாய் டயலாக்குகளை உருவாக்க நான் செலவிட்ட இரவுகள் தான் மனதில் இப்போது நிழலாடுகின்றன ! அவை சிறப்பாய் அமைந்ததாக நீங்கள் நினைத்தாலும் சரி ; மொக்கையாகத் தோன்றியதாகக் கருதினாலும் சரி - அந்த வரிகளை எழுத செலவாகிய பொழுதுகளே நான் இங்கு நினைவுகூர்ந்திடும் சமாச்சாரம் !   நாட்கள் நகர நகர, நமது நாயகரின் மவுசும் கூடக் கூட, வரிகளின் வீரியமும் அதற்கேற்ப அமைந்திட வேண்டுமென்ற ஒற்றை சிந்தனை மட்டுமே இந்தாண்டு முழுவதற்கும் எனக்குள்ளே உறைந்து வந்தது ! “திகில் நகரில் டெக்ஸ்” & “விதி போட்ட விடுகதை” சற்றே off the beaten Tex track என்ற அங்கீகாரம் கிட்டிய போது பிரகாசமான எங்கள் வதனங்கள் - மெகா சைசிலான “தலையில்லாப் போராளி” யின் சமயம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போலாகியது ! அந்த இதழின் சித்திர பிரம்மாண்டம் நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் 2016-ன் மறக்க இயலாத் தருணங்களில் ஒரு முக்கிய இடம்பிடிக்குமென்று நினைக்கிறேன் ! ஈரோட்டில் இத்தாலி ; சர்வமும் நானே - என்று இன்னமும் வர்ண ஜாலங்களை நமது மஞ்சள் சட்டைக்காரர் தலைக்குள் விட்டுச் சென்றுள்ளதையும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் ! 

‘தல புராணத்து‘க்குள் புகுந்தால் வாய் சுளுக்கும் வரை ஓய மாட்டேனென்பதால் – லேசாகப் பார்வையை மற்ற சாமான்ய நாயகர்கள் பக்கமாய்த் திருப்பும் போது - இந்தாண்டின் பணிகளுக்குள் எனக்கொரு உச்ச திருப்தியைத் தந்த மர்மமனிதன் மார்டின் தான் அழுத்தமாய் நினைவில் நிற்கிறார் ! “இனியெல்லாம் மரணமே” இதழினைக் கையாண்டதும், அதற்கெனப் பேனா பிடித்த (சிரம) நாட்களும் மறக்க இயலா ஞாபகங்களாய்த் தொடர்ந்திடும் என்னுள் ! களம் எப்போதுமே சுலபமானதாக இராது என்பது தெரிந்திருந்தாலும் - ஒவ்வொருமுறை மார்ட்டினோடு கைகுலுக்கும் போதும் ஒரு சன்னமான குஷி எனக்குள் பொங்கிடுவதுண்டு ! மரத்தைச் சுத்தி வந்து டூயட் பாடுவதுமே நமது நாட்களின் ஒரு அத்தியாவசியப் பகுதி தான் என்றாலும், எப்போதாவது கிடைக்கும் இது போன்ற சறுக்குமரம் ஏறும் சவாலான வாய்ப்புகள் தரும் திருப்தி ரொம்பவே பிரத்யேகமானது ! அந்த விஷயத்தில் “இனி எல்லாம் மரணமே” 2016-ன் standout என்பேன்- எனது பணிசார்ந்த அளவுகோல்களில் ! அது உங்களாலும் சிலாகிக்கப்பட்டதொரு இதழாக அமைந்தது bonus !!

ரசித்துப் பணி செய்த இன்னுமொரு ஆல்பம் - நமது பென்சில் இடையழகி ஜுலியாவின் “நின்று போன நிமிடங்கள்” கூடத்தான்! ஆரவாரமிலா ; அதிரடியிலா யதார்த்த நாயகி என்பதால் இவருக்கான மொழிநடை எனது வழக்கமான ‘கடமுட‘ பாணியில் இல்லாது சுலபமாய் அமைந்திட வேண்டுமென நிறையவே மெனக்கெட்டேன் ! End result - காயா? பழமா? என்பதை நானறியேன் ; ஆனால் சுவாரஸ்யம் தந்த project-களுள் “நி.போ.நி.” மும் ஒன்று !

