Powered By Blogger

Sunday, April 26, 2015

ஒரு பறக்கும் பால்யம் !

நண்பர்களே,

வணக்கம். ஒற்றை வாரத்துக்குள் மின்னும் மரணத்தின் புண்ணியத்தில் ஒரு திருவிழாவை வாழ்ந்து பார்த்ததொரு அனுபவத்தோடு தரைக்குத் திரும்புகிறேன் - இந்தப் பதிவோடு ! ஆனால் பாருங்களேன் - இதுவும் கூட விண்ணில் எழும்பும் ஒரு சுகமான அனுபவத்தைப் பற்றியது என்பதால் - காற்றில் மிதக்கும் பாக்கியம் அடியேனுக்கு இன்னும் கொஞ்ச காலம் தொடர்கிறது! தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது மே மாதத்து விண்ணில் ஒரு வேங்கையின் முன்னோட்டத்தின் பொருட்டே என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்பதால் - let's get into it guys !

LADY SPITFIRE என்பது தான் நாம் இம்மாதம் காணக் காத்திருக்கும் பிரெஞ்சுக் கதைத்தொடரின் ஒரிஜினல் பெயர். இது இரண்டாம் உலக யுத்தத்தின் களத்தை மையமாகக் கொண்டதொரு பெண் பைலட்டின் சாகசம் ! கிராபிக் நாவல்கள் பாணிகளில் நிஜக் கதைகளின் தழுவல்களாக இல்லாது வழக்கமான மசாலாத் தூவல்களோடு, அட்டகாசமான சித்திரங்களோடும், அதிரடி ஆக்ஷனோடும் இருந்திடும் !  அதெல்லாம் சரி, உலகயுத்தக் கதை பற்றியதொரு முன்னோட்டப் பதிவின் தலைப்பில் "பால்யங்களுக்கு" வேலை என்னவோ என்ற கேள்வி உங்களைக் குடையும் பட்சத்தில் இதோ அதற்கான 'ஹி..ஹி..' ரகத்திலான பதில். உங்களது இளமைக்காலத்து காமிக்ஸ் நினைவுகள் கரெண்ட் கம்பிகளைத் தேடித்திரியும் இரும்புக்கையார்களையும், ஏற்நெற்றி கொண்ட சிலந்தி மனிதர்களையும் ; பயர் இஞ்சினுக்கு அடித்ததின் மிச்சப் பெயிண்டில் மூழ்கி எழுந்த உலோகத் தலையர்களையும் சுற்றிப் பிணைந்திருப்பின், அடியேனின் soooooooooooooooo loooooooooooooong ago பால்யத்தின் காமிக்ஸ் கனவுகளில் ஒரு பெரும் பகுதி இரண்டாம் உலக யுத்த களத்தில் தீரங்கள் பல செய்த மனிதர்களையும், மிஷின்களையுமே சார்ந்து இருந்து வந்தன ! எழுபதுகளில், நான் வளர்ந்த நாட்களில் - இங்கிலாந்தில் காமிக்ஸ் பிரவாகமெடுத்துப் பொங்கிக் கொண்டிருந்ததொரு தருணம் என்பதைப் பின்னாட்களில் உணர்ந்து கொள்ள முடிந்தது. கார்டூன்கள் ; புட்பால் கதைகள் ; சாகசக் கதைகள் ; ரொமான்ஸ் கதைகள் ; பெண்களுக்கான கதைகள் ; திகில் கதைகள் ; பாக்கெட் சைஸ் இதழ்கள் ; ஆல்பம்கள் ; வாரப் பத்திரிகைகள் ' ஆண்டுமலர்கள் என்று ரவுண்ட் கட்டி FLEETWAY & DC THOMSON பதிப்பகங்கள் அடித்து வந்தன golden age அது ! அன்றைய விலைகள் மிகவும் குறைச்சல் என்பதால் இவை இங்கிலாந்திலிருந்து சரளமாய் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியப் பெருநகரக் கடைகளில் ஆரம்ப நாட்களிலும், ஒரு இடைவெளிக்குப் பின்னே பழைய புத்தகக் கடைகளிலும் கிடைப்பதுண்டு. என் தந்தையின் புண்ணியத்தில் எங்கள் வீட்டில் சதா நேரமும் ஒரு லாரி லோடு காமிக்ஸ் கிடக்குமென்பதால் - எனது நேரங்களில் பெரும்பங்கு அந்தக் கத்தைக்குள் குடியிருப்பதிலேயே செலவாகிடுவது வழக்கம்.

PHANTOM கதைகள் மீது அதீத மையல் கொண்டு வளர்ந்தவன், ஒரு கட்டத்துக்கு மேலே கொஞ்சம் கொஞ்சமாய் இந்த யுத்தகளக் கதைகளுக்குள் ஐக்கியமாகத் தொடங்கினேன். அதிலும், விமான யுத்தக் கதைகளில் ஏனோ தெரியவில்லை அப்படியொரு பிரமிப்பு தோன்றுவது வழக்கம். ரொம்பச் சீக்கிரமே அந்நாட்களது பிரிட்டிஷ் ; ஜெர்மானிய ; அமெரிக்கப் போர்விமானங்களின் பெயர்கள் எல்லாமே அத்துப்படியாகியது ! இன்றைக்குப் போல நொடியில் கூகிள் தேடல்களுக்கு வழியில்லாத சமயம் அதுவென்பதால் இது போன்ற offbeat தேடல்களுக்கு அவ்வளவாக வழி கிடையாது என்பதால் - you just had to read more to know more! அந்தப் பசியில், அந்தத் தேடலில் பிறந்தது தான் பிரிட்டிஷ் விமானப் படையில் ஒரு பாயும் புலியாய் செயல்பட்டு அசாத்தியமாய் சாதித்து வந்த ஸ்பிட்பயர் ரக விமானத்தின் மீதான காதல் ! நான் கண்ணிலே பார்த்திருக்கவே வாய்ப்பிலாததொரு உலகம் ; எனக்குத் துளி கூடப் பரிச்சயம் இல்லா மாந்தர்கள் ; கிஞ்சித்தும் தொடர்பில்லா ஒரு யுத்த களம் - ஆனால் அதற்குள்ளும் சுவாரஸ்யமாய் புகுந்திட முடிந்ததெனில் - அது அந்நாட்களது பிரிட்டிஷ் கதை சொல்லும் பாணிகளுக்கு ஒரு பறைசாற்று ! ஒவ்வொரு கதையிலும் வரும் விமானிகளோடு எனக்கு ஏதோ ஒரு நேசம் தோன்றியது ; ரட்-டட்-டட்-டட் என விமானத்தின் மிஷின்கன்கள் நாஜிக்களின் விமானங்களை நோக்கிச்  சீறும் போது, அந்த விசையில் இருப்பது என் விரல்கள் என்பது போல் தோன்றும் ! "சொய்ன்ன்ன்ங்க்" என்று ஜெர்மானிய விமானங்கள் குண்டடிபட்டு சமுத்திரத்தை நோக்கி வீழும் போது 'செத்தாண்டா சைத்தான்!' என்ற உற்சாகம் பொங்கியெழும் ! ஜெர்மானியர்கள் என்றாலே எதிரிகள் என்பது போலான mindset சின்னவயதில் தோன்றியதாலோ-என்னமோ முதன் முதலாய் பிரான்க்பர்டில் புத்தக விழாவினில் பங்கேற்க ஜெர்மனி சென்ற போது கூட - வில்லன்களின் தேசத்துக்குப் போவது போலொரு லேசான உணர்வு இருந்தது !! காமிக்ஸ் வெளியிடத் தொடங்கிய பின்னர் யுத்தக் கதைகளை உங்கள் தலைகளில் 'பர பர' வென சுமத்தும் ஆர்வம் எனக்குள் மலையாய் இருந்தது தான் ! ஆனால் அந்தக் கதைவரிசைகளில் பெரும்பகுதி one -shots என்பதால் ஒரு நிலையான நாயகன் ; ஒரு அணி என்று இருப்பதில்லை ! So தெளிவான hero-oriented கதைகளுக்குப் பழகியிருந்த நமக்கு இது போன்ற random கதைகள் சரிப்படாது என்று மனதுக்குப் பட்டதால், "பெருச்சாளிப் பட்டாளம்" ; "மின்னல் படை" போன்ற ஹீரோக்கள் கொண்ட கதைத்தொடர்களைத் தாண்டி வேறு களங்களுக்குள் வேகமாய் டைவ் அடிக்கும் தைரியம் இருந்திருக்கவில்லை ! (தப்பிச்சோம்டா சாமி என்ற மைண்ட் வாய்ஸ் கேட்குது !!)  ஒரு மாதிரியாக எங்கெங்கோ நம் தேடல்கள் இட்டுச் சென்ற பின்னே, இந்த யுத்தக் கதைகள் மீதான ஒரு வேட்கை சன்னமாகிப் போனது ! அவ்வப்போது ஏதேனும் war backdrop -ல் கதைகள் தட்டுப்படும் பொழுது அவற்றைக் கொஞ்சம் கூடுதல் வாஞ்சையோடு பரிசீலனை செய்வேன் ; ஆனால் கதைகளில் ஒரு சுறுசுறுப்பு தட்டுப்படாவிட்டால் சத்தம் காட்டாமல் ஓரம் கட்டிவிடுவது வாடிக்கை. "வானமே எங்கள் வீதி" கதையிலும் வலுவாக இருந்ததால் சந்தோஷமாக அதனைத் தேர்வு செய்தேன் ! அந்த சமயம் தான் ஜூனியர் எடிட்டரின் தேடல்களில் இந்த LADY SPITFIRE கதை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது !

வித்தியாசமான சித்திரங்கள் ; எனது favorite ஸ்பிட்பயர் விமானங்களுக்கு கதையினில் ஒரு முக்கிய பங்கு ; பிரான்கோ பெல்ஜிய making என்ற விசிடிங் கார்டோடு இந்தக் கதை கைநீட்டிய பொழுது அந்தக் கரத்தைப் பற்றிக் குலுக்கும் ஆசையை தவிர்க்க இயலவில்லை. யுத்தப் பின்னணியில் பொதுவாக இங்கிலாந்தவர்கள் அல்லது அமெரிக்கர்கள்  சாதிப்பது போல கதைகள் இருப்பதே பெரும்பான்மை ; ஆனால் இந்தக் களமோ - ஒரு பிரெஞ்சுப் பெண் பைலட் இங்கிலாந்தின் அணியில் இணைந்து சாகசம் செய்வது போன்ற கதையோட்டம் இருந்ததை ரசிக்க முடிந்தது ! தவிரவும், தடித் தடியான ஆம்பிளைப் பசங்களின் ஹீரோ அணிவகுப்புக்கு மத்தியில் ஒரு மென்மையான பெண் நாயகி அறிமுகம் ஆவதும் நம் கழகக் கண்மணிகளில் சிலருக்கு உற்சாகம் தரக் கூடும் என்றும் தோன்றியது ! So "விண்ணில் ஒரு வேங்கை" தமிழ் பேசும் நல்லுலக வானில் பறக்கத் தயாரானது இப்படித் தான் ! எங்கோ - எப்போதோ நடந்த யுத்தம் தான் எனினும், மனித குல வரலாற்றில் ஒரு மறக்க இயலா இரத்த அத்தியாயமாகிப் போன அந்த நாட்களை சிறிதேனும் தரிசிக்க முயற்சிப்பது வித்தியாசமான கதைத்  தேடல்களுக்கு ஒரு குட்டிப் படியாகப் பார்ப்போமே ?

இதோ - "வி.ஒ.வே." இதழின் அட்டைப்படத்தின் first look ! ஒரிஜினலை முன்னட்டைக்கு அப்படியே பயன்படுத்தியுள்ளோம் - லேசான வர்ண முன்னேற்றத்தோடு ! பின்னட்டை நமது தயாரிப்பே ! படைப்பாளிகள் இந்த டிசைனைப் பார்த்து விட்டு ஒரு ஸ்மைலியை பதிலாக அனுப்பினார்கள் என்பதால் - I guess we got it right !



இதோ - இந்தத் தொடரின் படைப்பாளிகள் - கதாசிரியர் ; ஓவியர் ; கலரிங் ஆர்டிஸ்ட் என்ற வரிசையில் !
Author : Sebastien Latour
Artist : Vicanovic Maza
Coloring Artist : Clement Sauve
And, எப்போதும் போலவே - இதோ உட்பக்கங்களின் டீசரும் ! அந்த சித்திர பாணி ; வர்ணக் கலவைகள் டாலடிப்பதோடு - சமீப காலமாய் தவிர்க்க இயலாது போய் விட்ட "இச்சக்..பச்சக்" கலாச்சாரமும் தொடர்வதைப் பார்க்கலாம் ! பாருங்களேன் - இந்த "இ..ப.." வியாதி 'தல'யின் கதைகளைக் கூட விட்டு வைக்கவில்லை !! (அது சரி, 2012 முதலாய் இது வரை நாம் வெளியிட்டுள்ள கதைகளுள் "இ.ப" தலைகாட்டுவது எத்தனை இதழ்களில் (!!) என்ற கணக்கை எடுத்து வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்போமா ?)


பிழை திருத்தங்கள் போடா பக்கமிது ! 
காடு, மேடு, பள்ளமென தளபதியோடும், பௌன்சரோடும் சுற்றித் திரிந்த இடைவெளியில், விண்ணில் பறக்கும் இந்த அனுபவம் ரொம்பவே relaxed ஆக இருந்ததை உணர முடிந்தது ! மொழிபெயர்ப்பிலும், துளி கூடச் சிரமமின்றி , ஜாலியாய் சுற்றி வர முடிந்தது! தளபதியின் மெகா இதழ் அசுரத்தனமாய் நிற்கும் போது இது போன்ற நார்மல் இதழ்கள் துக்கடவாகத் தோற்றம் தருவது தவிர்க்க இயலாது தான் ; but I still have a feeling this Lady will do fine !!

