Powered By Blogger

Tuesday, May 29, 2012

ஒரு காமிக்ஸ் எக்ஸ்பிரசில் ஜன்னலோரம் ....!


நண்பர்களே,

புது முயற்சிகளோடு நமக்குத் துவங்கிட்ட 2012 -ன் மையப் பகுதியினை நெருங்கிடும் நேரமிது...! உங்களின் உற்சாகம் தந்திடும் உத்வேகத்துடன் 'தடதட' வென நமது காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் உருண்டோடிச் செல்கின்றது ! பயணத்தின் நடுவே நாம் கடந்து செல்லக் காத்திருக்கும் "ஸ்டேஷன்களை" ஒரு ஜன்னலோரப் பார்வையாய் சற்றே ரசித்திடுவோமா ? 

ரிப்போர்டர் ஜானியின் கிரைம் த்ரில்லர் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை ! அவற்றிற்கு வண்ணம் எனும் வீரியத்தை சேர்த்திடும் போது - அட்டகாசமானதொரு end -product கிட்டுவதை சீக்கிரமே நீங்களும் ரசிக்கப் போகிறீர்கள் ! "பனியில் ஒரு பரலோகம்"   அட்டகாசமாய் முழு வண்ணத்தில் தயாராகி உள்ளது ! இதோ -சில பக்கங்கள் உங்கள் பார்வைக்காக !! 
பனியில் ஒரு பரலோகம்- 46 பக்கங்கள்...முழுநீள..முழு வண்ண சாகசம் ! 



ரிப்போர்டர் ஜானியுடன் கைகோர்க்கக் காத்திருப்பது அநேகமாக கேப்டன் டைகரின் "இளமையில் கொல்" தொடரின் கதை # 4 !  கேப்டன் டைகரின் சாகசங்களை வரிசைக்கிரமமாய் வெளியிட எண்ணியுள்ளேன்...so தொடர்ச்சியாய் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை நிறைவு செய்திட்டு அதன் பின்னர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இதர டைகர் கதைகளைக் கவனித்திடுவதாய் உத்தேசம் !
                                                            "மரண நகரம் மிசூரி "                                                            

46 பக்கங்கள்..முழு வண்ணத்தில்..முதல் முறையாய் கேப்டன் டைகர் !
'இந்தப் பூனையும் பால் குடிக்குமா ?' என்று எண்ணச் செய்திடும் தோற்றத்தோடு தன்னை அறிமுகம் செய்து கொண்ட நமது புது நண்பரான லார்கோ வின்ச் - 'இந்தப் பூனை பாலும் குடிக்கும் ; குரல்வளையையும் கடிக்கும் ' என்று நிரூபித்திடும் விதத்தில் அடுத்த அதிரடிக்குத் தயாராகி வருகிறார் ! " கான்க்ரீட் கானகம் " லார்கோவின் கதை வரிசையில் எண் 3 ! 

"கான்க்ரீட் கானகம் "
கதை எண் 3 & 4 இணைந்தே ஒரு முழுநீள சாகசம் என்பதால் இவற்றைப் பிரிக்கும் விஷப்பரீட்சைகள் ஏதுமின்றி..ஒரே இதழில் பாகம் 3 & 4 வந்திடும். "சுறாவோடு சடுகுடு" - லார்கோவின் ஒரு action masterpiece ! 

"சுறாவோடு சடுகுடு"
தொடர்ந்து இன்னுமொரு கேப்டன்;இன்னுமொரு பரட்டைத்தலை..இன்னுமொரு அழுக்குக் கும்பல் ! ஆனால் இவர்களும் நம் அன்பையும் ; அபிமானத்தையும் சம்பாதித்ததொரு சாகசக் கும்பல் ! "பரலோகப் பாதை பச்சை" - நம் அபிமான கேப்டன் பிரின்சின் முழுவண்ண முழு நீள சாகசம் ! தற்சமயம் பிரின்ஸ் கதை வரிசையில் நாம் பிரசுரிக்காது உள்ள ஒரே புது சாகசம் இது மாத்திரமே ! So - இனி புதிதாய் பிரின்ஸ் கதைகள் உருவாக்கப்படாத பட்சத்தில், இதுவே பிரின்சின் farewell !!  

"பரலோகப் பாதை பச்சை"
நண்பர் புனித சாத்தானின் உபயத்தில் "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" என்ற hep நாமகரணத்துடன் வரவிருக்கும் நம் ஆண்டுமலரில் தூள் கிளப்பிட  நமது லக்கி லூக்கும் தயார் ஆகி வருகின்றார் !  "பனியில் ஒரு கண்ணாமூச்சி" + "ஒரு வானவில்லைத் தேடி " - இரு classic லக்கி லூக் சாகசங்கள் ! 


ஆண்டுமலரைத் தொடர்ந்து நம் "அந்தக் காலத்து ஜாம்பவான்கள்" - லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் அதிரடி செய்யவிருக்கிறார்கள் ! இங்கே உங்களில் பெரும்பான்மையினர் சூப்பர் ஹீரோக்களுக்கு செம ஆதரவாய் குரல் கொடுத்தது வீண் போகவில்லை ! So திட்டமிட்டபடியே ரூபாய் 100 விலையில் முழுக்க முழுக்க black & white -ல் மாயாவி ; ஸ்பைடர் & ஆர்ச்சி களம் இறங்குவார்கள் !!