சவால்கள் எல்லா வேளைகளிலும் சீரியஸ் ரகங்களில் இருக்கத்தான் வேண்டுமென்பதில்லை ; ‘கெக்கே-பிக்கே‘ பார்ட்டிகளின் படலங்களிலும் கூட நிறையவே பஸ்கி எடுக்க வேண்டி வரலாமென்பதை மாதந்தோறும் நினைவூட்டிய புண்ணியம் சந்தா C-ஐச் சாரும் ! துவக்கமே “சூ மந்திரி காலி” யின் மிரட்டலிலிருந்து என்றபோது ஜனவரியில் தொடங்கிய மண்டைப் பிறாண்டல் வெகு சொற்பமான மாதங்கள் நீங்கலாகப் பிடிவாதமாய்த் தொடர்ந்தது ! மதியில்லா மந்திரி கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பானது ஒரு நிகரில்லா உச்சம் என்பது என் அபிப்பிராயம் ! வார்த்தைகளில் புகுந்து அவர்கள் ஆடும் சித்து விளையாட்டினை தமிழுக்கும் அப்படியே கொண்டு வருவது கிட்டத்தட்ட நடவாக் காரியம் ! ஆனாலும் இயன்றமட்டிலும் முயற்சிக்காவிடின் இந்தக் குள்ளவாத்தாரின் குறுங்கதைகள் சோபிக்காது என்பதால் சென்றாண்டின் இதே வேளையில் சூ... மந்திரி காலியோடு மல்யுத்தம் போட்டுக் கொண்டிருந்தது நினைவில் நிற்கிறது ! And இந்தாண்டின் டிசம்பரில்  - 2017  பிப்ரவரிக்காக அதே மந்திரியாரோடு இப்போதும் WWF நடத்திக் கொண்டிருப்பதொரு சந்தோஷ coincidence என்பேன் ! 

சிரமங்களின் பொருட்டு மட்டுமல்ல, சுலபங்களின் பொருட்டும் சில நாட்கள் நினைவில் தங்கின ! அதில் குறிப்பிட்டுச் சொல்வதாயின் ரின்டின் கேனின் “பிரியமுடன் ஒரு பிணைக்கைதி”யைச் சொல்லலாம். ஜாலியான அந்த ஞானசூன்யத்துக்குப் பின்னணிக் குரல் கொடுப்பது எப்போதுமே குஷியானதொரு பணி ! And லக்கி லூக்கின் “திருடனும் திருந்துவான்” இதழிலும் ரி.டி.கே. சுற்றி வந்து எனது பணி மேஜையை சில வாரங்களுக்காவது செம ஜாலியாக்கியது நினைவில் நிற்கும் moments ! ஸ்மர்ப்ஃப்களும், சுட்டிப் புயல் பென்னியும் கூட இதே பாணியில் சந்தோஷ மீட்டர்களை உச்சப்படுத்தியவர்கள்- தத்தம் கதைக்களங்களில் வியாபித்துக் கிடந்த அந்த cho sweet factor களின் பொருட்டு ! அதிலும் “ஒரே ஒரு ஊரிலே” ஒரு செம அனுபவம் - எனக்காவது!!