அப்புறம் தளபதியின் ஸ்பெஷல் தடபுடலாய் தயார் ஆனது முதலாய் அடுத்த மண்டைக்குடைச்சல் குடி கொள்ளத் துவங்கி விட்டது - 'தல'யின் ஸ்பெஷல் துளியும் விடுதலின்றி தூள் கிளப்பியாக வேண்டுமே என்று ! இம்முறை தேர்வாகியுள்ள 3 டெக்ஸ் கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாப் பாணிகள் என்பதால் - மூன்றையும் ஒரு சேர வண்ணத்தில் பார்க்கப் போவது ஒரு அதிரடி அனுபவமாக இருக்குமென்பது உறுதி ! மூன்றிலுமே, டீம் டெக்ஸ் முழு பலத்தோடு பிரசன்னமாவதால், சுவாரஸ்ய மீட்டர் உச்சத்தில் நிற்பது நிச்சயம் ! And by the way - தல தாண்டவமாடும் இந்த லயன் இதழ் # 250-க்கு ஒரு பொருத்தமான பெயராக suggest பண்ணுங்களேன் ? ஏதேனும் ஒரு 'பளிச்' பெயர்சூட்டும் நண்பருக்கு ஒரு வித்தியாசமான பரிசு இம்முறை  ! டெக்சின் கதாசிரியர் போசெல்லியிடம் ஆடோகிராப் பெற்றோரு டெக்ஸ் இதழை வரவழைத்துத் தருவதாக உள்ளோம் ! So அந்த சிந்தனைக் குதிரைகளை தட்டி விடலாமே guys ?

சென்ற பதிவின் பெரும்பான்மைத் தீர்மானம் கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமாவது இந்தாண்டுக்கே இருக்கட்டுமே என்றிருப்பதால் - OH YES !! என்று தலையாட்டுகிறேன் ! இந்தாண்டில் காமெடி கோட்டா சற்றே பலவீனமாய் இருப்பது நிஜமே என்பதால் - ஒரு ஜாலி-ஜாலி இதழைத் தயாரித்தால் போச்சு ! திட்டமிடலுக்கு அவகாசம் எடுத்துக் கொள்கிறேன் - அட்டகாசமான அறிவிப்போடு வரும் பொருட்டு ! அதன் மத்தியில் இந்த கார்ட்டூன் ஸ்பெஷல் இதழுக்கும் ஒரு பெயரை யோசித்து வையுங்களேன்  ? See you around folks ! Have an awesome day!

Friday, April 24, 2015

வேங்கையின் விஸ்வரூபம் !

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு பால்யத்து தீபாவளியின் போதும் பண்டிகை சார்ந்த எதிர்பார்ப்போடு நாட்களைக் குஷியாய்க் கடத்துவதும்; வெடி வாங்குவது, துணி வாங்குவது என உற்சாக மீட்டரின் துள்ளலோடு திரிவதும், ஒவ்வொரு புது நாளின், புது அனுபவங்களையும் ஏகாந்தமாய் உணர்வதும் - ஒரு வழியாக D -DAY புலரும் சமயம் சந்தோஷத்தில் தலை கால் புரியாது ஆடுவதும் தவறாத jolly நிகழ்வுகள் !! ஆனால் மூக்குக்குக் கீழே கம்பிளிப்பூச்சி போலொரு ரோமக்கற்றை அரும்பத் தொடங்கிய நாள் முதலாய் - 'இதுலாம் பொடிப் பசங்களுக்கு..!' என்ற கித்தாய்ப்போடு அந்தப் பரபரப்புக்கு விடை கொடுத்ததே யதார்த்தம் ! சில பல யுகங்களாய்த் தோன்றும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னே, ஒரு கால இயந்திரத்தினில் ஏறிப் பின்னோக்கிச் சென்று, அந்நாட்களது அதே ஆனந்தத்தை ; உற்சாகத்தை, அனுபவிக்க கடந்த 75+ நாட்களொரு வாய்ப்பாக அமைந்தன என்றால் - எல்லாப் புகழும் - மின்னும் மரணத்துக்கும், அதன் நாயகனுக்கும், அதன் பின்னணிகளான உங்களுக்குமே !  !! 

நிறையப் பேசி விட்டோம் ; நிறைய எழுதியும் விட்டேன் - so இந்த முயற்சியின் பின்னணி பற்றியோ, அதன் பணிச்சுமைகள் பற்றியோ நிச்சயமாய் நான் மேற்கொண்டு எழுதப் போவதில்லை ! ஞாயிறன்று உங்கள் ஒவ்வொருவரின் முகங்களிலும் வியர்வைக்கு மத்தியில் மிளிர்ந்த அந்த ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் சொன்ன கதைகளும், இங்கே பதிவாகியுள்ள பாராட்டுப் பிரவாகங்களும், மின்னஞ்சலில் வந்துள்ள எண்ணச் சிதறல்களும் - "மின்னும் மரணம்" an absolute smash hit என்பதை சந்தேகமறப் பறைசாற்றியான பின்னே, பின்னணிக் கஷ்டங்கள் அத்தனையும், போன இடமே தெரியவில்லை !! இந்த அன்பையும், சந்தோஷங்களையும், பெருமிதங்களையும் தரிசிக்க ஏழு சமுத்திரங்களையும் கூடத் தாண்டலாம் என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது !

ஞாயிறின் உற்சாகப் பொழுதைப் பற்றி நண்பர்கள் இங்கும், இன்ன பிற தளங்களிலும் அமர்க்களமாய் பதிவு செய்திருக்கும் நிலையில் திரும்பவும் அதைப் பற்றி நான் வண்டி வண்டியாய் எழுதுவதை விட - இந்தவொரு விடுமுறைப் பொழுது எனக்குள் விதைத்துள்ள சிந்தனைகளைப் பற்றிப் பேசுவது இன்னமும் பொருத்தமாக  இருக்குமென்று தோன்றியது ! But before I ramble on, அன்றைய தினத்தை ஒரு குட்டித் திருவிழாவாக்கிய நண்பர்களைப் பற்றிக் குறிப்பிடாது நகர்வது நியாயமாகாது ! கிட்டேயும், தூரமுமான ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்திருந்த நமது நண்பர்களின் மத்தியில், சேந்தம்பட்டி கோஷ்டி அதிரடிப் பிரவேசம் செய்திட, இதுவொரு formal புத்தக வெளியீட்டு விழா என்ற தோரணை துளி கூட இல்லாது - ஜாலியான நண்பர்கள் சங்கமமாகவே காட்சி தந்தது ! சயனித்துக் கொண்டிருந்த புத்தக விழாவே நம் ரகளைகளில் லேசாக எழுந்து அமர்ந்தது என்று சொல்லலாம் ! NBS வெளியீட்டின் உச்சத்துக்குப் பின்பாக நண்பர்களின் ஜாலிக் கச்சேரிகளை ரசிக்கும் வாய்ப்பில்லாது போயிருந்த என் தந்தைக்கு - ஞாயிறின் உற்சாகம் வார்த்தைகளில் விவரிக்க இயலா ஒரு மிகப் பெரிய பூஸ்ட் ! முத்து காமிக்ஸின் துவக்க நாட்களில் இது போலெல்லாம் எந்தவொரு நிகழ்வுக்கோ; வாசகர்களுடனான குறைந்தபட்ச interaction-களுக்கோ துளி கூட வாய்ப்பில்லாத நிலையில் - இன்றைய அமளி-துமளிகள் அவருக்குக் கட்டுக்கடங்கா சந்தோஷம் தரும் தருணங்கள் ! 


இரண்டாயிரம் ரூபாய்க் கட்டணத்தில் ஒரு அழகான indoor அரங்கம் இரண்டு மணி நேர அவகாசத்துக்குக் கிடைக்கப் பெற்ற நிலையில் யாருக்கும் இடைஞ்சல்களின்றி, பக்கத்து ஸ்டால்களின் கோபப் பார்வைகளை சம்பாதிக்காது குப்பை கொட்ட முடிந்தது நமது நல்யோகமே ! பத்திரமாய்ப் பார்சலுக்குள் பதுங்கியிருந்த இதழினை வெளியீட்டு வேளையில் unveil செய்யும் வரைக்கும் அது வாசகர்களின் கண்களில் லேசாய்க் கூடச் சிக்காது இருந்துள்ளது இதுவே முதல் முறை எனும் போது எதிர்பார்ப்புகளின் அளவுகள் எப்போதையும் விட இம்முறை அதிகமிருப்பதை என்னால்   நன்றாகவே உணர முடிந்தது ! NBS இதழும் சரி ; LMS இதழும் சரி, நண்பர்கள் ஸ்டாலுக்கு வருகை தருவதற்கு முன்பாகவே கூரியரில் இல்லம் தேடிப் பயணித்திருந்ததால் அந்நேரங்களில் அந்த X-Factor மிஸ்ஸிங் என்று நினைத்தேன் ! ஆனால் இம்முறை வெளியீட்டு தினம் ஒரு ஞாயிறாய் அமைந்ததாலும்  சரி ; பணியின் கடுமையின் காரணமாய் தயாரிப்பை சீக்கிரமாய் முடிக்க இயலாது போனதாலும் சரி - இந்த surprise சாத்தியம் கண்டது !






படித்த கதை தான் எனும் போது இந்த இதழின் சுவாரஸ்யமே தயாரிப்பிலும், அட்டைப்படத்திலும் தான் மையல் கொண்டிருக்கும் என்பதைப் பச்சைக் குழந்தை கூட யூகித்திருக்கும் ! So ராப்பரை தரிசிக்கும் வரை நண்பர்கள் பலருக்கும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் டான்ஸ் அரங்கேற்றம் கண்டு கொண்டிருக்கும் என்பதையும் யூகிப்பதில் சிரமம் தான் எது ? பார்சலைப் பிரித்த கணம் நண்பர்களின் கண்களில் சந்தோஷம் வேகமாய்ப் பரவுவதைப் பார்க்கும் வரைக்கும் எனக்குள் ஒரு மௌனமான பயம் இருந்தது என்பதை சொல்லியாகணும் ! தினமும் பார்த்துக் கொண்டே இருக்கும் எனது கண்களுக்கு சுந்தரத் தோற்றம் தந்த நம் உடைந்த மூக்காரின் டிசைன் - உங்களுக்குப் பிடிக்காது போய் விட்டால் - மொத்தக் கதையும் கந்தலாகிப் போய் விடுமே என்ற பயத்தில் நியாயம் உண்டு தானே ? NBS-ன் ராப்பர் 'ஆகா-ஓகோ' ரகமாய் இல்லாது போனாலும், அன்றைய பொழுது நமது மறு வருகையின் ஆரம்ப காலகட்டம் என்பதாலும், அந்த இதழ் நமக்கு ஒரு மெகா path breaker என்பதாலும் பெரிதாய் உதை வாங்காது தலை தப்பியிருந்தது ! ஆனால் மின்னும் மரணமோ அத்தகைய சலுகையை எனக்குத் தரவல்லதல்ல என்பதும் ; பிழைகளுக்கு மன்னிப்பே இராது என்பதும் அப்பட்டமாய்த் தெரிந்தது ! "தளபதிக்குத் துரோகம் செய்து விட்டான் !" என்ற சாத்துக்கள் கிட்டும் வாய்ப்பு ஒருபக்கமெனில் - ஆயிரம் ரூபாய்க்கான இதழ் என்றான பின்னே 'பிம்பிலிக்கா பிலாக்கி' என்று அட்டைப்படம் பல்லை இளித்தால் ஆங்காங்கே உள்ள கொத்தவால் சாவடிகளில் அழுகிய தக்காளிகளுக்கு கடும் டிமாண்ட் எழுந்து விடாதா ? 

நம் அலுவலகத்துக்கு வந்திடும் காமிக்ஸுக்கு சம்பந்தம் இல்லா நபர்களிடம் ஓசையின்றி இந்த டிசைனைக் காட்டி அவர்களது feedback களைச் சேகரிக்கவும் செய்தேன் ; ஆனால் அதில் கிடைத்த தெளிவை விட குழப்பமே ஜாஸ்தி ! "ஷேவிங் பண்ணாம இருக்காரே அண்ணாச்சி.....இவரைப் போய் அட்டையிலேயா போட போறீங்க ?" என்று ஒருத்தர் கேட்டு வைக்க - இன்னொருவரோ - "அட..ஆயிரம் ரூபாய் புக்குங்குறீங்க ......நல்லா கலர் கலரா டிசைன் போடாம என் இப்டி லைட் கலர்லே டிசைன் ?" என்று புளியைக் கரைத்து விட்டார் ! இன்னொருத்தரோ..."இந்த பிள்ளைய அட்டைலே போடலாம்லே அண்ணாச்சி ? " என்று சில்க்கைக் குறிப்பிட்டுக் கேட்டார் ! 'அட போங்க சாமிகளா .....ஓவராய் யோசனை கேட்டால் ஆணியே பிடுங்க முடியாது !' என்ற தீர்மானத்தில் எங்கள் ரசனைகள் + பொன்னனின் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து இந்த டிசைனைக் கரை சேர்த்தோம் ! அது தவறல்ல என்பதை உங்கள் ஆரவாரங்கள் உணர்த்திய கணமே என் தோள்களின் மீதிருந்ததொரு சுமை விலகியது போல் உணர்ந்தேன் ! உட்பக்கங்களின்   அச்சு decent ஆக வந்திருந்ததாலும், ராப்பருக்கு ஏகப்பட்ட ஜிகினா வேலைகள் செய்திருந்ததாலும் - தளபதியின் ஆற்றலோடும், கதையின் வீரியத்தோடும் அவை கூட்டணி சேரும் போது என் சிரத்துக்கு சேதாரமிராது என்பது புரிந்தது ! 

நண்பர்களின் பிரதிகளை அவரவர் கைகளில் ஒப்படைக்க, அவர்களோ மைக்கைத் தூக்கி என் தந்தையிடமும், என்னிடமும் ஒப்படைத்து விட்டனர் ! என் தந்தை பிசியாக இருந்த நாட்களில் சிவகாசியின் அச்சுத் தொழில் சங்கத்தில் பதவிகள் வகித்தவர் என்ற முறையில் மேடைகளில் பேசியது உண்டு ; புரட்சித் தலைவர் M.G.R அவர்களைக் கொண்டு நடத்தியதொரு கூட்டமெல்லாம் கூட எனக்கு நினைவில் உள்ளது ! So அவர் ஜாலியாகப் பேச ஆரம்பிக்க, நானோ பின்னாடி ஒரு சேரைத் தேடிப் பிடித்துக் கொண்டு பதுங்கி விட்டேன் !