இவை தவிர நமது black & white - பத்து ரூபாய் இதழ்களின் எஞ்சியுள்ள (புது) வரவுகள் இதோ :



இவை தவிர புது ஹீரோவான டிடெக்டிவ் ஜெரோம் துப்பறியும் "சிவப்புக் கன்னி மர்மம் " & தற்செயலாய் ஒரு தற்கொலை" தலா ரூபாய் 10  விலையில் வரவிருக்கின்றன !  இவ்வாண்டின் இறுதியினில் இன்னமும் நிறையவே புதுக் கதைகள்..புது அறிமுகங்கள் காத்துள்ளன ! உங்களின் அன்பான ஆதரவு தொடர்ந்திடும் வரை, வானமே நமக்கு எல்லை ! Fingers crossed !

Saturday, May 19, 2012

திகில் இல்லா திகில் !


நண்பர்களே,

கோடைகள் பல தாண்டிய பின்னரும், நினைவில் 'பளிச்' என்று நின்றிடும் இன்னுமொரு இதழை நினைவு கூர்ந்திடும் முயற்சியே இந்தப் புதுப் பதிவு ! 

26 ஆண்டுகளுக்கு முன் - இதே மே மாதம் - நமது திகில் காமிக்ஸில் வெளிவந்திட்ட "பனிமலை பூதம்" உங்களில் எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ தெரியவில்லை...! ஆனால் இன்றைக்கும் எனது "பிரியமான பிரதிகள்" பட்டியலில் ஒரு பிரதான இடத்தில அமர்ந்திருக்கும் இதழ் இது ! 

திகில் இதழ் நம்பர் 5
வித்தியாசமான முயற்சிகளாய் அமைந்திட வேண்டுமென்ற முனைப்புடன் முதல் 3 இதழ்களையும் வெகு சிரத்தையோடு..சின்னச்சின்ன திகில் சிறுகதைகள்...ஒரு முழு நீள ஹாரர் கதை ; துணுக்குச் செய்திகள் என்று உருவாக்கி இருந்தோம். ஆனால் அன்றைய சமயம், 'ஒரே ஒரு முழுநீளக் கதை' என்றதொரு ரசனையைத் தாண்டி நாம் பிரவேசித்திருக்கா தருணம் என்பதால் இந்தப் புதிய முயற்சிகள் அசகாயத் தோல்விகளை சந்தித்தன ! முதல் இதழ் ஒரு curiosity -ல் முழுவதும் விற்பனையாகி விட்டது ; ஆனால் இதழ் 2 & 3 வாங்கிய தர்மஅடி இன்றைக்கும் நினைவில் நிற்கும் சமாச்சாரம் !  இன்றும் நம் வாசகராய் இருந்திட்டு வரும் ஒரு நண்பர் - துண்டும் துக்கடாவுமாய் கதைகளை வெளியிடுவது "பிச்சைக்காரன் எடுத்த வாந்தி" போல் இருப்பதாகக் கூட அபிப்ராயப்பட்டிருந்தார் - அன்று வந்திட்டதொரு போஸ்ட் கார்டு விமர்சனத்தில்! விற்பனையாளர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்திட..எனக்கோ எங்கே ஓடி ஒளிந்திடவென்று தெரியாத இக்கட்டு ! 'இது தேறுமா..சொதப்புமா ?' என்ற சந்தேகம் துளியும் இல்லாது - surefire  வெற்றி என்று நான் நினைத்திட்டதொரு ப்ராஜெக்ட் இத்தனை கேவலமாய் உதை வாங்கிடுவதைப் பார்க்கும் திராணி என்னுள் துளியும் இருந்திடவில்லை ! எல்லோரும் ஒருமுகமாய் சொன்ன சங்கதிகள் இவை தான் :

1 .பிட் பிட்டாய் உள்ள கதைகள் வேலைக்கு ஆகாது !    
2.பெரிய சைஸ் வேண்டாம்!!(பாக்கெட் சைஸ் மோகம் நம்மை ஆட்டிப்படைத்த வேளை அது )! 
3.விலை மூன்று ரூபாய் என்பது ரொம்ப ஜாஸ்தி !! 

So "Operation அந்தர்பல்டி" துவங்கிட்டது - முழு மூச்சாய் ! இதழ் நம்பர் நான்கில் மேற்படிக் குறைகள் அனைத்தையுமே நிவர்த்தி செய்ய முனைந்திருந்தேன் ! ஒரே முழுநீளக் கதையாக :பிசாசுக் குரங்கு" வெளியானது ; பெரிய சைஸ்-க்கு கல்தா கொடுத்து விட்டு புதிதாய்..ஒரு ரெண்டும்கெட்டான் சைஸ் -க்கு இறங்கி வந்திருந்தோம் ; ரூபாய் 2 .25 விலையில் !! அந்த வரிசையில் வந்திட்ட மறு இதழே - இந்தப் பதிவின் நாயகம் ! 

பெயரில் மட்டுமே (நிஜத்) திகிலைக் கொண்டிருந்த இந்த இதழின் முதற்பக்கமே...அடுத்து வரவிருந்த இரத்தப் படலத்தின் விளம்பரம் ! நண்பர் XIII பணக்குவியலை உற்றுப் பார்த்து நிற்கும் பரிச்சயமான சித்திரம் அன்றே ஒருவித எதிர்பார்ப்பை..வினாக்களை உண்டு பண்ணியது ! ஆனால் இத்தனை நீளமானதொரு தொடர் என்பதோ ; இத்தனை impact தந்திடப் போகும் கதைதொடர் என்பதையோ அன்று நான் துளியும் அறிந்திருக்கவில்லை !