ஆக்ஷன் & adventure கதைகள் சார்ந்த சந்தா A-வில் மாமூலான அடிதடிகளுக்கு மத்தியில் வேறுபட்டு நின்றவர்கள் கேரட் தலை கமான்சேவும், புதிர் நாயகர் ஜேஸன் ப்ரைஸும் தான் என்பேன் ! கமான்சேவின் கதைக்களம் அத்தனை வீரியமானவையல்ல என்றாலும் - ஒரிஜினல்களின் ஸ்கிரிப்ட்டில் ஏகமாய் அழுத்தம் தந்திருப்பார் கதாசிரியர் க்ரெக் ! அதனை ஓரளவுக்குத் தமிழாக்கத்தின் போது பத்திரப்படுத்த முயற்சித்து நான் இழந்த கேசம் எக்கச்சக்கம் என்பேன் ! “அட... இந்தக் கதைக்கு அப்படியென்ன மெனக்கெடல் தேவை ?” என்று மேலோட்டமாய்த் தோன்றலாம் தான் ; but trust me guys - கதைநடைக்கான ஒரிஜினல் வரிகள் அபரிமித ஆழம் கொண்டவை ! 

ஆண்டின் இறுதிகளில் எட்டிப் பார்த்த ஜேஸன் ப்ரைஸ் இன்னுமொரு நினைவில் நிற்கும் performer ! டிசம்பரில் காத்துள்ள பாகம் 2-ன் பொருட்டு ஏகமாய் உழைத்தது வெகு சமீபமாய்த் தான் என்பதால் மட்டுமன்றி - அந்த அசாத்திய மர்ம முடிச்சுகளின் காரணமாகவும் நினைவில் தங்கியுள்ளது ! அடுத்த சில நாட்களில் இந்த ஆல்பத்தைப் படித்து விட்டு நீங்கள் ‘மெர்செல்‘ ஆகப் போவது சர்வ நிச்சயம் !

ஆனால் இந்தாண்டின் நாக்குத் தள்ளச் செய்த நினைவுகளின் உச்சத்தை நல்கியவர் நமது உடைந்த மூக்கார் தான் ! “என் பெயர் டைகர்” ஆல்பத்தின் முதற்கட்ட மொழிபெயர்ப்பு கருணையானந்தம் அவர்களது உபயம் ! SO ‘மட மட‘ வென்று 2 மாத அவகாசத்தினுள் மொழிபெயர்ப்பும் ; தொடர்ந்த சில வாரங்களில் நம்மிடத்தில் டைப்செட்டிங்கும் பூர்த்தியாகி பிப்ரவரியின் மத்தியிலேயே என் மேஜைக்கு ஒரு லோடு பிரிண்ட்-அவுட்கள் வந்து சேர்ந்து விட்டன ! ஆனால் வறண்ட அந்தக் கதைக்களத்தை ஒட்டுமொத்தமாய் ஒரே ஆல்பமாய் உருவாக்குவதற்குள் ஒரு டஜன் ATM வாசல்களில் ‘தேவுடா‘ காத்து நின்ற மாதிரியான அயர்ச்சியை உணர்ந்தேன் என்றால் அது மிகையில்லை ! நிஜ வரலாறை- கற்பனையோடு  கைகோர்க்கச் செய்து ஒரு டாக்குமென்ட்ரி மாதிரியும் ; ஒரு கௌபாய் ஆல்பம் மாதிரியும் தோற்றமளிக்க திரு.ஜிரௌ முயற்சித்திருப்பதை சிலபல வாரங்களுக்கு நான் பேய்முழியோடு தான் அணுகினேன் ! வ்யாட் ஏர்ப் ; கோசைஸ் ; ஓ.கே.கோர்ரல் துப்பாக்கி சம்பவம் என வன்மேற்கின் பல “பெரிய பெயர்கள்” பக்கத்துக்குப் பக்கம் வலம் வருவதால் - கதாசிரியர் வழக்கம் போல கற்பனையில் உதிக்கும் அதிரடிகளை அரங்கேற்ற இயலாச் சூழ்நிலைக் கைதியாக இருப்பது தெளிவாகவே புரிந்தாலும் – இதனை நமது வாசகர்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வார்களோ ? என்ற பயத்தில் ஜிங்ஜர் பீர் குடித்த மந்தி போலத் தான் திரிந்தேன் ! ரொம்பவே காய்ந்து தெரிந்த கதைக்களத்தினில் மொழியாக்கத்திலாவது லேசாகக் காரமூட்ட முயற்சித்து அடுத்த ஒன்றரை மாதங்களைச் செலவிட்டிருப்பேன் - தினமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான பக்கங்களைக் கையில் எடுத்துக் கொண்டு ! “மின்னும் மரண” உச்சத்துக்குப் பின்பாக - “என் பெயர் டைகர்” எவ்விதம் சோபிக்குமோ என்ற பீதி தான் 2016-ன் ‘லக லக லக‘ moment எனக்கு ! ஆனால் பட்டி, டிங்கரிங் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை ஒட்டுமொத்தமாய், ஒரே ஆல்பமாய் வாசிக்க முடிந்த போது அதனை நீங்கள் அழகாய் ரசித்தது இந்தாண்டின் சந்தோஷ ஆச்சர்யத்தின் சிகரம் என்பேன் ! ‘ஐயே... மொக்கை!‘ என்று ஒற்றை வரியில் இதைத்  தூக்கிப் போட்டு விட்டு நகர்ந்திருப்பின் நிச்சயமாய் அதனில் நான் பிழைகண்டிருக்க முடியாது தான் ! ஆனால் மாறி வரும் நமது ரசனைகளுக்கும், முதிர்ச்சியின் தாக்கங்களுக்கும் இந்த இதழின் வெற்றியே பிரமாதமானதொரு சான்று என்பேன் ! Ufffff !!! #அந்த நிம்மதிப் பெருமூச்சு moment 2016 !