"நண்பர்களே" என்று பேனாவைப் பிடிப்பதோ - கீ-போர்டைத் தட்டுவதோ சுலபமான வேலைகள் எனும் போது மைக்குக்கு முன்னே 'பெபெபே ' படலம் நடத்துவானேன் என்ற முன்ஜாக்கிரதை தான் ! ஆனால் நண்பர்கள் விடாப்பிடியாய் கோர்த்து விட, அன்றைய தினமொரு அழகான நாள் என்பது புரிந்ததன் பலனாகவோ - என்னவோ  ஒரு சொற்பொழிவை எப்படியோ ஆற்றோ ஆற்றென்று ஆற்றித் தள்ளினேன் !






ஒரு மாதிரியாய் மைக்கின் முன்னே சொதப்பாது தப்பிய சந்தோஷமும், இதழ் பெற்ற பாராட்டுக்களும் ஒன்று சேர, மதிய உணவிற்கு அருகாமையிலிருந்த உணவகத்துக்கு மண்டையைப் பிளக்கும் வெயிலில் நடை போட்ட போது கூட 'ஜில்'லென்றதொரு உணர்வே மேலோங்கி நின்றது ! உடன் வந்த அத்தனை நண்பர்களின் கைகளிலும் ஒன்றரைக் கிலோ "மி.மி" தகதகக்க - கைக்குழந்தைகளைப் போல அவற்றைப் பத்திரமாய், பதவிசாய் அவர்கள் சுமந்து வந்ததே வீடியோப் பதிவுக்கு உகந்ததொரு காட்சி !! அரங்கில் இருக்கும் சமயமே, வண்டி வண்டியாய் க்ரூப் போட்டோக்கள் எடுத்துக் கொள்ளும் சமயமே   ; இதழைப் புரட்டிப் புரட்டி ரசிக்கும் சைக்கிள் கேப்பிற்குள் ஆன்லைன் சென்று பின்னூட்டங்கள் இட்டு வருவதும் நடந்து வந்ததால் - ஒரு லைவ் telecast பார்த்த உணர்வு சென்னைக்கு வந்திருக்கா நண்பர்களுக்குக் கிட்டியிருப்பது உறுதி !  



கிட்டத்தட்ட 45 பேர் அந்தக் குட்டியான ஹாலை நிரப்பிட, சந்தோஷமாய் சாப்பிடத் தொடங்கிய போது ரொம்பவே நிறைவாக இருந்தது ! சாப்பிட்டான பின்னே திரும்பவும் ஸ்டாலுக்குச் சென்றது ; அங்கே நண்பர்களோடு வழக்கம் போல கதை பேசியது ; வரக் காத்திருக்கும் திகில் இதழைப் பற்றியான கேள்விகளுக்கு மழுப்பலாய்ப் பதில் சொல்வது ; கார்ட்டூன் ஸ்பெஷல் பற்றி கிண்டிக் கிழங்கெடுக்க முயற்சித்த நண்பர்களுக்கு நம் பாணி பெவிகால் அல்வாவை பதிலாகத் தந்தது என எல்லாமே மதிய வெப்பத்தின் நடுவே அரங்கேறியது !


இரவு ரயிலைப் பிடித்து வந்திருந்த நண்பர்கள் தூக்கமின்மையால் தள்ளாட, உள்ளூர் நண்பர்கள் ஒவ்வொருவராய் விடை பெற, நானும், ஜூனியரும் என் தந்தை சகிதம் வீட்டுக்குப் புறப்பட்ட போது மணி நாலரையிருக்கும் ! ஜனவரியின் சென்னையைப் போலவோ ; ஈரோட்டின் பொழுதுகளைப் போலவோ நம் அரட்டைகள் இரவு வரைத் தொடர்ந்திட ஏப்ரலின் வெப்பம் இடம் தரவில்லை என்பதால் சீக்கிரமே கிளம்ப வேண்டியதாகிப் போனது ! அவகாசம் குறைவாக இருப்பினும், ஆனந்தம் நிறைவாக இருந்த திருப்தியோடு நாங்கள் வீடு திரும்பினோம் ! இன்னமும் கூடுதலாய் நண்பர்களை சந்திக்க வாய்ப்பிருந்திருக்கும் பட்சத்தில் அன்றைய தினம் இன்னமும் அட்டகாசமாய் அமைந்திருக்குமென்பதில் ஐயமேயில்லை ; ஆனால் இன்னும் கொஞ்சம் முன்கூட்டிய திட்டமிடலுக்கு நமது தயாரிப்பு schedule இடம் தந்திருக்கும் பட்சத்தில் - நமது பட்டாளத்தின் வலு கூடுதலாய் இருந்திருக்குமென்பது நிச்சயம் ! கடைசி வாரம் வரை 'இழுத்துக்கோ-பறிச்சுக்கோ' என்ற கதையாய் நாம் மல்லுக்கட்டி வந்ததில் தான் இரகசியம் எது ?! எது, எவ்விதம் இருப்பினும் துளியும் சந்தேகமின்றி இந்த ஞாயிறு நமக்கொரு 'அட்சய திரிதியை" தான் ! தெற்கத்தியர் தங்கத்தை ஒன்றரைக் கிலோப் பாளங்களாய் நாம் கையில் ஏந்த முடிந்துள்ள நாள் நமக்கு தங்கத் திருநாள் தானன்றோ ? Thanks ever so much for making that a sparkling sunday folks !! It was an absolute privilege catching up with you all ! 


Before I move on,  "முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தானா dust jacket ? போஸ்டர் ? ; கடைகளில் வாங்குவோருக்கும் அதைக் கொடுத்தால் என்ன ?" என்ற கேள்விகள் எதிர்பார்த்தபடியே எழுந்துள்ளன ! இதற்கான பதில்களை நாம் எல்லோரும் தான் அறிவோமே ? However much I try - எல்லாத் தருணங்களிலும் நானொரு எடிட்டராக மாத்திரமே தொடர்வது நடைமுறை சாத்தியமில்லா விஷயம் ! சில சமயங்களில் நானொரு பதிப்பாளராகவும் ; வியாபாரியாகவும் இருக்கும் அவசியங்கள் எழத் தான் செய்கின்றன ! அது போன்ற சமயங்களில் இந்த மாதிரியான சிற்சிறு நெருடல்கள் நேர்வதை நானும் உணர்கிறேன் ! முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கும், கடைகளில் வாங்கும் நண்பர்களுக்குமிடையே நம் கண்களில் எவ்வித வேற்றுமைகளும் கிடையாது தான் ! ஆனால், இடையினில் ஒன்றோ - இரண்டோ விற்பனை மையங்கள் ஏஜெண்ட்களின் ரூபத்தில் இணைந்து கொள்ளும் பொழுது அவர்களது இலாபங்களும் picture-க்குள் வருவது தவிர்க்க இயலாது போகின்றனவே ? Maybe இனி வரும் நாட்களில் இது போன்ற முன்பதிவு இதழ்களுக்கு இரண்டல்லது,  மூன்று தவணைகளாய் முன்பதிவு செய்திடும் வாய்ப்புகளையும் செய்து பார்க்கலாம் - வாசகர்களின் சுமையை மட்டுப்படுத்தும் விதமாக !

ஞாயிறின் மீதான சிந்தனைகளில் லயிக்கும் போது ஒருசில விஷயங்கள் என் தலைக்குள் தோன்றின ! முன்செல்லும் பாதைக்கு அவை ரொம்பவே பயன்தரக் கூடுமென்பதால் அதைப்பற்றியும் கொஞ்சம் உரக்க சிந்திப்பதில் தப்பில்லை என்று பட்டது ! நமது மறுவருகையைத் தொடர்ந்தான  காமிக்ஸ் பயணத்தில் ஏதேனும் ஒரே ஒரு standout feature பற்றிக்  குறிப்பிட்டுச் சொல்லுமொரு அவசியம் எழுந்தால், வாசகர்களிடையே நிலவும் ஜாலியான நட்பைப் பற்றிய சிலாகிப்பே எனது தேர்வாக இருக்கும் ! இன்டர்நெட் , ஸ்மார்ட் போன் ; வாட்சப் ; வலைப் பதிவுகள் ; முகநூல் என  கருத்துப் பரிமாற்றங்களுக்கு இன்று ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதால் "காமிக்ஸ் வாசிப்பு" எனும் ஒரு குடைக்குக் கீழே குழுமும் நண்பர்கள் அந்தப் பரிச்சயங்களை தம் வாழ்வுகளின் ஒரு சிறு அங்கமாக்கிக் கொள்வதைப் பார்க்கும் பொழுது  ரொம்பவே சந்தோஷமாக உள்ளது ! Of course - அவ்வப்போது சிற்சிறு உரசல்கள் ; கருத்து மோதல்கள் எழுவது சகஜமே - ஆனால், அவற்றைத் தாண்டிச் செல்லும் பக்குவங்களும் உங்களிடையே இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை ! எப்போதும் நமது ஸ்டால்களில்  அல்லது, ஏதோவொரு  மரத்தடியில் நடக்கும் நமது புத்தக விழாச் சந்திப்பை இம்முறை ஒரு அரங்கினில் அரங்கேற்றிப் பார்த்த போது - இதனை கொஞ்சம் அடுத்தபடிக்குக் கொண்டு செல்வது ஒரு பயனுள்ள அனுபவமாய் இருக்குமென்பது புரிகிறது ! பால்யங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு மறுபதிப்புகள் உதவிடுகின்றன எனும் பொழுது  ; இன்றைய நமது இயந்திரத்தனமான வாழ்க்கைகளின் ஒரு அயர்ச்சியை லேசாகவேணும் போக்கிட இது போன்ற நண்பர்கள் சந்திப்புகள் ; வெளியூர் பயணங்கள் ; காமிக்ஸ் கலந்துரையாடல்கள் உதவக் கூடுமோ ? ஆண்டின் பிரதானப் பெருநகரத்துப் புத்தக விழாக்கள் எவை என்று பட்டியலிட்டால் (ஜனவரியின்) சென்னை விழா ; நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி ; ஈரோட்டுத் திருவிழா மற்றும் சேலத்து விழாக்கள்  தான் முன்நிற்கும் ! ஆண்டுக்கு ஏதேனும் ஒரு ஊரைத் தேர்வு செய்து கொண்டு அந்தப் புத்தக விழாவின் சமயம் அங்குள்ள ஒரு நல்ல ஹோட்டலில் ஒரு அரங்கை காலை 11 to  மாலை 5 வரை எடுத்துக் கொண்டு நமது சந்திப்புகளை நடத்திப் பார்த்தால் என்ன என்று நினைத்தேன் ? நண்பர்களைப் பேசச் சொல்லிக் கேட்க இம்முறையே விருப்பம் கொண்டிருந்தேன் ; ஆனால் நேரமின்மையால் அது சாத்தியமாகவில்லை ! நமக்கே நமக்கென ஒரு அரங்கு கிட்டும் போது - பிறருக்குத் தொல்லை ; நம் கச்சேரிகளைக் கண்டு புகார் செய்யும் அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களின் கோபக்கணைகள் ; அடுத்த முறை ஸ்டால் கிடைக்காதோ என்ற பீதிகள் ஏதுமின்றி relaxed -ஆக இருக்க முடிவதை இம்முறை என்னால் உணர முடிந்தது ! மதிய உணவும் அங்கேயே என்ற ஏற்பாடோடு திட்டமிட்டால் - ஜாலி அரட்டைகள் ; காத்திருக்கும் புது வெளியீடுகள் பற்றிய முன்னோட்டங்கள் ; முன்செல்லும் பாதைக்கு உதவிடக்கூடிய நண்பர்களின் சிந்தனைகள் ; சில ஜாலியான மலரும் நினைவுகள் என்று நிறைய விஷயங்களுக்கு நேரம் கிட்டுமல்லவா ? Without overdoing it - ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டும் இப்படியொரு சந்திப்பை plan பண்ணினால் என்ன guys ? நமது பயண இலக்கு சுவாரஸ்யமே எனினும், அதன் பொருட்டு நாம் ஒன்றிணைந்து செய்யும் இந்தப் பயணமும் கூட அதே அளவுக்கு சுவாரஸ்யம் தான் என்பது நிதரிசனமாய்த் தெரியும் போது - why don't we give it a try ?

கனவாய்த் தோன்றி ; கனவு இதழாய் உருமாறி விட்டுள்ள மின்னும் மரணம் இப்போது history என்று ஆகி விட்ட நிலையில் - "அடுத்து என்ன ?" என்ற கேள்வி நீங்கள் எழுப்புவதற்கு முன்பாகவே என் தலைக்குள் நர்த்தனம் புரியத் தொடங்கி விட்டது ! "XIII ; இரத்தப் படலம் ; இரத்தக் கோட்டை" என்றெல்லாம் நண்பர்களின் வோட்டுக்கள் பதிவாகிடுவது எனக்குத் தெரிகிறது - ஆனால் நிஜத்தைச் சொல்வதானால் அவற்றுள் எனக்கொரு சுவாரஸ்யத்தை வளர்த்திடவே முடியவில்லை ! எப்போதாவது சாப்பிட்டால் தித்திக்கும் மைசூர்பாகை தினசரி டிபன் ஆக்கிப் பார்க்கும் தப்பைச் செய்ய வேண்டாமே என்ற எச்சரிக்கையுணர்வு + மின்னும் மரணம் அளவுக்கு மேற்சொன்ன கதைகளில் (at least எனக்கு மட்டுமாவது) ஈர்ப்பு குறைவே  என்பதும் காரணங்கள் ! (கோயம்புத்தூர் பக்கமாய் "பணால்" என்று ஏதோ வெடிக்கும் ஓசை கேட்பது எனக்கு மட்டும் தானா ??) தவிர, இறுக்கமான களங்களுக்குள் திரும்பவும் புகுந்திட நம் வண்டியில் தற்காலிகமாகவாவது 'தம்' இல்லை என்பதும் சாயம் பூசா நிஜம் ! ஏதேனும் ஒரு ஜாலியான சூப்பர்-ஹிட் கதைத் தொடர் - அது கார்ட்டூனாக இருந்தாலும் சரி ; சூப்பர்-ஹீரோ சப்ஜெக்டாக இருந்தாலும் சரி ; டிடெக்டிவ் ரகமாக இருந்தாலும் சரி - கண்ணில்படும் சமயம் அடுத்த மெகா திட்டமிடலை வைத்துக் கொள்வோமே ?! உங்களிடம் அதற்கான suggestions ஏதேனும் இருப்பின், I would be more than happy to lend my ears ! திரும்பவுமொரு மறுபதிப்புக் குதிரையில் ஏறி இந்த மெகா சவாரிகள் வேண்டாமே - ப்ளீஸ் !

