Thursday, 29 September 2016

ஒரு அட்டவணையின் கதை !

நண்பர்களே,

வணக்கம். நிறைய இன்டர்நெட் பேலன்ஸும், நிறைய-நிறையப் பொறுமையும், உங்களிடம் உள்ளனவாயென்று இந்தப் பதிவினில் புகுந்திடும் முன்பாக சோதித்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் !!

ஆண்டின் ‘அந்த வேளை‘ ஒரு வழியாய்ப் புலர்ந்து விட்டது !புதுசாய் ஓராண்டுக்கான அட்டவணையைத் தயாரிக்கிறேன் பேர்வழியென்று வண்டி வண்டியாய்க் கதைகளைத் தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்து என்னையே நிறையக் குழப்பிக் கொள்வது ; ‘இது உண்டா ? இது இல்லியா?‘ என்ற யூகங்களோடு உங்களை மண்டை காயச் செய்வது ; அவ்வப்போது பில்டப்பாய் விடுவது ;  என்ற அந்தப் பரிச்சயமான கண்ணாமூச்சியாட்டம் இந்த முறை சற்றே சீக்கிரமே ஆரம்பித்து விட்டது ! அதன் பலனாய் செப்டெம்பர்  இறுதியிலேயே தொடரும் ஆண்டுக்கான டைம்-டேபிளை ஒப்படைக்க முடிந்துள்ளது ! நிறைய நாயக / நாயகியர் ; நிறைய ஆர்வங்கள் / எதிர்பார்ப்புகள் ; ஆளுக்கொரு தேர்வு ; ரசனை என்றதொரு சூழலில் அனைவரையும் சந்தோஷப்படுத்த எங்களால் ஆன சகல குட்டிக்கரணங்களையும் அடிக்க முனைந்திருக்கிறோம் ! ஆனால் நூற்றுக்கு நூறென்பதெல்லாம் ரசனைகள் சார்ந்த தேர்வுகளில் சாத்தியம் லேது ! எனும்போது சிற்சிறு மாற்றுக் கருத்துக்கள் இருந்திட வாய்ப்புகளுண்டு என்பதை நாங்கள் அறியாதில்லை ! So உங்கள் 'ஆதர்ஷர்களுள்' யாரேனும் பட்டியலுக்குள் இடம் பிடிக்காது போயிருப்பின், இடமின்மையோ ; விற்பனைகளில் அவர்கள் கண்ட சுணக்கமோ காரணமாக இருந்திடக் கூடுமென்ற அனுசரணையான புரிதலுக்கு எங்களது முன்கூட்டிய நன்றிகள்! இனியும் பில்டப்களுக்கு வேலையுமில்லை ; வேளையுமில்லை என்பதால்  - here goes !
நடப்பாண்டின் அட்டவணையில் நாம் செய்த பிரதானமான நல்ல விஷயம் - சந்தா முறைகளை genre-களின் அடிப்படையில் உத்தி பிரித்ததே என்பேன் ! லார்கோவையும், லக்கி லூக்கையும் ஒரே கோட்டில் அணிவகுக்கச் செய்வதை விடவும், லார்கோவுக்கு ஷெல்டனையும், லக்கிக்கு, டாக் புல்லையும் துணை நிற்கச் செய்வதில்  நிறைய நலன்கள் இருப்பதாகத் தோன்றுவதால் அதே பாணி காத்திருக்கும் ஆண்டிலும் தொடர்ந்திடவுள்ளது ! ஒரே மாற்றம்- சந்தா பாணிகளின் எண்ணிக்கையில் மாத்திரமே ! A, B, C, D, க்குத் துணையாக சந்தா E-ம் 2017-ல் களம் காண்கிறது!

இந்தத் திட்டமிடலுக்குள் நான் தீவிரமாய்ப் புகுந்த முதல் கணத்தில் தீர்மானிக்க வேண்டியிருந்தது ஆண்டின் மொத்த இதழ்களின் எண்ணிக்கையினையே ! மறுபதிப்புத் தடத்தில் 12 இதழ்கள் + Popular டெக்ஸ் தடத்தில் 12 இதழ்கள் என்று 2016-ல் போட்டுள்ள template-ஐ அட்சரசுத்தமாய் 2017-க்கும் தொடரும் பட்சத்தில் - புது வரவான சந்தா E-க்கென குறைந்த பட்சமான இதழ்களை இணைத்தாலே - மொத்த count 50-ஐத் தாண்டி விடுமென்று புரிந்தது. ஏற்கனவே 48-ல் பட்ஜெட்டும் எகிறிடுகிறது ; வாசிப்பில் பலருக்கும் தேக்கம் நேர்கிறது என்பதில் இரகசியமேது ? தீவிர நண்பர்கள் இதனை மறுப்பார்களெனினும் நிஜம் அதுவே என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை. So வழக்கமான 48+ சந்தா E+ Super 6 என்ற பட்டியல் – 2017-ன் நடைமுறையில் இருப்பின் அதுவே நயமான வாத்து பிரியாணிக்கான recipe ஆகிப் போகுமென்று பட்டதால் - நடைமுறையிலுள்ள ஒவ்வொரு சந்தாக்களிலும் தலா 2 இதழ்களைக் குறைத்திடுவதே வழியென்று புரிந்தது ! ஆக சந்தா A+B+C+D = 40 என்று எழுதிக் கொண்டான பின்பே கதைத் தேர்வுக்குள் புகுந்தேன்! இன்னும் சொல்லப் போனால் - ரெகுலர் சந்தாக்களில் தலா 9 இதழ்கள் என்ற திட்டமிடலோடு - 4 x 9 = 36 + சந்தா E 6 = TOTAL 42 இதழ்கள் என்ற கணக்கையும் போட்டுப் பார்த்தேன்தான் ! ஆனால் ரொம்பவே நாயகர்கள் அடி வாங்குவது போல் தோன்றியதால் அந்தத் திட்டத்தை  மூட்டை கட்டிவிட்டேன் ! 