முதிர்ச்சியின் தலைப்பிலிருக்கும் போதே இந்தாண்டின் விற்பனையில் கணிசமான தாக்கத்தை உண்டு பண்ணியுள்ள திருவாளர். ஸ்பைடரும் எட்டிப் பார்க்கிறார்- ஒரு டிரேட் மார்க் இளிப்போடு ! “என் பெயர் டைகர்“ கதையை ரசித்த அதே மூச்சில் கடத்தல் குமிழிகளையும், டாக்டர் டக்கரையும் சிலாகித்துள்ளீர்கள் எனும் போது உங்களுக்குள்ள ரசனைகளின் முகங்கள் தான் எத்தனை ? என்று மண்டையை லைட்டாகச் சொரிந்து நிற்கிறேன் ! ஆனால் பந்தியில் பாயாசமும் சுவையே, பாயாவும் சுவையே ; பாஸந்தியும் சுவையே என்பதால் - absolutely no complaints at all ! 

கேக்கின் மேலே ஐசிங்... அதன் மேலொரு செர்ரிப் பழம் என்பது போல - இந்தாண்டில் நமக்கு பிரெஞ்சு அரசிடமிருந்து கிட்டியுள்ள அங்கீகாரம் தான் ஒட்டுமொத்த வருஷத்தையே வேறொரு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றிடுகிறது ! வெகு சமீபமாய் மான்யத் தொகையின் ஒரு முதல் கட்டம் நம்மை வந்து சேர்ந்துள்ளது ! தொகை ஐந்திலக்கத்திலானது என்றாலும் - அதன் பின்னுள்ள அன்பும், ஆதரவுக் கரமும் அசாத்திய ஆற்றல் வாய்ந்தவை என்ற புரிதல் சுட்டிப் புயல் பென்னியைப் போல ஜிங்-ஜிங்கென்று LIC கட்டிடங்களைத் தாண்டித் தாவிடும் சக்தியை எங்களுக்கு  நல்கியது போல உணர்கிறோம் ! அந்த சந்தோஷ உச்ச moment 2016 !! 