"தில் இருந்தால் திகில் உண்டு"....என்ற tagline சகிதம் நாம் கட்டவிழ்த்துள்ள புதுக் கதைவரிசைகளும் ஒரு பொறுமையான காத்திருப்பின் பலனே ! பேய்-பிசாசுக் கதைகள் ; த்ரில்லர் கதைகளின் ரசிகர் என்ற முறையில் "திகில்" இதழை தட்டி எழுப்பிக் கொண்டு வரக் கோரி ஜூனியர் எடிட்டர் என்னிடம் நிறையவே கோரிக்கை வைத்திருந்தார் ! ஆனால் உருப்படியாய் கதைகளைத் தேடித் பிடிக்காது - உள்ளதைக் கொண்டே வடை சுட எனக்குப் பிரியம் இருக்கவில்லை என்பதால் அவனுக்கும் அல்வா கிண்டி வந்தேன் !   சமீபத்திய புதிய பதிப்பகத்தின் சந்திப்பைத் தொடர்ந்து இதற்கான சில கதவுகள் திறந்துள்ளதால் - திகில்-சீசன் 2 வரும் ஜனவரி முதல் அரங்கேறிடுகிறது ! 'முழு வண்ணத்தில்' என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன் ; மற்ற எல்லாமே - நவம்பரின் ட்ரைலர் படலத்தின் போது ! அதே போல இந்த சீசன் 2 - சரியாக ஜனவரி 2016-டிசம்பர் 2016 வரையிலுமான காலகட்டத்துக்கு மாத்திரமே ! புதுசாய் ஒரு கதைவரிசையைத் தொடங்கி விட்டு, அப்புறமாய் கதைப்பஞ்சத்தின் காரணமாய் அதனில் உப்மா கதைகளைப் போட்டு ரொப்பும் வேலைகள் நிச்சயமாய் இராது ! தற்போது 12 கதைகள் என் தேர்வில் உள்ளன - இம்முயற்சிக்கு  நியாயம் செய்யும் விதமாக ! So they will be the backbone of Season-2 ! தொடரும் நம் தேடல்கள் மேற்கொண்டு (நல்ல) கதைகளை கரைசேர்த்தால் - maybe  அதன்  ஆயுள் நீண்டிடலாம் !

And இறுதியாக - கார்ட்டூன் ஸ்பெஷல் பற்றி ! 'ஜனவரியின் சென்னை விழாவின் போது ஓட்டை வாய் உலகநாதனாய் அவதாரம் எடுத்ததொரு கணத்தின் வெளிப்பாடான இந்தக் கார்ட்டூன் ஸ்பெஷல் பற்றி அப்புறமாய் வாயே திறக்கக் காணோமே ?; - என்ற கேள்விகளோடு நண்பர்கள் என்னை இம்முறை சுற்றி வளைக்காத குறை தான் !  ஆனால் என் மௌனத்தின் காரணமே - இந்தாண்டின் நமது எகிறும் பட்ஜெட் தான் ! சந்தாவுக்கு நெருக்கி ரூ.4000 + மி.மி.யின் பொருட்டு இப்போது ரூ.1000 எனும் போது - உங்கள் பர்ஸ்களுக்கு இந்தாண்டின் சேதாரம் இதுவரையிலுமே ரூ.5000 என்ற நிலையில் - மேற்கொண்டு "துட்டு..துட்டு.." என்று நச்சரிக்க ரொம்பவே உறுத்தலாய் உள்ளது ! அனைவரது ஆர்வங்களும் ஒரே நிலையில் இருப்பினும், அனைவரது  வசதிகளும் அதே ஒற்றுமையோடு இருத்தல் சாத்தியமாகாது எனும் நிலையில் - தினுசு தினுசாய் இதழ்களை வெளியிட்டு சிரமங்களை உண்டு செய்யத் தயக்கமாக உள்ளது ! இப்போதே 'ஆயிரம் ரூபாய்க்கு பொம்மை புக்கா ???' என்று எத்தனை இல்லங்களில் பறக்கும் பூரிக்கட்டைகள் தென்பட்டனவோ ?! இந்த நிலையில் கார்ட்டூன் ஸ்பெஷலுக்கென ஒரு தொகை + முத்து காமிக்ஸ் இதழ் # 350-ன் பொருட்டு இன்னொரு தொகை என்ற அவசியங்களை உருவாக்குவது சரியாகுமா ? தவிர, இப்போது தான் வேங்கையின் விஸ்வரூபத்துடன் மின்னும் மரணம் வெளிவந்துள்ள  நிலையில், ரொம்பவே சீக்கிரமாய் "என் பெயர் டைகர்" collection -ஐயும் கொணர்வது ஒரு வித overkill ஆகிடாதா ? பற்றாக்குறைக்கு அடுத்த 45 நாட்களுக்குள் 'தல'யின் தாண்டவம் வேறு - ரூ.450-க்குக் காத்துள்ளதையும் மறந்திடக் கூடாதல்லவா ? So ஓரிரு மாத இடைவெளிகளுக்குள் ரூ.1000 ; ரூ.450 ; ரூ.400 என்று சரமாரியாய்ப் போட்டுத் தாக்குவது  ; அதுவும் கௌபாய் கதைகளாகவே துவைத்துத் தொங்கப் போடுவது ஒ.கே. தானா ? என்ற சந்தேகம் என்னை போட்டு உலுப்பி வருகிறது! 'பேசாமல் 2016-ன் திட்டமிடல்களோடு இவற்றை சேர்த்துக் கொண்டாலென்ன ?' என்ற சிந்தனை மெலிதாக எட்டிப் பார்க்கத் தான் செய்கிறது ! "பணம் பிரச்சனையல்ல" என்று நீங்கள் எண்ணினால் கூட - இந்த "கௌபாய் overkill " பற்றி சற்றே சிந்தித்துப் பாருங்களேன் ? 2015-ல் எஞ்சியிருக்கும் பட்டியலில் கௌபாய் கதைகள் இதோ :

டெக்ஸ் வில்லர்

  • 330 பக்கங்கள் + 220 பக்கங்கள் + 110 பக்கங்கள் (இதழ் # 250
  • 330 பக்கங்கள் (பனிமலையில் ஒரு புதையலைத் தேடி )
  • 220 பக்கங்கள் - "எமனின் எல்லையில்"

மேஜிக் விண்ட் : 96 பக்கங்கள்

பௌன்சர் : கறுப்பு விதவை - 112 பக்கங்கள்

கமான்சே
88 பக்கங்கள் (சாத்வீகமாய் ஒரு சிங்கம் + சீற்றத்தின் நிறம் சிகப்பு)

Maybe this can be an option : 2015-க்கு கார்டூன் ஸ்பெஷல் இதழினை மட்டும் திட்டமிட்டுக்  கொண்டு - "என் பெயர் டைகர்" collection -ஐ 2016-க்குக் கொண்டு சென்றாலென்ன ? நிதானமாய் சிந்தித்துச் சொல்லுங்களேன் guys - அதன் பின்னே ஒரு முடிவெடுப்போமே?!

புறப்படும் முன்பாய் துவங்கிய இடத்துக்கே மீண்டுமொருமுறை பயணிப்பதை தவிர்க்க இயலவில்லை ! மேஜையின் ஒரு ஓரத்தில் மினுமினுக்கும் THE COMPLETE SAGA-வைப் பார்க்கும் போது 'ஷப்பா..!!; என்றதொரு பெருமூச்சு எழுவதை உணர முடிகிறது ! அது பணி முடிந்ததன் நிம்மதிப் பெருமூச்சா..? பட்ட சிரமங்கள் வீண் போகவில்லையே என்ற சந்தோஷப் பெருமூச்சா ..? அந்தப் பரபரப்புகளை miss செய்திடும் ஆதங்கப் பெருமூச்சா..? அல்லது - இனியொரு சவால் இது போல் அமையத் தான் செய்யுமா ? என்ற ஏக்கப் பெருமூச்சா..?  தூக்கத்தில் விடை தேடிச் செல்கிறேன் !! மீண்டும் சந்திப்போம் !! Have a great weekend ! 

Sunday, April 19, 2015

இது புலியின் தினம்..!

நண்பர்களே,

வணக்கம். ஒரு மைல்கல் தினத்தை தேய்ந்து போன வரிகளோடு ஆரம்பிக்க வேண்டாமே என்று பார்த்தேன் ; ஆனால் அந்தச் சபலத்துக்கு முழுசாகத் தடை போடவும் முடியவில்லை ! So - இது எப்படியுள்ளதென்று தான் பாருங்களேன் - 'Tiger coming...Tiger coming..' என்ற கதை ஓட - 'Tiger is here finally !!' 

"ஷப்பா...மொக்கைடா சாமி !" என்றபடிக்குப் புருவங்களை உயர்த்தும் நண்பர்களே - கிட்டத்தட்ட 2.5 மாதங்களாய் திரும்பிய திசையெல்லாம் என் முன்னே டான்ஸ் ஆடித் திரிந்த நமது தளபதியாரை ஒரு வழியாக நமது மின்னும் மரணம் மெகா இதழுக்குள் பிடித்து அமுக்கி - உங்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப் போகும் குஷியின் வெளிப்பாடே இந்த ஜாலி வரிகள் ! கடந்த பதிவுகளில், "the making of மின்னும் மரணம்" பற்றி நிறையவே எழுதித் தள்ளி விட்டதால் மேற்கொண்டு எனது புராணங்களை இங்கொரு முறையும் எடுத்து விடப் போவதில்லை ! In fact - சென்ற சனியிரவு மி.மி.யின் அட்டைப்படம் அச்சானதோடே எனது பங்குப் பணிகள் முடிந்திருந்தன ! முன்பதிவுகளுக்கான போஸ்டர்களை அச்சிடுவது பெரியதொரு சிரமமல்ல என்பதால் போன ஞாயிறு முதலே நான் பௌன்சரின் "கறுப்பு விதவை"க்குள் தலை நுழைத்திருந்தேன் ! ஆனால் நம்மவர்களுக்கு முதுகு முறிக்கும் பணிகள் தொடர்ந்தன கடந்த 6 நாட்களாகவும் ! அதைப் பற்றிய விவரிப்புக்குள் புகுந்திடுவதற்கு முன்பாக எனது முதல் கடமை நீங்கள் பார்த்திடக் காத்திருக்கும் மின்னும் மரணத்தின் அட்டைப்படத்தை unveil செய்வதே ! 

And without any further ado - இதோ இந்த மெகா இதழின் அட்டைப்படமாக நம் முன்னே வலம் வரக்  காத்திருக்கும் தளபதியாரின் அட்டைப்படம் : 

இதுவொரு மாமூலான இதழ் அல்ல எனும் போது இதற்கான ராப்பரும் பத்தோடு பதினொன்றாக இருந்திடக் கூடாதே என்பது தான் எனக்கும், நமது டிசைனர் பொன்னனுக்கும் தலைக்குள் ஓடிய பிரதான சிந்தனை ! 'பளீர்-பளீர்' என்ற வண்ணப் பின்னணிகளின்றி subtle shades-ல் அட்டைப்படத்தை வடிவமைக்கும் சுதந்திரத்தை பொன்னன் கோரியிருந்த போது எனக்கு மறுப்பு சொல்லத் தோன்றவில்லை ! அதே நேரம் சத்தமின்றி நமது ஓவியரைக் கொண்டு 'எதற்கும் இருக்கட்டுமே..!' என்று டிசைன்களைப் போடவும் நான் தவறவில்லை ! என்றோ ஒரு நாளில் கரும்சிவப்பில் ஒரு cowboy ராப்பரைப் பார்க்க நேரிடும் சமயம் - "ஓஹோ..இது தான் மி.மி.கென முயற்சிக்கப்பட்ட ராப்பர் டிசைன்களுள் ஒன்றா ?" என்று யூகித்துக் கொள்ளலாம் ! பொன்னன் போட்டுக் காட்டிய முதல் டிசைன் இது தான் ! 