"பனிமலை பூதம்" ஒரு சராசரி ஆக்க்ஷன் கதையே ."ஆஹா.ஒஹோ' வென்று சிலாகிக்கும் சங்கதிகள் அதில் அதிகம் கிடையாதென்ற போதிலும் - சுவாரஸ்யமான கதையே ! Fleetway நிறுவனத்தின் Action Library என்றதொரு தொடரிலிருந்து வந்திட்ட கதை இது ! இதோ அதன் முதல் பக்கத்தின் (சுமாரான) எனது ஸ்கேன் !

அழகாய் பாக்கெட் சைசில் வெளியிட்டிட வசதியான format -ல் இருந்திட்ட கதையை புதிய சைசுக்கு ஏற்றபடி அமைத்திட 'கச்சா முச்சா' வென எங்களது லைன் டிராயிங் ஆர்டிஸ்ட்கள் முயற்சித்திருந்தனர் !

18 பக்கங்களில் நிறைவுறும் இந்தக்கதையின் கீழே சின்னதொரு பெட்டிக்குள் பிரசுரமாகி இருந்த அன்றைய "வாசகர் கடிதங்களை" பாருங்களேன்!போஸ்ட் கார்ட்களில் வந்திடும் அன்றைய விமர்சனங்கள் ஆழமாய் இருந்திடாத போதிலும் அழகாய் இருப்பது வழக்கம் ! நம் போஸ்ட்கார்ட் விமர்சகர்களில் எவரேனும் இங்கே இருக்கிறீர்களா என்று தெரிந்திட ஆவல் எனக்கு - கையைக் கொஞ்சம் தூக்குங்களேன் சார்(s) !

சராசரியாய் ஒவ்வொரு இதழுக்கும் குறைந்த பட்சம் 50 கடிதங்கள் வந்திடும் ; அவற்றில் எதை வெளியிடுவது என்று தேர்ந்தெடுப்பது ஒரு சுவாரஸ்யமான பணியாக இருக்கும் ! "இவர் பெயர் ஏற்கனவே போன மாசம் வந்திருச்சு...திரும்பவும் வேண்டாம் " என்று அச்சுக் கோர்க்கும் எங்களது கம்பாசிடர் சொல்லிட்டால் அந்த விமர்சனம் reject ! So தபால் போட்டுவிட்டு ஆவலாய் இதழைப் பார்த்து தம் பெயரைக் காணாது அன்று வருந்திய நண்பர்கள் இங்கே இருப்பின் -  அதற்கான பழி முழுவதும் என்மேல் மாத்திரம் கிடையாது என்பதை சொல்லி வைக்கிறேன் !

தொடர்ந்திட்டது திகில் சிறுகதை "பிசாசு நடனம்" ! Fleetway  நிறுவனத்தின் "Misty " வார இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்திருந்த சிறுகதை இது ! அட்டகாசமான அதன் opening shot அட்டைபடத்திற்குப் பிரமாதமாய் அமைந்திடும் என்று நினைத்திருந்தேன் - எதிர்பார்த்தபடியே நம் ஓவியர் பின்னி பெடல் எடுத்திருந்தார் ! இங்கே வெளியிட்டுள்ள அட்டைப்படத்தின் scanning  தரம் வெகு சுமார் என்பதால் அவரது திறமைக்கு இது முழு நியாயம் செய்திடவில்லை என்பதே மெய் ! பின்னட்டையில் லயனின் கோடை மலர் விளம்பரம் வெளியிட்டிருந்தேன் !  இது பிரபல ஆங்கில எழுத்தாளரான Alistair Maclean எழுதிட்ட "ICE STATION ZEBRA " என்ற சூப்பர் ஹிட் நாவலின் அட்டைப்படத்தின் உல்டா !

நமது ஓவியரின் தயாரிப்பு இது...
அசல் 

அதைத் தொடர்ந்தது "விசித்திர உலகம் இது" என்றதொரு நிஜ சம்பவ மர்மங்கள் பற்றியதொரு தொடர்......!

"மெல்லிசையா.மரணத்தின் இசையா?" என்றதொரு கட்டுரையுடன் ! இதனை எழுதி இருந்த "டாக்டர் லோகநாத்" வேறு யாருமல்ல-எனது தந்தையே ! கிறிஸ்துமஸ் அன்று பிறந்த அவருக்கு எங்கள் பாட்டி "லோகநாதன்" என்று ஒரு பெயரும் வைத்திருந்தாராம் ! அந்தப் பெயரில் (கொஞ்ச காலமே வந்திட்ட) இந்தத் தொடரை எழுதியது என் தந்தையே ! 


இதழின் கடைசிக் கதையாக வந்திருந்ததும் கூட..இன்னுமொரு Fleetway தயாரிப்பே ! ஏஜெண்ட் ஜான் ஸ்டீல் துப்பறியும் "நாளை உனது நாள்" என்ற முழு நீளத் த்ரில்லர் - 1960 களின் ஒரு தயாரிப்பு.எனக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோக்களில் ஜான் ஸ்டீலும் ஒருவர் ; and  இந்தக் கதையின் யதார்த்தம் நான் மிகவும் ரசித்த விஷயம் ! 21 பக்கங்களில்...பாரிஸ் நகரில் நடந்தேறும் இந்தத் த்ரில்லரும் கூட பாக்கெட் சைஸ்-க்கு ஏற்ற வடிவத்தில் இருந்தது. பிரயத்தனப்பட்டு பெரிய சைசுக்கு மாற்றி இருந்தோம்.