அது மாத்திரமன்றி - திடீர் மறுபதிப்புகளாய் ‘முத்து மினி காமிக்ஸ்‘ தலைகாட்டியதும் ; அதைச் சார்ந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உங்கள் சார்பில் செய்திட்ட ஐந்திலக்க நன்கொடையும் மனநிறைவை முழுமையாக்கிய காரணிகள் ! (கருப்பு மார்க்கெட் / க்ரே மார்க்கெட் என்ற காரசாரங்கள் ஓடிக் கொண்டிருந்த வேளைதனில் - "அந்தப் பணத்தை செலுத்தியாச்சா ? " என்று ஆவேசக் குரல் கொடுத்து வந்த "உயிர்ப்பிக்கும் நண்பர்களுக்க்கும் சேர்த்தே இந்தச் சேதி  : "கவலையே வேண்டாம்  ; உரிய வேளையில், தொகை உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது !)
 • சாதித்தோமா? சொதப்பினோமா?
 • கதைத் தேர்வில் வெற்றி கண்டோமா ? மண்ணைக் கவ்வினோமா?
 • மொக்கைகள் கோட்டா கட்டுக்குள் இருந்ததா - 2016-ல் ? அல்லது ஜாஸ்தி தானா ? 
என்ற தர்க்கங்களுக்கெல்லாம் அவரவரிடம் விதவிதமான அபிப்பிராயங்கள் இருந்திடலாம் தான் ! ஆனால் இயன்றதைச் செய்தோம் ; சில பல புன்னகைகளை விதைத்தோம் ; எங்கள் முகங்களிலும் அந்தப் புன்னகை ஆண்டிறுதியில் நிலைத்திருக்கிறது என்ற சன்னமான ஆத்மதிருப்தியே போதும் இந்தாண்டை சந்தோஷமாய் நினைவுகூர்ந்திட ! இதன் ஒவ்வொரு நொடியிலும் எங்களோடு பயணித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த மனநிறைவில் பங்குண்டு என்பதால் ஒரு MEGA Thanks all !! இதே மகிழ்வு ஒவ்வொரு டிசம்பரிலும் நமதாகிடும் வரம் கிட்டின் - all will be well ! மீண்டும் சந்திப்போம் all !

P.S : பின்குறிப்பாய் இதனை நான் எழுதுவது - மறந்து போய் விட்டு அப்புறமாய் நினைவு கூர்ந்தல்ல ! பத்தோடு பதினொன்றாய் பதிவின் உள்ளே புதைந்து போய் விடக் கூடாதே  என்ற ஆசையில் have reserved the best for the last !

ஆகஸ்டில், ஈரோட்டுப் புத்தக விழாவின் போது அரங்கேறிய வாசகர் சந்திப்பும், அந்த அதகள சந்தோஷப் பரிமாற்றமும் இந்த வருடத்தை ஒரு ‘மந்திரப் பொழுதாக‘ உருமாற்றியதென்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது ! நிறையமுறை நாம் சந்தித்துள்ளோம் தான் ; ஆனால் நிறையப் பேரை இத்தனை நிறைய நேரம் சந்திக்க முடிந்தது ஒரு அசாத்திய அனுபவம் ! அதை சாத்தியமாக்கிய சேந்தம்பட்டி நண்பர்கள் குழுவுக்கும், உள்நாடு ; வெளிநாடு ; உள்மாநிலம் ; வெளிமாநிலம் என தூரங்களைப் பார்த்திடாது பயணித்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் எங்களது கரம் கூப்பிய நன்றிகள் ! End of the day - ஒரு வாசிப்பு அனுபவம் என்பதோ ; ஒரு பிரமாதமான காமிக்ஸ்  வெளியீடு என்பதோ ; சேகரிப்பு என்பதோ ஏதேனுமொரு விலை கொடுத்து வாங்கிடக் கூடியதொரு சமாச்சாரமே ! ஆனால் விலைகளுக்கு அப்பால் நிற்கும் இது போன்ற நட்புகளும், நேசங்களும் - சாகாவரம் பெற்றவையல்லவா ? Take a bow people !!! You have  created an almost perfect year !!

இதோ - டிசம்பரில் எஞ்சி நிற்கும் இதழின் அட்டைப்படப் preview !  நடுவினில் உள்ள நம்மவர் மாத்திரமே - நமது ஓவியரின் தூரிகை தயாரிப்பு ; பாக்கி எல்லாமே நமது டிசைனரின் கைவண்ணம் !! அழகாய் அமைந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ! உங்களுக்கு ? Bye all !! See you around !!