ஓவியர் ஜிரௌவின் ஒரிஜினல் டிராயிங்கை சில, பல வண்ணமூட்டல்களுடன் தயார் செய்திருந்தது 'பளீர்' என்று இருப்பினும், ரேஷன்கடைக் க்யூவில் பின்னுக்குத் தள்ளப்பட்டது போல தளபதி காட்சி தருவதை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை ! 'டெக்சின் தோஸ்த்' என்பதால் இவன் 'தளபதிக்கு பகையாளி" என்பதான எண்ணம் நண்பர்களின் ஒருசாராரிடையே ஏற்கனவே மெலிதாய் சுற்றிவரும் சமயத்தில் இதை ராப்பராகத் தேர்வு செய்வது மத்தளம் வாசிக்க என் முதுகை நானே ஒப்படைத்தது போலாகுமே என்று - இந்த ராப்பருக்கு 'நோ' சொல்லி விட்டேன் ! அதன் பிறகு பெரியதொரு இடைவெளிக்குப் பிறகு பொன்னன் தயார் செய்து தந்த 2 டிசைன்கள் இவை :


பார்த்த மாத்திரத்திலேயே அந்த முதல் டிசைனில் ஒரு கம்பீரமான வசீகரம் இருப்பதாக எனக்குப்பட்டதால் - இது தான் மின்னும் மரணத்தின் அட்டைப்பட base என்று தீர்மானித்தேன் ! அதன் பின்னே, டைகரின் மூக்குக்குக் கீழே வெவ்வேறு படங்களை நுழைத்து  ஏகப்பட்ட combinations / colors என முயற்சித்துப் பார்த்து பொன்னனை பெண்டு கழற்றும் படலத்தில் இறங்கினேன் ! அப்புறம் ஒரு நாளிரவு தளபதியின்  தலை இத்தனை பெரிதாக வேண்டாமே என்று தோன்ற - டிசைன் 1 + 2 -ன் கூட்டணியே ஒ.கே. என்ற மகாசிந்தனை உதயமானது ! அடுத்த கட்டமாக 'இதைச் சிவப்பாக்கு ; இதைப் பச்சையாக்கு " என்ற ரகளைகளை நடத்திப் பார்த்து ஒரு மாதிரியாக 'இது தான் cover !' என்று தீர்மானம் காண்பதற்குள் 10 நாட்களும், பொன்னனின் பிராணனில் பெரும் பகுதியும் ஓடியே போயிருந்தன ! அப்புறமாக பின்னட்டை நகாசு வேலைகள் அரங்கேறத் துவங்க, சிகுவாகுவா சில்க்கின் உருவம் அங்கேனும் இடம் பிடிக்காவிட்டால் நமது கழகக் கண்மணிகள் தீவிர உண்ணும் விரதத்தில் இறங்கிடும் அபாயமிருப்பது புரிந்தது ! So அங்கேயும் நிறைய combinations முயற்சித்த பிறகே, we froze on the backcover !
டிசைனிங் பணிகள் முடிந்தான பின்னே - இதனைப் பிரத்தியேகப்படுத்த என்ன செய்வதென்று யோசித்தோம் ! அப்போது தான் இதழின் பெயருக்குப் பொருந்துவது போல - ஒரு மின்னும் surface மீதே அச்சிட்டாலென்னவென்று தோன்றியது ! சில்வர் பிலிம் மீது ஒரு மாறுபட்ட முறையில் அச்சிட்டால் ரொம்பவே வித்தியாசமான effect கிடைக்குமென்ற தீர்மானத்தில் அதற்குள் குதித்தோம் ! இதற்கான செலவுகள் டிரௌசரைக் கழற்றும் ரகமெனினும் - பின்வாங்க மனது கேட்கவில்லை ! அதிலும் இதழின் தயார்ப்புப் பணிகளில் நமது பேங்க் கையிருப்பு க்வாட்டரைப் போட்ட ஜிம்மியைப் போல தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த இறுதித் தருணத்தில் - இதற்கென புதிதாய் ஒரு பட்ஜெட் போட்டு - பணம் புரட்டுவதற்குள் tongue hanging நிறையவே அரங்கேறியது ! மினுமினுப்பு மட்டுமன்றி - எழுத்துக்கள் அமைந்திருக்கும் ஸ்ட்ரிப் ; பின்னணிகள் என பல இடங்களில் நகாசு வேலைகள் செய்திருப்பதை இதழ் கைக்குக் கிடைத்த பிற்பாடு பார்த்திடப் போகிறீர்கள் ! இதழ் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும் வரையிலும் நான் குறிப்பிடும் அந்த feel என்னவென்பதை உணர்வது சாத்தியமாகாது என்பதால் கூரியரில் / பதிவுத் தபால்களில் - அடுத்த சில நாட்களில் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் காத்திருக்கும் நண்பகளுக்கென - இதோ அச்சாகும் சமயம் நான் எடுத்த போட்டோ !

நிறைய மெனெக்கெட்டொம் ; நிறைய செலவழித்தோம் என்பதெல்லாமே உங்களின் thumbs up கிடைக்கும் பட்சத்தில் சந்தோஷ நினைவுகளாக மாறிடும் ! "உஹூம் ..இதற்கு இத்தனை அலப்பரையா ?"  என்ற அபிப்பிராயங்களை ஈட்டிடும் பட்சத்தில் புத்திக் கொள்முதல் என்று எடுத்துக் கொள்வோம் ! தீர்ப்பெழுதப் போகும் நீதிபதிகள் நீங்களே - as always !

அட்டைப்படப் புராணத்திலிருந்து இதழுக்குள் குதிப்பதெனில் - என்ன எழுதுவது ? ; எங்கே ஆரம்பிப்பது ? என்ற குழப்பம் எனக்குள் ! இதை விடவும் நீளத்தில் கூடுதலான XIII-ன் "இரத்தப் படலம்" முழுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம் தான் ; டெக்சின் 336 பக்க சாகசங்களை just like that கடந்தும் வந்திருக்கிறோம் தான் ! ஆனால் 540 பக்கங்கள் நீளத்திலான இந்தத் தளபதிப் படலமோ முற்றிலும் வேறு மாதிரியானதொரு அனுபவம் ! பக்க எண்ணிக்கையில் இந்தக் கதையினை எடை போடல் நியாயமாகாது என்பது தான் நிஜம் ! ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள கட்டங்களின் எண்ணிக்கைகளை  ; வசன பலூன்களின் பிரவாகங்களைக் கணக்கில் கொண்டால் - இது இன்னுமொரு 100 பக்கங்கள் கொண்டதொரு கதையின் வாசிப்பு அனுபவத்திற்கு இணையானது என்று சொல்லலாம் ! Phew ...திக்குமுக்காடிப் போனோம் இந்த இதழை ஒருங்கிணைத்துத் தயாரிப்பதற்குள் !! ஒவ்வொரு அத்தியாயத்தின் ஒரிஜினல் அட்டைப்படைத்தையும் மீடியம் சைசில் உள்ளே இணைத்திருப்பதால் இது மெய்யாகவே மின்னும் மரணத்தின் complete தொகுப்பென்ற பெருமைக்குச் சொந்தம் கொண்டாடலாம் ! ஏற்கனவே நாம் கடந்து சென்றுள்ள கதை தான் என்றாலும், அந்த நாட்களில் இவற்றைத் தயாரித்த சமயம் படித்ததற்குப் பின்பாக நான் இவற்றைத் திரும்பவும் கையில் தூக்கியதில்லை என்பதால் எனக்கு இது ஒரு மலரும் நினைவுகளாய் - செம fresh அனுபவமாக அமைந்தது ! அதிலும் சமீப காலங்களது சற்றே வீரியம் குன்றிய டைகர் கதைகளோடு மல்லுக்கட்டி விட்டு இப்படியொரு electrifying சாகசத்தினுள் புகுந்திடுவது அட்டகாசமான அனுபவமாக இருந்தது ! இதனை முதல் முறையாகப் படிக்கக் காத்திருக்கும் நண்பர்களோ நிச்சயமொரு நம்ப இயலாப் பயணத்தில் புறப்படப் போகும் பாக்கியவான்களே !

(நமக்குப்) புதிய பாகமான "கானலாய் ஒரு காதல்" - துவக்கப் 10 அத்தியாயங்களின் கம்பி மேல் நடக்கும் பாணியில் இல்லாது - சற்றே லைட்டாகப் பயணிப்பது கூட கதையை ஒரு முற்றுப்புள்ளியினை நோக்கி இட்டுச் செல்லும் பொருட்டு படைப்பாளிகள் செய்திட்ட deliberate முயற்சியாகத் தான் எனக்குத் தோன்றுகிறது ! கொட்டும் மழை ஒரு பக்கம் ; தளபதியாரின் "பச்சக்..பச்சக் .." மழை இன்னொரு பக்கம் ; தளபதிக்குக் கிடைக்கும் பல்புகள் ; அதிரடி ஆக்க்ஷன் என இந்த இறுதி அத்தியாயமே ஒரு ஜாலியான கிளைமாக்ஸ் ! So ஆண்டாண்டு காலமாய் இந்த இறுதிப்புள்ளியின்றி முற்றுப் பெற்றிருக்கா கோலம் ஒரு வழியாக இம்முறை சுபம் காண்கிறது !

இது முழுக்க முழுக்க தளபதியின் திருவிழா எனும் போது வேறு விளம்பரங்களோ ; எனது லொட லொட பக்க ஆக்கிரமிப்புகளோ இருந்திடக் கூடாதென்றே இந்த இதழின் திட்டமிடலின் போது திடமாக எண்ணியிருந்தேன் ! 'தலையங்கம் இல்லாது இதழ் திருப்தி தராதே !' என நீங்கள் ஆதங்கப்பட்ட சமயம் கூட - இந்தவொரு இதழுக்கு extra fittings ஏதுமின்றியே தொடர்ந்திட எண்ணியிருந்தேன் ! ஆனால் கிட்டத்தட்ட 2.5 மாதங்களாய் காடு, மேடு, மலை, பள்ளத்தாக்கு , என நமது உடைந்த மூக்காரை கங்காரூக்குட்டியைப் போல மடியில் சுமந்து திரிந்து விட்டான பின்னே அந்த அசாத்திய அனுபவத்தைப் பற்றி எழுதியே தீர வேண்டுமென்ற உந்துதல் எனக்குள்ளேயே துளிர் விட - பக்கங்களின் எண்ணிக்கையை லேசாகக் கூட்டி, என் தலையை உள்ளே நுழைக்க வழி பண்ணிவிட்டேன் ! எல்லா மெகா இதழ்களிலும் போலவே, before & after என எழுதியுள்ள பக்கங்களில் தளபதியைத் தாண்டி வேறு எவ்வித செய்திகளும் இருந்திடாது என்பது மட்டுமே எனக்கு நானே போட்டுக் கொண்ட guidelines ! இந்த மைல்கல் இதழில் சைக்கிள் கேப்பில் தலை நுழைத்திருப்பது எனது பக்கங்கள் மாத்திரமின்றி - நண்பர்களின் குட்டிக் குட்டியான டைகர் கவிதைகளும் கூடத் தான் ! வந்திருந்த எராளமானவற்றுள் வெகு சிலவற்றையே தேர்ந்தெடுக்க இடமிருந்தது ! Maybe 'தல' ஸ்பெஷல் இதழில் இதற்கான இட ஒதுக்கீட்டை ஜாஸ்தியாக்கிடலாமோ ?! எஞ்சியிருந்த சிற்சில பக்கங்களை தளபதி பற்றிய trivia சகிதம் நிரப்பி 548 பக்கங்களை நிறைவு செய்துள்ளோம் !

So ஒரு மறக்க இயலா 75 நாட்களின் உழைப்பின் பலன் இன்று உங்களின் கைகளில் ! நிச்சயமாய் இதனில் சிற்சில குறைகள் / பிழைகள் இருக்கக் கூடும் தான் ; ஆனால் எங்கள் ஆற்றல்களுக்கு உட்பட்ட எவ்வித முயற்சிகளிலும் நாங்கள் குறை வைக்கவில்லை என்ற நம்பிக்கையோடு இந்தப் புதையலை உங்களிடம் ஒப்படைக்கிறோம் ! எட்டு கழுதை வயதான பின்னேயும் ஒரு ராட்சசக் கனவை நனவாக்கி வாழ்ந்து பார்க்கும் அந்த த்ரில் எத்தனை அசாத்தியமானது என்பதை உணரச் செய்துள்ள பெருமை உங்களது guys !! This has been an experience to savor !! அதிலும், இன்றைய பொழுது - சென்னைப் புத்தக விழாவில் நம்மைச் சந்திக்க வரும் நண்பர்களின் மத்தியில் இந்த இதழை unveil செய்வது ஒரு விலைமதிப்பற்ற தருணம் ! ஜனவரியின் சென்னை புத்தக விழாவைப் போலில்லாது - ஏப்ரலின் இந்தப் புத்தக சங்கமம் ஒரு சாதுவான, பரபரப்பில் குறைச்சலான விழாவே என்பதால் அப்போது நிலவிய அந்த electrifying buzz காற்றில் இம்முறையும் காண்பது சிரமமே என்பது புரிகிறது ! இருப்பினும் - சில தருணங்களின் வெற்றிகள் வெறும் நம்பர்களில் மாத்திரமே இருந்திடுவதில்லை என்பதால் உள்ளூர் & வெளியூர்களில் இருந்து வருகை தரும் நண்பர்களின் உற்சாகத்தில் ஐக்கியமாகிக் கொள்கிறோம் ! இந்த வரிகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நிமிடங்களில் - சென்னையில் நண்பர்களது கரங்களில்  நமது மெகா இதழ் தவழ்ந்து கொண்டிருக்கலாம் ! உங்களது பிரதிகள் அடுத்த நாட்களில் கிடைக்குமென்பதால் அது வரைக்கும் சின்னதானதொரு காத்திருப்புக்கு உங்களை உட்படுத்தியமைக்கு sorry folks  ! இந்த வாரம் முழுவதுமே வருண பகவான் சிவகாசியின் மீது நேசப் பார்வைகளை வீசி வருவதால் தினமும் பெய்ந்து வரும் சாரல் மழை பணிகளுக்கு நிறையவே தாமதங்களை உண்டு பண்ணியுள்ளன ! So நம் கட்டுப்பாட்டுக்கு மீறிய விஷயங்களை கட்டுக்குள் கொணர முயற்சிக்கும் வேலைக்குள் இறங்கிடாது - இந்த   deadline -க்குள் பணிகளை முடித்துத் தந்துள்ள நம் பைண்டிங் பணியாளர்களுக்கொரு thumbs up  தருவதே தேவலை என்று நினைக்கிறேன் !