இந்த இதழில் எனக்குப் பிடிக்காது போன சங்கதி...உள் அட்டைகளில் எதுவுமே அச்சிடாமல் வெள்ளையாக விட்டுவிட்டது ! அன்றைய சமயம் இதழின் விலையினை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு மலிவான...ஆனால் வார்னிஷ் போட்டிடும் போது நன்றாகத் தோன்றிடும் Glazed  Newsprint எனும் காகிதத்தைப் பயன்படுத்தி வந்தோம். மெலிதாய் இருந்திடும் இந்தப் பேப்பரில் அச்சிடுவது என்பது மண்டை காயும் சமாச்சாரம்! So முன்பக்கம் அச்சிடுவதற்குள் பிராணனின் பாதி போயே போய் இருக்கும் ! இந்த அழகில் மறு பக்கம் வேறு அச்சிடவா ? என்ற கடுப்பின் பிரதிபலிப்பே இந்த வெள்ளைப் பக்கங்கள் !

இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது...எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ! இந்த இதழ் வெளி வந்த போது பூமியினில் காலடியே வைத்திருக்காத நண்பர்களும் இங்கே இருக்கத் தான் வேண்டும் !! அவர்களுக்கும் இந்த (புராதன)  இதழ் பற்றிய பதிவு உற்சாகத்தைத் தந்திட்டா ல்  எனக்கு சந்தோஷமே !

அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு (புதிய) பதிவோடு சந்திக்கிறேன் ! Adios till then guys.....!



Sunday, May 13, 2012

ஒரு காமிக்ஸ் ஞாயிறு ......!

நண்பர்களே,

திரும்பிய பக்கமெல்லாம் வசீகரமாய்ச் சிரிக்கும் Tintin மண்ணின் மைந்தனாய்ப் பாவிக்கப்படும் பெல்ஜியத் தலைநகரான Bruxelles-லிருந்து இந்தப் பதிவினை எழுதுகிறேன் !

Tintin & Snowy
 காமிக்ஸ்களில் ; சாக்லட்களில் ; தோரணங்களில் ; ரயில்நிலையத்தின் உட்சுவர்களில் என்று எங்கே சென்றாலும் துரத்தும் டின்டின் இன்னமும் நம் தமிழுக்கு வந்திடும் வேளை வந்திடவில்லை  - ஆனால் வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கிட தளராது நடை பயின்ற விக்ரமாதித்தன் போல் நானும் தம் கட்டி முயற்சித்துக் கொண்டே இருப்பேன். வண்ணம் ; சர்வதேசத் தரம் ; 'கெத்தான' விலை என்று டின்டின் பதிப்பகத்தினர் எதிர்பார்க்கும் சங்கதிகளில் முக்காலே மூன்று வீசம் இப்போது நம் அருகாமையில் ! விற்பனை எண்ணிக்கை மட்டும் இன்னும் சற்றே முன்னேறி விடும் நாள் டின்டின் நம்மோடு தமிழில் கை குலுக்கிடும் நாளாக இருந்திடும் !

நான் அமர்ந்திருக்கும் இன்டர்நெட் சென்டரிலிருந்து பார்த்தால் Tintin மண்டையினை மேலே தாங்கிப் பிடிக்கும் Lombard காமிக்ஸ்   நிறுவனத்தின் அலுவலகம் தெரிகிறது !

காமிக்ஸ் தலைநகரம் !
டின்டின் வெளியிடும் நிறுவனத்திற்கும் Lombard நிறுவனத்திற்கும் தொடர்பில்லை எனினும், "டின்டின் " என்ற பெயரில் எக்கச்சக்க ஆண்டுகளாய் ஒரு அற்புத காமிக்ஸ் இதழ் நடத்தி வந்த நிறுவனம் என்பதால் டின்டின் & snowy இவர்களது அலுவலகக் கூரையில் ஒய்யாரமாய் ஊஞ்சலாடுகிறார்கள் ! 

பிரெஞ்சு மொழியில் காமிக்ஸ் இதழ்
 எட்டு கழுதை வயசாகும் சங்கதியினை இது போன்ற சந்தர்ப்பங்களே நினைவுக்குக் கொண்டு வருகின்றன ! இதே அலுவலகத்திற்கு தம்மாத்துண்டு மீசையோடு ; கையில் பர்மா பஜார் பிரீப் கேஸ் சகிதம் ,  கோட் தைக்கப் பிரியப்பட்டதொரு மவுண்ட் ரோடு டைலரின் பரீட்சார்த்த முயற்சியினை அணிந்து நான் வந்தது - 27 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதை தலை சொல்லிடும் போது, உள்ளம் வேண்டாவெறுப்பாய்  ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ! ஆனால் காலம் புரட்டிப் போட முடியா ஒரே சங்கதி நம் காமிக்ஸ் காதல் மட்டுமே என்பதை என் கையில் உள்ள பையும்..அதனுள்ளே உள்ள காமிக்ஸ்களும் உணர்த்திடும் போது மெய்யான சந்தோஷம் என்னுள் !