அதிலும் இந்த இதழின் நிஜமான நாயகன் என்று சொல்வதாயின் அது நமது மைதீன் தான் ! கதைகள் டைப்செட் ஆகத் தொடங்கும் நாட்களில் ஊரின் ஒவ்வொரு மூலையிலும் சிதறிக் கிடக்கும் நமது DTP பணியாளர்களின் வீட்டுக் கதவுகளை ஓராயிரம் தடவை தட்டுவதில் துவங்கிய அவனது பணிகளின் கடுமை கடந்த 75 நாட்களில் நான் பார்த்தவற்றை விடவும் ஜாஸ்தி என்பதில் சந்தேகமே கிடையாது ! ஒவ்வொரு அத்தியாயத்தையும் நாங்கள் 4 தடவை திருத்தங்கள் செய்திட - அத்தனையையும் ஒருங்கிணைப்பது ; திரும்பத் திரும்ப DTP அணியனரை அந்த correction கலைச் செய்திட முடுக்குவது ; முடிந்த பக்கங்களை அச்சுக்குத் தயார் செய்வது ; அதன் பிறகு டிசைங்களுக்காக பொன்னனின் ஆபீசுக்கு படையெடுத்தது  ; இறுதியாக பைண்டிங்கில், பேக்கிங்கில் ; டெஸ்பாட்ச்சில் என எங்கும் - எல்லாமுமாய் அவன் சுற்றி வந்திருக்காவிடில் "மின்னும் மரணம்" என்றில்லை - "மியாவ்.மியாவ் மரணத்தைக் " கூட என்னால் உருவாக்கியிருக்க முடியாது ! 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என ஓசையின்றிச் செயலாற்றி விட்டு ஒதுங்கி நிற்கும் மைதீனைப் போன்ற எண்ணற்றோரின் கரங்களின் கூட்டணியில் உருவான இந்த இதழ் உங்களுக்கு ஒரு சந்தோஷ அனுபவமாய் அமைந்திடும் பட்சத்தில் - இந்த ஆந்தைவிழியானுக்குப் பின்னே நிற்கும் முகமில்லா அந்த சகலரையும் ஒரு கணம் நினைவு கூர்ந்து கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ?!  Irrespective of how this edition fares - எனது அணியினை எழுந்து நின்று பாராட்டுவது எனது கடமை ! You have been truly awesome all !!
ஒரு 43 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட இதழுக்கும் ; எனது எட்டு கழுதை அனுபவத்துக்கும் கூட இன்றைய தினம் ஒரு மறக்க இயலாப் பொழுதென்பது நிச்சயம் ! இதை சாத்தியமாக்கித் தந்துள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகளையும் சொல்லாது போகலாமா ? Thanks for being such wonderful comics lovers & incredible people ! இலட்சங்களிலோ, பல்லாயிரங்களிலோ விற்பனை இலக்கங்கள் இல்லாவிடினும் கூட- இந்தச் சிறு பூந்தோட்டத்தில் பூக்கும் மலர்கள் அழகிலும், மனத்திலும் அசாத்தியமாய் அமைந்திடச் செய்த ஆண்டவனுக்கும் நன்றி சொல்லி விட்டு இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! மீண்டும் சந்திப்போம் !  Have a beautiful day !!

சரி...தளபதியின் திருவிழாவினில் வேறு குறுக்கீடுகள் இருக்கக் கூடாது என்பது தானே நாமே போட்டுக் கொண்ட கண்டிஷன் ?! So இன்றைய பொழுதின் பின்பகுதியில் ஒரு குட்டியான அறிவிப்பை வைத்துக் கொண்டால் - தப்பில்லை தானே ?! மாலையில் அது பற்றிய டீசரோடு சந்திக்கிறேன்...!  Adios for now all !!

Tuesday, April 14, 2015

சித்திரையின் சந்தோஷம் !

நண்பர்களே,

வணக்கம். லக்கியும், ஜாலியும் போல ; லார்கோவும், சைமனும் போல, டெக்சும், வெற்றியும் போல, டைகரும், மதியூகமும் போல, ஆர்டின்னும், டாக் புல்லும் போல - புலர்ந்திருக்கும் இந்தப் புத்தாண்டில்  நலன்களும், வளங்களும் நம்மோடு இணைபிரியா வாசம் செய்திட ஆண்டவனை வேண்டிக் கொள்வோமே ! காமிக்ஸ் நேசமும், நம்முள் நட்பும், புரிதலும் இந்த மன்மத ஆண்டில் இன்னமும் அற்புத உயரங்களைக் காணட்டுமே !

சென்ற பதிவிற்கு இங்கே தத்தம் கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்களின் பட்டியலோடு - மின்னஞ்சல்களில் தம் சிந்தைகளை தெரிவித்துள்ள நண்பர்களும் இணைந்து கொள்கின்றனர் ! பெரும்பாலானோர் - வெளியீட்டை புத்தக விழாவிலேயே வைத்துக் கொள்வோமே என்ற கோரிக்கையைத் தான் முன்வைத்துள்ளனர் ! அதிலும், நண்பர் ஒருவரின் வரிகள் லேசாக சலனத்தை ஏற்படுத்தியதை குறிப்பிடவும் விரும்புகிறேன் : 

"சார்..புத்தக வெளியீடை ஸ்டாலிலேயே வைத்துக் கொண்டால் என்னைப் போன்ற சாதாரண வாசகர்களுக்கு கலந்து கொள்வதில் நெருடல் இருக்காது ! என்ன தான் நீங்கள் உங்கள் செலவிலேயே ஏற்பாடுகளை செய்து ஒரு நல்ல AC ஹோட்டலில் இதை நடத்தினாலும், அங்கே சகஜமாக வர  எனக்கு கூச்சமாக இருக்கும் ! வேண்டுமானால் எங்கேயாவது புத்தக வெளியீட்டு இடங்களில் இதை நடத்தினீர்கள் என்றால் கூட ஒ.கே. என்பேன். ஏனென்றால் அங்கே என் போன்ற ஆள்கள் கொஞ்சமாகவேனும் வருவதுண்டு. மத்தபடிக்கு உங்க இஷ்டம் !"

காமிக்ஸ் காதல் எனும் ஒரு வீரியமான பிணைப்பின் குடைக்குக் கீழே குழுமி நிற்கும் நம்மிடையே  இந்த ஏற்ற-தாழ்வுகள் நிச்சயமாக ஒரு விஷயமே அல்ல என்பதையும் ; ஒருநாளும் இது போல் சங்கடம் கொள்ள அவசியமே இல்லை என்றும் அந்த நண்பருக்கு நான் பதில் அனுப்பிவிட்ட போதிலும், இந்தக் கோணத்தில் நினைத்துப் பார்க்கத் தோணலியே என்றும் லேசாக மனம் கனத்தது ! 

வந்த இன்னுமொரு மின்னஞ்சல் சுருக்கமாய் - அழகாய் இருந்தது : 

"விஜயன் சார், திட்டமிடல் பற்றி நாம் ரொம்ப பேசுறோம்னு நினைக்கிறன் :-)  

1. புத்தகம் 11 மணிக்கு நமது ஸ்டாலில் வைத்து வெளியட போகிறோம்
2. 1 மணி அளவில் அருகில் உள்ள ஓர் நல்ல உணவகத்தில் நண்பர்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து உணவு உண்ண போகிறோம். (சென்னை நண்பர்கள் அருகே உள்ள ஒரு சிறந்த உணவகத்தில் ரிசர்வ் செய்தால் போதும்)

ரொம்ப யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகரிக்கும் என்பது எனது எண்ணம்."

நண்பருக்கொரு ஸ்மைலியை அந்நேரம் பதிலாக அனுப்பியிருப்பினும், இதுவே தேவலை என்ற எண்ணம் வலுப்பெற்றது ! அதுமட்டுமன்றி நேற்றைக்கு தொடங்கிய புத்தக சங்கமத்தில் உள்ள நமது பணியாளர்களிடம் பேசிய போது - நமது ஸ்டாலைச் சுற்றிலும் நிறையவே இடம் உள்ளதாகவும் ; ஜனவரியின் விழாவைப் போல அலைமோதும் கூட்டமெல்லாம் இல்லை என்றும் சொன்னார்கள் ! அதுமட்டுமன்றி நமது வரிசைக்கு ரொம்பவே அருகிலுள்ள  மீட்டிங் ஹால் விசாலமாகவே உள்ளதாகவும் சொன்னார்கள் ! இது போதுமே நம் கச்சேரிகளுக்கு ? மதிய லஞ்ச மட்டும் எங்கேயாவது ஒன்றாகச் சேர்ந்து வைத்துக் கொள்வோமே ! 

So - இது தான் plan ! 11 மணிக்குத் தான் புத்தக விழா தொடங்கும் எனும் போது 11-30-குள்ளே இதழை unveil செய்து விடுவோம் ! அதன்பின்னே வித்வான்கள் தங்கள் ஆடல், பாடல் நிகழ்சிகளை அமர்க்களமாய் களமிறக்கலாம் ! மதிய லஞ்ச் எங்கே என்பதை மட்டும் ஒரு நாளைக்கு முன்பாக தீர்மானித்துக் கொள்ளலாம் ! இதனையே ஒரு குட்டியான அழைப்பிதழாய் தயார் செய்து முன்பதிவு செய்துள்ள அத்தனை வாசகர்களுக்கும் தபாலில் அனுப்பிடுவோம் ! 

இப்போதைக்கு சென்னைக்கு கொண்டு வரவேண்டிய முன்பதிவுப் பிரதிகள் பட்டியல் மட்டுமே அவசரமாய்த் தேவை நமக்கு !! விரைவில் சந்திப்போம் guys !! Have a wonderful day ! 

Sunday, April 12, 2015

வேங்கையின் திருவிழா !!


நண்பர்களே,

வணக்கம். குட்டிக் குட்டி ராட்டினங்கள் ; கலர் கலரான பானங்கள் ; காற்றில் கலக்கும் குலவைச் சத்தங்கள் ; ஓசையில்லா பிரார்த்தனைகள் என ஒரு வாரமாய் திருவிழாக் கோலத்தில் உருமாறிப் போயிருந்த எங்கள் சாலைகள் தகிக்கும் வெயிலில் இப்போது நிசப்தமாய் காட்சி தருகின்றன ! இன்னுமொரு பங்குனித் திருவிழா அழகாய் நிறைவு பெற்ற திருப்தியில் ஊரே லயித்திருக்க - நமக்கோ பரபரப்பு ஓய்ந்தபாடில்லை ! நமது "வேங்கையின் திருவிழாவுக்கு" இன்னும் ஏழு தினங்கள் மட்டும்மே எஞ்சியிருக்க, இங்கே 'லப்-டப்'கள் overdrive -ல் உள்ளன என்பது தான் நிஜம் ! மெகா பணிகள் நமக்குப் புதியவைகளல்ல ; குறுகலான காலக்கெடுவுக்குள் காரியம் சாதிக்க நமது டீம் சமீபமாய் பழகியும் உள்ளது தான் !  ஆனால் ஒவ்வொரு project -ம் முந்தையதுக்குத் துளியும் தொடர்பின்றி முற்றிலும் புதியதொரு அனுபவம் தர வல்லதாய் இருப்பது தானே நமது பிழைப்பின் தனித்தன்மையே !! So NBS தயாரித்த அனுபவங்களோ ; LMS தந்த பாடங்களோ கைகொடுக்குமென்ற உத்தரவாதங்கள் துளி கூட இல்லாதொரு நிலையில் தான் இம்முறையும் பிள்ளையார் சுழி போட்டு வைத்தோம் ! 

தொட்ட மாத்திரத்திலேயே அத்தனையும் பொன்னாகும் ஒரு யோக வேளையில் NBS -ன் திட்டமிடல் துவங்கியிருக்குமோ என்னவோ - அதன் பணிகள் சகலமும் செம வழுக்களை நடந்தேறின ! இத்தனைக்கும் வண்ணப் பாணிகளுக்கு ; ராட்சஸ இதழ்களுக்கு நாம் பரிச்சயம் செய்து கொண்டிருந்த துவக்க நாட்களவை ! Yes, of course குட்டிக்கரணங்கள் எக்கச்சக்கமாய் போடத் தேவைப்பட்டது தான் ; ஆனால் பெரியதொரு டென்ஷன் இன்றி பணிகளை நிறைவேற்றுவது அன்றைக்கு எப்படியோ சாத்தியமானது ! Maybe அதற்கு முந்தைய 2 மாதங்களின் நமது ரெகுலர் அட்டவணை ரொம்பவே நோஞ்சானாக அமைந்திருந்தது - NBS -ன் பொருட்டு முழுக் கவனமும் தர உதவியதோ - என்னவோ ?!

LMS-ஐப் பொறுத்தவரை தயாரிப்பினில் ஏகப்பட்ட படபடப்பு 60 முழு நாட்களுக்கு எனக்குள் குடியிருந்தது ! நாட்காட்டியின் ஒவ்வொரு சருகையும் கிழிக்கும் ஒவ்வொரு காலையிலும் வயிறு கலங்காது இருக்காது - ஆகாரத்தில் துளியும் கோளாறு இலாத போதிலுமே ! ஆனால் jigsaw puzzle -ன் பல முகங்கள் 'பட பட'வென்று ஒன்று சேர்வது போல கதைகளின் பணிகள் ; அச்சு ; பைண்டிங் என எல்லாமே ஒரு திடீர் வேகம் பெற்று deadline -க்கு வெகு முன்கூட்டியே இதழ் தயாராகியிருந்தது ! 

ஆனால் - மின்னும் மரணமோ முற்றிலும் மாறுபட்டதொரு அனுபவம் ! பாகம் 11 நீங்கலாக மற்ற அத்தியாயங்கள் எதற்கும் மாங்கு-மாங்கென்று மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு இங்கே அவசியமில்லை எனும் போது இந்தப் பணி cakewalk ஆக இருந்திடவேண்டுமென்ற மிதப்பு எனக்குள் நிறையவே இருந்தது - துவக்க நாட்களில் ! தவிரவும், முன்பதிவுகளின் ஆரம்பத்து மந்தகதி எனக்குள்ளும் ஒரு சூட்டிகையைக் கொண்டு வரவில்லை என்பதும் நிஜமே ! "ஆஹ்...மாதம் 50 முன்பதிவுகள் என்ற வேகத்தில் தான் புக்கிங் நடக்கிறது ; 500-ஐ எட்டிட எப்படியும் எட்டுப் பத்து மாதங்கள் ஆகிதேனும் போது எக்கச்சக்கமாய் அவகாசம் தான் உள்ளதே ! "  என்ற கொழுப்பு குடி கொண்டிருந்தது ! பிளஸ் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியோ-மாதமோ நிர்ணயம் செய்திராத நிலையில், அவ்வப்போது முன்னின்ற மாதாந்திர ரெகுலர் இதழ்களுக்குள் மூழ்கிடுவதில் மும்முரமாகிப் போனோம் ! ஜனவரியில் "சென்னைப் புத்தக விழா " ; "பௌன்சர் அறிமுகம்" என இரு முக்கிய நிகழ்வுகள் காத்திருந்ததால் டிசெம்பரின் பெரும் பகுதி அந்த முனைப்பிலேயே செலவாகிப் போயிருந்தது ! சொல்லப் போனால் பௌன்சரின் முதல் ஆல்பம் + சென்ற மாதத்து ஆல்பம் # 2-ன் பொருட்டு நான் எடுத்துக் கொண்ட தயாரிப்பு அவகாசம் மாமூலை விட 50% ஜாஸ்தி ! 

ஜனவரியின் பரபரப்புகளின் மீது லேசாகத் தூசு படியத் தொடங்கிய வேளைகளில் தான் "மின்னும் மரணம்" எனது focus-க்குள் சீரியசாகப் புகுந்திடத் தொடங்கியது ! 11 பாகங்கள் ; நம்மிடம் பணியாற்றி வரும் 5 DTP டீம்களிடம் ஆளுக்கு இரண்டாய்ப் பகிர்ந்து தந்து விட்டால் - மேகி நூடுல்ஸ் பாணியில் பதார்த்தம் தயாராகிடுமே என்று யதார்த்தமாய் நான் சிந்தித்து - தைப் பொங்கல் முடிந்த பின்னொரு சுபயோக சுபதினத்தில் மி.மி. வேலைகளை முடுக்கி விடத் தொடங்கினேன் ! அப்போது தான் காதோடு சேர்த்து 'பொளேர் ..பொளேர்' என சாத்துக்கள் விழுந்தன நமது அன்றைய DTP டீமின் புண்ணியத்தில் ! ஏற்கனவே அது பற்றி இங்கு நான் லேசாக எழுதியிருந்தது கூட நினைவிருக்கலாம் ! வெளியூரில் வேலையென ஒருத்தர் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட ; தாய்மைப் பேற்றின் காரணமாய் அடுத்தவர் விடைகொடுக்க ; திருமண ஏற்பாட்டின் காரணமாய் மூன்றாமவர் bye -bye சொல்ல, நானும் மைதீனும் ginger உண்ட monkeys பாணியில் ஒருத்தர் முகத்தை அடுத்தவர் பார்த்துக் கொண்டோம் ! எஞ்சியிருந்த 2 பணியாளர்களும் கூட பகுதி நேரத்து ஊழியர்கள் மாத்திரமே எனும் போது - அந்தந்த மாதங்களது கதைகளைக் களமிறக்குவதற்குள்ளாகவே குடல் வாய்க்கு வரத் தொடங்கி விட்டது ! "விடாதே ...பிடி...வேலைக்குப் புதியவர்களை எப்படியேனும் அமர்த்து.." என்று வலைபோட்டு நகரைச் சுற்றி வர - "டிசைனிங் தெரியும் ; Coreldraw தெரியும் ; ஆனால் டமில்..டமில் டைப்பிங் நஹி மாலும் !" என்ற டயலாக்குகளுக்கு எங்களது காதார்கள் நிறையவே பரிச்சயமாகிப் போனார்கள் ! தமிழ் அச்சுக்கோர்ப்பறியாது - வண்டி வண்டியை வசனங்கள் கொண்ட நமது கதைகளைக் கரை சேர்ப்பது எவ்விதமோ ? என்ற பீதியில் நியூஸ் பேப்பர்களில் விளம்பரங்கள் ; வெளியூர் பதிப்புகளிலும் விளம்பரங்கள் என சத்தமின்றிச் செய்தோம் ! விண்ணப்பங்களும் வந்தன தான் - ஆனால் அவர்கள் எதிர்பார்த்த கட்டணங்களுக்கு நமது கோவணங்களையும் சேர்த்து விற்றால் கூட கட்டுபடியாகாது என்ற நிலை ! திரும்பவும் துவக்கத்துப் புள்ளிக்கே செல்வோமென்ற தீர்மானத்தில் உள்ளூரிலேயே தேடலைத் தொடர்ந்தோம் ! ஆண்டவனும் நிச்சயமாய் ஒரு காமிக்ஸ் பிரியர் என்பதாலோ - என்னவோ நம் உளைச்சலுக்கு மருந்திட்டார் - புதிதாய் ஒரு அணியை அறிமுகம் செய்து வைத்ததன் மூலமாய் ! புதுவரவுகளை ஒரேடியாகப் பிழிந்து எடுத்து அவர்களும் பேஸ்த்தடித்துப் போய் விடக்கூடாதே என்ற பயம் ஒரு பக்கம் ; நாட்கள் நழுவிச் செல்கின்றனவே என்ற நடுக்கம் இன்னொரு பக்கம் - எப்படியோ பணிகள் ஒரு மாதிரியாக அரங்கேறத் தொடங்கின ! 

பாகம், பாகமாய் கதை என் மேஜைக்கு வரத் துவங்கிய போது அடுத்தகட்ட அந்தர்பல்டிகள் ஆரம்பித்தன ! "பார்ட் பார்ட்டாய் டைப்செட் செய்யப்பட்டு வருது ....அன்னிக்கு விடிய விடிய முழித்திருந்து அண்ணாத்தே வேலை பாக்குது ...இரண்டே வாரத்திலே எல்லா வேலையும் முடிக்குது !" என்ற மௌன சபதத்தோடு முதல் அத்தியாயத்துக்குள் புகுந்தால் - 'கட கட' வென ஓசை மேஜைக்கு மேலிருந்தும், கீழிருந்தும் கேட்கத் தொடங்கியிருந்தது ! "அரே..பேஸ்மென்ட் வீக்கா இருந்தாக்கா முட்டிங்கால்களின் நடனக் கச்சேரி சகஜம் தான் ; ஆனால் ஊப்பர் கதக்களி ஏனோ ?" என்ற குழப்பத்தோடு தந்தியடிக்கும் என் பற்களை உற்றுப் பார்த்தேன் ! ஒரு மூட்டை வசனங்கள் ...மத்தியிலே தம்மாத்துண்டாய் ஆங்காங்கே ஒரு சப்பை மூக்கரின் சித்திரங்கள் என என் மேஜையிலிருந்த பக்கங்கள் காற்றில் படபடப்பதோடு - எனக்குள்ளும் பீதியை உருவாக்கிக் கொண்டிருந்தன ! அந்நாட்களில் "மின்னும் மரணம்" கதையின் 10 பாகங்களையும் டிசைன் டிசைனாய் நாம் பிரித்துப் போட்டிருந்த சமயங்களில் நமது ஆர்டிஸ்ட்களின் சகாயத்தால் படங்களை வெட்டியும், ஒட்டியும் வசன மழைகளை லாவகமாக இங்குமங்கும் திணித்திருந்தோம் என்பதும், இன்றைய standard format-ல் அந்த பல்டிகளுக்கெல்லாம் இடமில்லை எனும் போது - சிக்கிய சந்திலெல்லாம் நமது (புது) DTP அணி சிந்து பாடியுள்ளது என்பதையும் உணர முடிந்தது ! கோனார் உரைக்குள் கொஞ்சமாய் நம் டைகரை நடமாட அனுமத்தித்த உணர்வைத் தவிர்க்க இயலவில்லை ! To be fair to them - அனுபவசாலிகளே தண்ணி குடிக்கக் கூடிய இந்தக் கதையை எடுத்த எடுப்பிலேயே புதியவர்களிடம் ஒப்படைத்தது பெரியதொரு சவாலே ! Sincere ஆக முயற்சித்திருந்த அவர்களது பணிகளையும் குறை சொல்வதற்கில்லை ! ஆனால் பட்டி-டின்கெரிங்க் அவசியமோ அவசியம் என்றான நிலை ! மதுரையில் கொத்து புரோட்டா போடுவதைப் பார்த்திருப்போர்க்குத் தெரியும் - அந்த தோசைக் கல்லின் மீது புரோட்டா படும் பாடு ! தொடர்ந்த நாட்களில் அதே பாடு தான் பட்டனர் நமது DTP அணியினரும் என் கைகளில் ! "இதை அங்கே நகற்றுங்கள் ; இதைக் குட்டியாக்குங்கள் ; அதை அந்த இடைவெளியில் பொருத்துங்கள் " என்று ஓராயிரம் மாற்றங்களைச் செய்யச் சொல்லி அவர்களது பிராணன்களில் ஒரு பகுதியை வாங்கினேன் என்றால் - பிழை திருத்தப் படலத்திலும், எடிட்டிங் efforts லும்  மிச்சம் மீதியை கரைந்தே போகச் செய்திருப்பேன் ! 

எழுத்துப் பிழைகளைத் தேடிக் கொண்டு மேலோட்டமாய் ஒரு வாசிப்பைப் போட்டு விட்டு - proofreading-க்கு தள்ளி விட்டு விடலாமென்ற வேகத்தில் திரும்பவும் உள்ளே நுழைந்த எனக்கு முட்டிங்கால்கள் இன்னுமொரு ஜலதரங்கக் கச்சேரி வாசிக்கத் தொடங்கின ! ஒரு பக்கத்துக்கு சராசரியாய் 10-12 frames ; ஒவ்வொரு frame குள்ளும் குறைந்த பட்சம் 3-4 டயலாக் பலூன்கள் ; ஒவ்வொருவரும் கிடைக்கும் முதல் வாய்ப்பில் ஏகமாய் வசனங்கள் பேசுவது என்ற பாணியைக் கடைப்பிடித்து வந்ததால் - ஒரு நேரத்திற்கு 10-12 பக்கங்களைத் திருத்தி கரைசேர்ப்பதே பெரும்பாடாகிப் போனது ! "இத்தனை பெரியதொரு முயற்சி எனும் போது - முடிந்தளவுக்கு சிற்சில பிழைகளையும் சரி செய்து விடலாமே ?" என கடல்கடந்த நண்பரொருவவரோடு சமீபமாய் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்  கருத்துச் சொல்லியிருந்தது தலைக்குள் தொட்டுப் பிடித்து விளையாட - பரணிலிருந்து ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்புகளையும் எடுத்துக் கொண்டு - திரும்பவும் பக்கம் 1-க்குப் பயணமானேன் ! ஷப்பா...குட்டிக் குட்டியாய் ஆங்காங்கே அந்நாட்களில் நிகழ்ந்திருந்த மொழிமாற்றப் பிழைகள் ; அடிக்கொருதரம் தலைகாட்டிய "சாக்கடைப் புழுக்களே" ; " தெரு நாய்க்குப் பிறந்த நீசனே " டயலாக்குகள் ; செய்திடக்கூடிய மெல்லிய நகாசு வேலைகள் என என்னென்னவோ கண்ணில்படத் துவங்க, "மாற்றங்கள் / திருத்தங்கள் செய்யாது ஆணியே பிடுங்கப் போவதில்லை !" என்ற வைராக்கியம் குடி கொண்டது ! So சிக்கிய அவகாசங்களிலெல்லாம் - மி.மி. ஆங்கிலப் பதிப்புகள் ; நமது அந்நாட்களது இதழ்கள் + தற்போதைய printouts என குட்டி போட்ட குரங்கு ஜாடையில் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தேன் - அன்று முதலாய் ! தாம்பரம் ரயில் நிலையத்து ஆறாம் நம்பர் பிளாட்பார்மில் கூட "மின்னும் மரணம்" தொடர்பான அதிகாலை நினைவுகள் எனது souvenirs பட்டியலில் உண்டு ! 

ஒரு மாதிரியாய் இந்தக் கூத்துக்களும் நிறைவு பெற்று அச்சுக்குத் தயாராகும் சமயம் "வைட்டமின் ப" பற்றாக்குறை ஜிங்கு ஜிங்கென்று தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தது ! ஒரு மொத்தமாய் பணம் கைக்குக் கிட்டுவதற்கும் - ஒன்பது மாத அவகாசத்தினில் பிரித்துப் பிரித்து வசூலாவதற்கும் தான் ஏகப்பட்ட வித்தியாசமுள்ளதே ?! அவ்வப்போது வரும் சில ஆயிரங்கள் அவ்வப்போதைய அவசியச் செலவுகளுக்கு ஸ்வாஹா ஆகிப் போயிருக்க - ஒட்டு மொத்தமாய் ராயல்டிக்கும், பேப்பர் கொள்முதலுக்கும் பணம் புரட்ட உள்ளூர் பேங்குகளின் கஜானாக்களை டால்டன்கள் பாணியில் துவாரம் போட்டால் என்னவென்ற அளவிற்கு மகா சிந்தனைகள் கிளைவிட்டிருந்தன ! நிறைய சர்க்கஸ் ; எக்கச்சக்க அந்தர் பல்டிகள் ; நிறைய "ஹி..ஹி..ஹி.."களுக்குப் பின்பாய் அந்தக் கிணற்றையும் தாண்டிவிட - அச்சுப் பணிகளை ஆரம்பிக்கும் வேலை புலர்ந்திருந்த போது மார்ச்சின் மூன்றாம் வாரம் துவங்கும் வேளையில் இருந்தோம் ! நம்மவர்களை விடிய விடிய விழித்திருக்கச் செய்து அச்சு வேலைகளை நடத்தினாலும் கூட இது சுமார் 2 வாரத்து job என்பது தான் யதார்த்தம் ! பற்றாக்குறைக்கு, நான் இல்லாத் தருணங்களில் பிரிண்டிங் செய்திட வேண்டாமென்ற ஊரடங்கு உத்தரவை சமீபமாய் நாமே அமல்படுத்தியிருக்க, எனது ஊர்சுற்றல் படலங்கள் நிகழும் சமயமெல்லாம் அச்சு வேலைகளையும் ஆறப் போடவும் தேவையாகிப் போனது ! நான் உடனிருந்து பெரிதாய் கிழிக்கப் போவது எதுவும் கிடையாதென்ற போதிலும், பகலோ ; ராத்திரியோ - அச்சின் தருணங்களில் நானும் அங்கேயே குடியிருக்கிறேன்  என்றால் செய்யும் பணிகளின் முக்கியத்துவம் பற்றி நம்மவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பழக்கம் தொடர்கிறது ! 