லார்கோ வின்ச் இதழ்கள் சந்தாக்களுக்கு முமுமையாக அனுப்பியாகி விட்டது என்று அலுவலகத்தில் சனிக்கிழமை கேட்டுத் தெரிந்து கொண்டேன். கூரியர் & பதிவுத் தபாலில் மட்டுமே இதழ்கள் அனைத்தும் அனுப்பப்பட்டுள்ளன என்பதால் transit -ல்  தவறிட வாய்ப்புகள் குறைவே.இது வரை வந்துள்ள விமர்சனங்கள் ஒரு வழிகாட்டியாகக் கருதிடுவதென்றால்  லார்கோ நம்மிடையே அதிரடியான impact ஏற்படுத்திவிட்டார் என்பது சந்தேகமில்லா நிஜம் ! வேற்று மொழியில் சக்கை போடு போட்டதொரு திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போது - வெற்றிக்கு ஒரு பாதி உத்திரவாதம் உண்டு என்பது போல் - ஆங்கிலத்தில் Cinebooks நம் லார்கோவை அதிரடி செய்ய அனுமதித்து 'இவர் நிச்சயம் தூள் கிளப்பும் ஆசாமி ' என்ற தைரியத்தை நிறையவே கொடுத்திருந்தார்கள் எங்களுக்கு! So தயக்கங்களின்றி லார்கோவை களம் இறக்கச் செய்திடுவதற்கு Cinebooks ஆங்கில இதழ்களும் ஒரு பிரதான காரணமே ! அவர்களுக்கு நம் நன்றிகள் !

மாறுபட்ட  விலைகள்  பற்றி மாறுபட்ட பல சிந்தனைகள் என்ற போதிலும் பெரும்பான்மையினர் இதே தரத்தைத் தொடர்ந்திடுவதில் தான் நாட்டம் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது !  என்னைப் பொறுத்த வரை தரத்தில் compromise செய்வதாகத் துளியும் எண்ணமில்லை. நான் இன்னமும் அசை போட்டிடும் ஒரே விஷயம் : 

  • ரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ்சம் கருப்பு வெள்ளை என்ற இதே பாணியைத் தொடருவதா ? 
  • அல்லது மாதம் ஒரு 50 ரூபாய் இதழ் (1 கதை வண்ணத்தில் + சிறிது black & white) 
 என்று streamline பண்ணிடுவதா என்பது மட்டுமே ! கைவசம் உள்ள 4 கருப்பு வெள்ளை இதழ்கள் 10 ரூபாய் விலையில் வந்திடும் (புதிய வெளியீடுகளின்) கடைசிப் பிரசுரங்கள் ! இனி எப்போதாவது மறுபதிப்பு செய்திடும் சமயங்களில் மட்டுமே இந்த  விலை ; இந்த format பார்த்திட இயலும்.So, let's savour them for now guys !  

அப்புறம் இன்னொரு அதிரடி சேதியும் கூட .... !

லார்கோவின் வண்ண வானவேடிக்கைகளைப் பார்த்த கையோடு    அடுத்து நமது முத்தான மூவரை சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் ; கருப்பு வெள்ளைப் பாணியில் ; புராதனக் கதைகளோடு கொணர்வதில் எனக்கே கொஞ்சம் தயக்கமாய் உள்ளது ! (கனவுகளின் காதலர் 'அட்ராசக்கை' ; 'அட்ராசக்கை' என்று உற்சாகத்தில் குரல் எழுப்புவது உங்களுக்கும் கேட்டுடுச்சா :-)  ) 



முன்னரைப் போல் கடைகளில் நம் இதழ்கள் விற்பனை ஆகிடும் பட்சத்தில் - பிடிக்காததொரு இதழ் வெளியாகும் சமயம் அதனை சும்மா ignore செய்து விட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம் ! வாங்கிட வேண்டுமென்ற கட்டாயங்கள் நிச்சயம் இருந்திருக்காது ! ஆனால் இப்போதோ நாம் நேரடி விற்பனை முறையில் இருக்கிறோம் என்பதால் - பிடிக்காத இதழாய் இருக்கும் பட்சத்திலும் கூட  உங்கள் 100 ரூபாய் பிளஸ் கூரியர் பணம் கோவிந்தாவாகிவிட வாய்ப்புள்ளது. So கொஞ்சமும் பிசிறின்றி ; உங்கள் பணத்திற்கான தரத்தை வழங்க வேண்டுமென்ற பொறுப்பு எங்களுக்கு அதிகமாகி உள்ளது ! சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் தனி இதழாக வெளியிடுவதா...அல்லது அவ்வப்போது வந்திடும் வண்ணக் கதைகளோடு மாயாவி ;ஆர்ச்சி ஸ்பைடர் கதைகளை ஒன்றொன்றாய் ஒட்டுச் சேர்த்திடலாமா?KK-ன் கருத்து இங்கே ஏற்கனவே பதிவாகி விட்டதென்பதால்,அவர் நீங்கலாய் மற்ற நண்பர்கள் அனைவரும் கொஞ்சம் தெளிவு தந்திட உதவிடுங்களேன் !  அதற்காக சூப்பர் ஹீரோ கதைகளை முழு வண்ணத்தில் போடலாமே என்ற suggestions வேண்டாமே ப்ளீஸ் ? நடைமுறைக்குச் சாத்தியப்படா விஷயம் அது !

அப்புறம் லார்கோவின் அறிமுகத்தைத் தொடர்ந்து புதிதாய் கொஞ்சம் கார்ட்டூன் கதைத் தொடர்களையும் அறிமுகப்படுதினாலென்ன என்று நண்பர் Ramesh கேள்வி  எழுப்பி இருந்தார்... நிஜமான ஆதங்கமே !  என்னைப் பொறுத்த வரை கார்ட்டூன் தொடர்களில் ஆழம் இல்லாது போகும் பட்சத்தில் அவற்றை அதிகம் ரசித்திட இயலாது. பெயரளவில் மாத்திரம் கார்டூனாக உள்ள தொடர்கள் நிறையவே உள்ளன - ஏன் லக்கி லூக் கதைகளிலேயே ரொம்பவும் கவனமாய்க் கதைகளைத் தேர்வு செய்யாவிடின் சொதப்பலான ஒன்றிரண்டு வந்து சேரும் அபாயம் உண்டு. Cinebooks ஆங்கிலத்தில் வெளியிட்ட லக்கி லூக் கதைத் தேர்வுகள் ரொம்பவே சுமார் என்பது எனது அபிப்ராயம். So நிஜமாய்த் தரமான  கார்ட்டூன் தொடர் கண்ணில் படும் சமயம் நிச்சயம் அவற்றை மிஸ் பண்ணிட மாட்டேன் !

அது சரி... ஆங்கிலத்தில் அசாத்திய வெற்றி பெற்ற ASTERIX & OBELIX கார்ட்டூன்  தொடர்களைப் பற்றி உங்களில் எவருமே அதிகமாய் கேள்வி எழுப்பியதில்லியே   ? எனது சின்ன வயது favorites -களில் இத்தொடருக்குப் பெரியதொரு அபிமானம் உண்டு !

ASTERIX & OBELIX
வயிறு பசியில் உறுமும் சமயம் துவங்கி விட்டதால் இப்போதைக்கு விடை பெறுகிறேன் guys  ! IPL மேட்ச்கள் ..மின்வெட்டு ... அக்னி நட்சத்திரப் புழுக்கம் எண்ணெய் வழியும் முகம் என்பதெல்லாம் வேற்று மண்டலத்து சங்கதிகளாய்  இந்த தேசங்களில் புலப்படும் போதிலும் ஊர் திரும்பும் நாளுக்குக் காத்திருக்கிறேன் ! Can't wait to be back home...இன்னமும் லார்கோவை கூட நான் பார்த்திடவில்லையே !
 

Thursday, May 10, 2012

சிறகடிக்கும் சிந்தனைகள்..


நண்பர்களே,

சின்னதாய் ஒரு எச்சரிக்கை ! புதிதாய் ஏதேனும் அறிவிப்பைத் தாங்கியோ....பழையதொரு இதழை அசைபோட்டோ நான் எழுதிடும் வழக்கமான பக்கமல்ல இது ! சமீபமாய் என்னை "விடாது கறுப்பு" பாணியில் துரத்தி வரும் மொபைல் இன்டர்நெட்டின் படுத்தல்களின் புண்ணியத்தால் இங்கே அதிகம் தலை காட்ட முடியாது போயிட்டது ! So இடைப்பட்ட நாட்களில் எங்கள் பக்கம் நடந்தேறிய சங்கதிகள்...என் மண்டைக்குள் ஓடிய சிந்தனைகள்...இங்கே நண்பர்கள் பலரும் எழுதி வரும் பின்னூட்டங்களுக்கு எனது பொதுவான பதில்கள் என்று ஒரு கலவையானதொரு பதிவு இது !எதிர்பார்ப்புகளின்றிப் படித்தால் நிச்சயம் மொக்கையாகத் தோன்றாதென்று நம்ம்ம்பி எழுதுகிறேன்! Fingers crossed ! 

"வசந்த காலத்து ஐரோப்பாவின் அழகே அழகு" என்று நான் ஆரம்பித்தால் 'இது ஏதோ பயணக் கட்டுரைடா சாமி'  என்று உங்களில் முக்கால்வாசிப் பேர் குதிங்கால் பிடறியில் அடிக்க ஜூட் விடுவீர்கள் என்பது நான் அறிந்ததே ! இருப்பினும் அந்த தேய்ந்து போன டயலாகை கைவிட்டிட இயலா சூழ்நிலை.நான்கு ஆண்டுகளுக்கொரு முறை ஜெர்மனியில் அச்சுத் தொழிலின் தலைசிறந்த நிறுவனங்கள் தத்தம் புதுக் கண்டுபிடிப்புகளை , நவீனங்களை showcase செய்திட DRUPA என்றதொரு பிரம்மாண்டமான show நடத்திடுவது உண்டு. 


Dusseldorf நகரில் தற்சமயம் நடந்து வரும் இந்த ராட்சசக் கண்காட்சியினை பார்வையிடச் சென்ற மக்கள் வெள்ளத்தில் 'பராக்குப்' பார்த்திடச் சென்ற நானும் ஐக்கியம் ! Dusseldorf நகரில் தற்சமயம் ரூம் எடுத்துத் தங்கிட வேண்டுமெனில் சொத்து பத்துக்களை விற்றுக் கொண்டு வந்தால் தான் ஆயிற்று என்பதால்..அருகாமையில் உள்ள Cologne நகரில் ஜாகை எனக்கு!நகரின் மையத்தில் உள்ள அற்புதமான தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து, மாலை ஒன்பது மணி வரை இதமாய் முகம் காட்டும் சூரிய வெளிச்சத்தை ரசித்துக் கொண்டே எனது லேப்டாப்பில் இந்தப் பதிவை 'லொட்டு லொட்டென' தட்டிக் கொடுத்து தயாரிக்க முனைந்து கொண்டிருக்கிறேன்!