இதெல்லாம் ஒரு பக்கத்துப் பிரயத்தனங்கள் எனில் - "அட்டைப்படம்" என்ற அந்த அஸ்திரம் எனக்கு அஸ்தியில் ஜூரம் வரச் செய்து கொண்டிருந்தது ! LMS -க்கெல்லாம் படக்கென ஒரிஜினல் டிசைனின் மாதிரி செட் ஆகிட ; அதனை மாலையப்பன் அழகாய் வரைந்து தர ; நமது டிசைனர் மேம்படுத்தித் தர துளியும் சிரமமின்றி அட்டைப்படம் தேறியிருந்தது ! ஆனால் மி.மி மெகா முயற்சிக்கோ என்ன முட்டு முட்டினாலும் திருப்தியாக ஒரிஜினல் சிக்கவேயில்லை ! எங்கோ - எதையோ உருட்டி 2 மாதிரிகளைத் தேடிப்பிடித்து நமது ஓவியரை வரவழைத்து படம் போட்டால் - உஹும் ...எனக்குத் துளி கூடத் திருப்தியில்லை ! இன்னொருபக்கமோ நமது டிசைனர் பொன்னனிடம் சில பல மாதிரிகளைக் காட்டி, அவரது கைவண்ணத்தில் எதையேனும் தயார் செய்திடவும் சொல்லியிருந்தேன் ! அவரும் ரெடி செய்து காட்டிய முதல் டிசைன் சற்றே வித்தியாசமாய் இருப்பினும், என் உற்சாக மீட்டரில் துள்ளல் ஏதும் பதிவாகவில்லை ! உதட்டைப் பிதுக்கி விட்டு - "I want more emotions" என்று சொல்லிவிட்டு 'உர்ர்' ரென்ற முகத்தோடு 10 நாட்கள் சுற்றி வந்தேன் ! நெட்டில் எங்கெங்கோ உருட்டி, ஏதேதோ கௌபாய் டிசைங்களைத் தேடித் பிடித்தாலும், ஜிரௌவின் அமர கதாப்பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் விதமாய் எனக்கு உருப்படியாய் எதுவும் கிடைத்தபாடில்லை ! நாட்கள் நெருங்கிட - எனது பய மீட்டர் படபடக்கத் தொடங்க, டைகரின் சில பல அத்தியாயங்களின் ஒரிஜினல் ராப்பர் டிசைன்களில் எதையாச்சும் தத்து எடுத்துக் கொள்ளலாமா ? என்ற ரீதிக்கு சென்று விட்டேன் ! ஆனால் அத்தனையுமே ஏற்கனவே பற்பல தருணங்களில் நாம் சுட்ட ஊத்தப்பங்கள் தான் எனும் போது அவற்றில் ஒன்றை இப்போது திரும்பவும் சூடு பண்ண மனசு கேட்கவில்லை ! அப்போது தான் நமது டிசைனர் புதிதாய் 2 டிசைன்களின் first looks அனுப்பி வைக்க என் மண்டைக்குள் பலப் பிரகாசம் பெற்றதை உணர முடிந்தது ! அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்து - அதனில் மாற்றங்கள் / திருத்தங்கள் என கிட்டத்தட்ட 10 நாட்களாக கபடி ஆடத் தொடங்கினோம் ! "இதை பச்சையாக்கிப் பார்ப்போமே ; இல்லை..இல்லை..ப்ளூ...!! இதை சின்னதாக்குவோம் ...முன்னட்டையில் சில்க் புள்ளை வரட்டும் - நோ-நோ..பின்னட்டையில் அம்மணி---நோ-நோ..டைகர் தான்...எழுத்தை வேற ஸ்டைலில் போட்டுப் பார்ப்போமே!" என தினமும் ஒரு correction சொல்லி பொன்னனின் தூக்கத்தை அம்பேலாக்கிய புண்ணியத்தையும் ஈட்டிக் கொண்டேன் ! டிசைனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் - இது நமது மாமூலான "மஞ்சக்கலரு ஜிங்குச்சா..பச்சைக்கலரு ஜிங்குச்சா.." ஸ்டைலில் சுத்தமாய் இராது ! ரொம்பவே offbeat பாணியில் இதனை உருவாக்க வேண்டுமென்று நானும், பொன்னனும் முனைப்பாக இருக்க, மாற்றங்கள் டிசைன் பாணியில் மட்டுமன்றி ; பிராசசிங் முறையில் ; அச்சுக் காகிதத்தில் ; அச்சிடும் முறையில் என்று ஏகமாய் இருக்கட்டுமே என்று பொன்னன் கோரிக்கை வைத்தார் ! செலவு டிரௌசரைக் கழற்றும் விதமாய் இருந்த போதிலும் மந்திரித்த ஆடு போல மண்டையை ஆட்டி வைத்தேன் ! இறுதி நிமிட நகாசு வேலைகளையும் முடித்து, ராப்பர் அச்சுக்குச் சென்றது 6 மணி நேரங்களுக்கு முன்பு தான் என்றால் எங்கள் லூட்டிகளின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமே ?! ராப்பரை நேரில் பார்க்கும் வரை அதன் feel என்னவென்பதைப் புரிந்திடுவது சிரமம் என்பதால் இப்போதைக்கு  let's leave it under wraps ?! 19-ஆம் தேதிக்கு இதழை நீங்கள் பார்த்திடும் போது எங்களின் இந்த முயற்சிகள் ஈட்டும் மதிப்பெண்களை அறிந்திடும் ஆவல் இப்போதே ! But please be warned guys - இது நமது மாமூலான பாணியில் இருக்கப் போகுமொரு  அட்டைப்படமல்ல  ! 

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் உட்பக்கத்தில் இரு இடங்களில் சற்றே சொதப்பலான எழுத்துப் பிழைகள் தலைதூக்கியிருப்பதை லேட்டாகக் கவனிக்க - விடாதே...ஸ்டிக்கர் செய்து அது தலையில் போட்டு அமுக்கு ! என்று நம்மவர்கள் இப்போதும் கூட பணி செய்து வருகிறார்கள் ! Phew !! 

இந்த ரணகளங்கள் ஒரு பக்கமெனில் - நான் பெரிதாய் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது சுற்றி வர முயற்சித்துக் கொண்டிருந்த போதிலும் - மின்னஞ்சல்களில் அர்ச்சனைகளுக்கும், அறிவுரைகளுக்கும் பஞ்சமே இருந்திடவில்லை ! "டெக்ஸ் வில்லர் கதைக்கு தாம் - தூம் ஏற்பாடுகளும், முன்னறிவிப்புகளும் களை கட்டுகிறது ; டைகர் என்றால் இளப்பமா ? " என்ற காரசார மெயில்கள் ஒருபக்கமெனில் ; "மின்னும் மரணம் வெளியீட்டு விழாவின் திட்டமிடல் இப்போது வரை ஏனில்லை ? என்று பத்தி பத்தியாய் பதைபதைப்பு இன்னொரு பக்கம் ! இதன் நடுவே, கவிதைகளைப் பதிவில் பகிர்ந்திடப் பிரியம் கொள்ளா நண்பர்கள் மின்னஞ்சல்களில் திறமைகளைக் காட்டியிருக்க நமது inbox-ல் திருவிழாக்கோலம் தான் ! ஆத்திரங்களும், ஆதங்கங்களும் , அறிவுரைகளும் பகிரப்படுவது காமிக்ஸ் மீதான நேசத்தின் பொருட்டே என்பதைப் புரிந்து கொள்ள நானொரு ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க அவசியமே இல்லை தான் ! ஆனால் இங்கே என்பக்கத்து நடைமுறைப் பிரச்சனைகளைச் சமாளிக்க சற்றே working space எனக்குத் தேவையென்பதை நண்பர்கள் உணரும் நாள் புலரும் போது எனது சுவாசம் சற்றே இலகுவாகிடும் ! ஒவ்வொரு கட்டத்திலும் நேர்ந்திடும் சிற்சிறு சிக்கல்களை ; தாமதங்களை நான் டமாரம் அடித்துக் கொண்டே போனால் அந்த அயர்ச்சி உங்களையும் தொற்றிக் கொண்டு விடக்கூடும் என்பதால் அதனை நான் செய்ய முனைவதில்லை ! அத்தியாவசியம் என்ற நிலை ஏற்படும் வரை என் தலைவலிகள் எனதாக மட்டுமே இருந்து விட்டுப் போகட்டுமே ?! So எனது மௌனங்கள் மெத்தனத்தின் அடையாளமாய்ப் பார்க்கப்பட்டு, அதன் பொருட்டும் சஞ்சலம் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ?! 

பைண்டிங்கில் இன்னொரு பக்கம் பணிகள் வேகமாய் அரங்கேறி வர, 19-ம் தேதியின் காலைக்குள் நம் கைகளில் "மின்னும் மரணம்" தகதகப்பது இப்போது உறுதி ! (இன்னமும் அந்த போஸ்டர் வேலை பாக்கியுள்ளது ! phew again !!!)  

பெரியாள் யாரையாவது வைத்து இந்த மெகா இதழை வெளியிடலாமே ? என்ற ரீதியிலும் நண்பர்களின் கோரிக்கைகள் வந்துள்ளன ! என்னைப் பொறுத்தவரை இந்த இதாலே நமது வாசக வட்டத்தின் ஒரு கொண்டாட்டமே எனும் போது உங்களை விட இத்தருணத்தில் பெரியாட்கள் வேறு யாரிருக்க முடியும் ? என்ற எண்ணம் தான் ! This is truly a celebration of the spirit of the tamil comics fans !! So இதற்கென ஒரு VIP -ஐத் தேடுவானேன் ? காலை 11 மணிக்குத் துவங்கும் புத்தக விழாவில் நமது ஸ்டால் எண் : 128-ல் எப்போதும் போலவே மின்னும் மரணத்தை unveil செய்திடுவோமா ? அல்லது அருகாமையில் ஏதேனும் ஹோட்டலில் AC அரங்கம் கிடைக்கும் பட்சத்தில் buffet lunch சகிதம் அங்கே நம் சந்திப்பை அரங்கேற்றிடுவோமா ? புத்தக சங்கமத்தின் வெளியரங்கில் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மாலைகளில் உண்டென்று சொன்னார்கள் ! ஆனால் சாயந்திரம் வரையிலும் இதழை உங்கள் கண்களில் காட்டாது வைத்திருப்பது என் மண்டையின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதால் அந்த சிந்தனை சுகப்படவில்லை ! தவிர, பஸ் / ரயில் பிடித்து ஊர் திரும்பக்கூடிய நண்பர்களை மாலை நேரத்து நிகழ்வுகள் தாமதப்படுத்தவும் கூடுமே என்று நினைக்கத் தோன்றியது ! So - "காலை எழுந்தவுடன் மின்னும் மரணம் " என்ற slogan தேவலை என்று தோன்றியது ! எங்கே ? என்ற தேர்வு உங்களது folks ! "வெளியீட்டு விழா" என்ற சிந்தனைக்கு நான் எதிரியல்ல ; its just that I am  totally drained at the moment  that I don't have it in me to plan ! உங்களிடம் அது பற்றி திட்டமிடல்(கள்) ஏதேனும் இருப்பினும் காதுகளை இரவல் தர நான் தயார்! என் தந்தையையும் அழைத்து வர முயற்சிப்பேன் ; அதனையும் கருத்தில் கொண்டு பிளான் பண்ணிடலாமே ?! பந்து உங்களது தரப்பில் உள்ளது guys - ஆடும் விதம் இனி உங்களது ! எல்லோருக்கும் எற்புடையதொரு திட்டமிடலுக்கு நாங்கள் ஒ.கே. ! Start music ! 

Before I wind up - "மூட்டை சுமந்தது போலான இந்த நீட்டல்-முழக்கல் அவசியம் தானா ? இத்தனை பில்டப் ஓவர் !" என்ற சிந்தனை கொண்டிருக்கக்கூடிய நண்பர்களின் பொருட்டு : இது என் ஒருவனது பீற்றலின் நோக்கில் எழுதப்பட piece அல்ல ! ஒரு மெகா முயற்சியை வழக்கமான, பிசியான அட்டவணைக்கு மத்தியினில் செயல்படுத்திப் பார்க்க எத்தனிக்கும் சமயங்களில் நமது சின்ன டீமுக்கு நேர்ந்திடும் overload-ன் மீதான ஒரு பார்வையே இது ! அப்புறம், இத்தனை எழுதி விட்டு - கதையின் நாயகரைப் பற்றி எழுதவில்லையே - என்ற விசனத்துக்குச் சொந்தம் கொண்ட நண்பர்களின் பொருட்டு : இது "the making of மின்னும் மரணம்" போன்றதொரு ஆக்கம் மட்டுமே ; "தளபதி" பற்றி வரும் வாரத்தினில் ! 

கிட்டத்தட்ட 2 மாதங்களாய் ஒவ்வொரு சனியிரவும் ஒரு வண்டிப் பக்கங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு அவற்றையே முறைத்துப் பார்த்துப் பழகியான நிலையில் இன்றைக்குக் காலியாகக் காட்சி தரும் என் மேஜையைப் பார்க்கும் போது எப்படியோ உள்ளது ! இரு மாதம் என்னோடிருந்த அந்த வேங்கை இன்று வெளியே வலம் வரத் தயாராகி விட்டதால் -  இனி அந்த மேஜையினில் அடுத்த தொப்பிக்காரருக்கு இடம் ஒதுக்க ஆரம்பித்து விட்டேன் !! சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்!  Bye guys & good night !