Cologne Dome
"முத்து காமிக்ஸ் Surprise ஸ்பெஷல்" கிடைக்கப் பெற்ற நண்பர்கள் அட்டகாசமாய் review செய்து வருவதை படித்திடும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது ! லார்கோ வின்ச் கதைகள் எத்தகைய சவாலாய் அமைந்திட்டது என்பதைப் பற்றி "காமிக்ஸ் டைம் "  பகுதியில் எழுதி இருந்தேன்...இங்கேயும் அது பற்றிப் பேசி இருந்தோம்!கதாசிரியர் Van Hamme தன் மனதில் உருவாக்கிட்ட அந்த லார்கோவை துளியும் சேதமில்லாது உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திட வேண்டுமென்ற வேட்கை மட்டுமிலாது, பிரெஞ்சில்,ஆங்கிலத்தில் இக்கதைகளைப் படித்துள்ள நம் நண்பர்கள், தமிழ் version படித்திடும் போது துளியும் எமாற்றமடையக் கூடாதென்ற அவா என்னுள்.இன்னும் பரவலாய் விமர்சனங்கள் வந்த பின்னரே எங்கள் முயற்சிகளுக்கு மதிப்பெண் போட்டிட முடியுமென நினைக்கிறன் !இங்கே ஒரு கொசுறு செய்தியும் கூட...! நான் சிவகாசியிலிருந்து கிளம்பியது 10 நாட்களுக்கு முன்னர் என்பதால் உள் இன்னர் பக்கங்கள் அச்சான போது மட்டுமே பார்க்க முடிந்தது. Complete ஆன முழு இதழை நான் இன்னமும் பார்க்கவில்லை ! So இன்னமும் இதழ் கைக்குக் கிடைக்கப் பெறாத நண்பர்கள் கொஞ்சம் ஆறுதல் கொண்டிடலாமே - துணைக்கு நானும் இருக்கிறேன் என்று!!


சிவகாசியில் ஆண்டுக்கு மூன்று பொங்கல்கள் கொண்டாடுகிறோம் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் ! தைப் பொங்கல் எப்போதும் போல் ; பங்குனியில் அம்மன் கோவில் பொங்கல் ; மூன்றாவதாய் சித்திரையில் இன்னுமொரு அம்மன் கோவில் பொங்கல் என்று சிவகாசியே திருவிழா கோலத்தில் தற்போது உள்ளது ! ஞாயிறு துவங்கி புதன் முடிய விடுமுறைகளே எங்களுக்கு.இருப்பினும் எங்களது ஊழியர்கள் பைண்டிங்கில் இருந்து வந்திட்ட முதல் batch பிரதிகளை அனுப்பிடும் பொருட்டு வேலைக்கு வந்திருந்தனர் ! நம் வாசகர்களில் பெரும்பான்மைக்கு என்னைத் தெரியுமோ இல்லையோ..எங்களது நிறுவனத்தில் 35 + ஆண்டுகளாய்ப் பணியாற்றிடும் ராதாக்ருஷ்ணன், குரல் அளவிலாது உங்களில் அனைவருக்கும் பரிச்சயமானவர் என்பது நான் அறிவேன் ! எதற்கும் அயராத இவரோடு பணியாற்றுவது சமீபத்திய addition ஆன Ms ஸ்டெல்லா மேரி ! பணியில் ஆர்வமும் ; சலிப்பின்றி தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிடும் நேர்த்தியும் இந்த சின்னப் பெண்ணின் பிளஸ் points ! அத்தோடு தயாரிப்புப் பணிகளின் பக்கம் சர்வமுமாய் இருந்திடும் மைதீன் எங்களது மிகப் பெரிய பலம் ! கதைகளை அச்சுக்கோர்வை செய்திடும் கம்ப்யூட்டர் டிசைன் ஆர்டிஸ்ட்களை தாஜா செய்து பணிகளை முடித்துக் கொண்டு வருவதில் துவங்கி..அச்சுப் பிரிவினில் வேலை வாங்கி ; பைண்டிங்கிற்கு நடையாய் நடந்திடுவது என்று இவர் ஒரு ஆல்-இன் -ஆல் அழகுராஜா !அவர்களுக்கு நிச்சயம் உங்கள் பாராட்டுகளில் பெரும் பங்கு சாரும் !

நாளை (வியாழன்) அடுத்த batch பிரதிகள் அனுப்பிடுவோம் ! நிச்சயம் இவ்வார இறுதிக்குள் அனைவருக்கும் இதழ்கள் கிடைத்து விடும் ! (அயல்நாட்டு வாசக நண்பர்களுக்கு முதல் batch-ன் போதே அனுப்பியாகி விட்டது ) !கொஞ்சம் கொஞ்சமாய் புதுப் பாணிக்கு..தயாரிப்புகளுக்குப் பரிச்சயமாகி வருகின்றோம் நாங்கள்.விரைவில் பைண்டிங் தாமதங்களை கட்டுக்குள் கொண்டு வந்திட்டால், ஒரே நாளில் அனைவருக்கும் இதழ் அனுப்பிட சாத்தியமாகிடும் !  அந்நாள் நிச்சயம் தொலைவில் இல்லை !

அப்புறம், வண்ணத்தில் காமிக்ஸ் பற்றி Youtube பதிவோடு Tamil Comics Lover எழுதி இருந்தார் !  2008 -ல் upload செய்திடப்பட்ட வீடியோ அது என்பதைக் கவனிக்க முடிந்தது. ! சந்தேகமின்றி கவலை தரும் விஷயமே ! இந்தத் தயாரிப்புகள் பற்றி முழுதாய் விபரம் தெரிந்திடாமல் நான் இப்போது சொல்லிடும் எந்தக் கருத்தும் பொருத்தமாய் இருந்திடாது ! So ஊருக்குத் திரும்பிய பின்னர் இது பற்றி நிச்சயம் விசாரித்திடுவேன் ! அது வரை கொஞ்சம் பொறுமையாய் இருப்போமே..ப்ளீஸ் ?

இங்கே எக்கச்சக்கமான இயக்கங்கள் (லார்கோ நற்பணி ; சூப்பர் ஹீரோஸ் மன்றம் ; டைகர் அணி ) உருவாகி இருக்கும் அழகை ரசிக்காது இருக்க முடியவில்லை ! கள்ள வோட்டும் போட்டு விட்டு அதை ஒப்புக் கொள்ளும் அந்த நல்ல உள்ளங்களின் ஆர்வத்திற்கு நிச்சயம் பலனில்லாது போகாது :-) விரைவில் சில அதிரடி அறிவிப்புகள் இது சம்பந்தமாய் வந்திடும் !  பொறுத்திருந்து பாருங்களேன் !

அடுத்தடுத்து கூடுதல் விலையில் இதழ்கள் வந்திடுவது ஒரு சிரமத்தை உண்டாக்குமா ; இல்லையா என்ற கேள்வியினை தொடரும் நம் இதழ்களிலும் எழுப்பிடவிருக்கிறேன் ! இன்னும் கொஞ்சம் புதிய சந்தாக்கள் சேகரிக்க முடிந்திடும் பட்சத்தில் ஆண்டொன்றிற்கு எங்களால் கணிசமான அளவு இதழ்களை வெளியிட முடியுமென்ற நம்பிக்கை எனக்குள் திடமாய் உள்ளது ! "Gift a Subscription" என்ற பாணியில் உங்களுக்குப் பரிச்சயமானவர்களுக்கு நீங்கள் சந்தா செலுத்திடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா என்ற எண்ணமும் உள்ளது ! தட்டுத் தடுமாறிக் கிடந்த நம் காமிக்ஸ் தற்சமயம் எட்டிப் பிடித்திருக்கும் ஒரு வேகத்தை தொய்வின்றித் தொடர்ந்திட உங்கள் உதவி எப்போதையும் விட இப்போது தேவை நண்பர்களே ! உங்கள் ஆர்வத்தை exploit செய்து கல்லா கட்ட நினைக்கிறோமென்று தவறாய் எண்ணிட மாட்டீர்களென்ற நம்பிக்கையில் உங்கள் முன் கோரிக்கையினை வைக்கின்றேன் !

உங்களின் பாக்கெட்டுக்கு சேதாரத்தை சற்றே மட்டுப்படுத்திட வேண்டுமெனில் லார்கோ வின்ச் ; லக்கி லூக் ; டைகர் ; சிக் பில் போன்ற கதைகளை ஒற்றை இதழாய் வெளியிட்டால் குறைந்த பட்சம் Rs .45 - என்று விலை நிர்ணயம் செய்திட முடியும். 48  முழு வண்ணப் பக்கங்கள் பிளஸ் கொஞ்சமாய் கறுப்பு வெள்ளை பக்கங்கள் இருந்திட முடியும் அப்படிப்பட்டதொரு இதழில் ! அட்டைப்படம் சற்றே மெல்லிய அட்டையில் வந்திடும். இந்த option ஓ.கே என்று நினைத்தால் மாதம் ஒரு இதழ் என்பது சுலபமாய் சாத்தியமே ! ஒரு trial பார்ப்போமா அது போல ?



இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் லார்கோ வின்ச் தொடரில் அனைத்துக் கதைகளுமே இரு பாகங்களில் நிறைவுறும் ரகம் ! So ஒற்றை இதழாய் லார்கோவை வெளியிடும் பட்சத்தில் கதை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் - இரண்டாம் பாகம் மறு மாதம் வந்திடும் வரை ! So லார்கோ மட்டும் சிங்கள் சிங்கமாய் வந்திடாமல் doubles அடிக்க அவசியப்படும் ! அப்புறம் புதிதாய் இன்னும் சில கதைத் தொடர்களைத் துரத்திச் சென்று கொண்டிருக்கிறேன்...! இவ்வாண்டின் பாக்கி இதழ்கள் அனைத்தையும் பிளான் செய்து முடித்த பின்னர் புதுத் தொடர்களை 2013 -க்கு அதிரடியாக வைத்துக் கொள்ளலாமென்று திட்டம் ! So வாண வேடிக்கைகள் தொடரும் !!

'என்ன எழுதினேன் ?' என்று தெரியாமலே இத்தனை நேரம் ஏதேதோ எழுதி இருக்கிறேன் ! நாளைக் காலை இதை நானே படிக்கும் போது அசடு வழியப் போகிறேனா தெரியவில்லை ! முன்னமே சொன்னது போல் இது ஒரு light  hearted பதிவு மட்டுமே ! Take care guys !