சந்தா A-ன் பட்டியலுக்குள் பெரிய சிரமங்களின்றி கீழ்க்கண்ட ‘ரெகுலர்களின்‘ பெயர்களை டிக் அடிக்க முடிந்தது !

- லார்கோ வின்ச்
- வேய்ன் ஷெல்டன்
- கமான்சே
- ரிப்போர்ட்டர் ஜானி
- ஜேசன் ப்ரைஸ் (இறுதி பாகம் காத்துள்ளதல்லவா ?)

என்று 5 பெயர்கள் தானாய்த் தேர்வாகிக் கொள்ள, பாக்கி 5 பற்றி மாத்திரமே நான் சிந்திக்க வேண்டி வந்தது ! நடப்பாண்டுக்கும், புத்தாண்டுக்குமிடையே வேறுபாடு காட்டிடல் அவசியமென்று நினைத்தேன் ! So கொஞ்சமேனும் புது இரத்தம் அவசியமென்று தோன்றியதால் எனது தேடல்கள் புது நாயக / நாயகியர் திசையில் ஓடத் தொடங்கியது ! ஏகப்பட்ட மொழிகளின், ஏகப்பட்ட ஹீரோக்களை அலசினேன்... உருட்டினேன் ! ஆனால் புதுவரவுகளுக்கு நம்மால் வழங்கக் கூடிய slot-களின் எண்ணிக்கையில் வந்து நின்ற போது நிறையத் தொடர்கள் அடிவாங்கின ! BATMAN ; வேதாளன் போன்ற popular தேர்வுகளுக்கும் ‘மடியில் 2 இடங்கள்; மனதில் பாக்கி இடங்கள்‘ என்ற டயலாக்கை நான் எடுத்து விட்டால் - "முன்வாசல் அங்கே...பின்வாசல் இங்கே.....! அண்ணாச்சிக்கு வசதி எப்படியோ ? " என்று படைப்பாளிகள் பதில் கேள்வி கேட்கும் ஆபத்துண்டு என்பதால் அந்த முயற்சிகளை நான் துவக்கவேயில்லை ! எஞ்சி நிற்கும் 'என்றும் பசுமையான' ரிப் கிர்பி ; காரிகன் ; சார்லி ; ஜார்ஜ் ஆகியோரைக் கொண்டு நான் பட்டியலமைத்தால் கொட்டாவிகளுக்குப் பஞ்சமேயிராது என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை ! பழமையில் நிலைகொண்டு நிற்கும் நண்பர்கள் இதனில் வன்மையாய் மாறுபடலாம் ; ஆனால் காலத்துக்கு ஒவ்வாக் கதைகள் காவியங்களாகவே சில அளவுகோல்களில் காட்சியளிப்பினும் - அவற்றிற்கு முன்னுரிமை வழங்குவது முன்செல்லும் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதில் எனக்குள் குழப்பமில்லை ! So நூற்றுக்கணக்கான / ஆயிரக்கணக்கான கதைகள் என்ற excess baggage இல்லாத, – நமது தற்போதைய ரசனைகளுக்கு நியாயம் செய்திடக் கூடிய தொடர்கள் பக்கமாய் பார்வையை ஓடவிட்ட போது shortlist ஆனோர் 5 நாயக / நாயகியர் ! அவர்களது தொடர்களைப் பொறுமையாய் பரிசீலிக்கத் துவங்கியதே எனது அடுத்த பணியாக இருந்தது. நாம் பரிசீலித்தால் மாத்திரம் போதுமா ? படைப்பாளிகளின் எதிர்பார்ப்புகளை நம்மால் பூர்த்தி செய்திட முடிந்தால் மட்டும் தானே தேர் எல்லையை விட்டு நகரும் ? So அவர்களது ராயல்டி அளவுகோல்களில் நாம் அடிவாங்கும் தருணங்களில் – “சீச்சீ... எனக்கு ஜல்ப்பு புடிச்சிருக்கு... புளிப்பான இந்தப் பழம் தொண்டையைப் பதம் பார்த்து விடுமே !!” என்று கெத்தாக சுனா.பானா பாணியில் ஜகா வாங்கிடவும் அவசியமானது ! 

To cut a long story short – LADY S தொடரானது நமது திட்டங்களுக்கு ரொம்பவே வாகான தேர்வாய்த் தோன்றியது ! டாப் கதாசிரியர் வான் ஹாம்மேவின் ஆக்கம் ; இன்றைய நவீன உலகைச் சார்ந்த (புராதனமிலாக்) கதைக்களம் ; அதே சமயம் தொடரில் இதுவரையுள்ளதே சுருக்கமான கதையெண்ணிக்கை (14 ஆல்பம்கள்) என்று நமக்கு சாதகமான சகல பெட்டிகளையும் டிக் அடிக்க LADY S-க்கு  சாத்தியமானதால் அவருக்குத் தலையசைத்தேன் ! துவக்கக் கதை – 2 பாகங்கள் கொண்டதென்பதால் ‘விடைகொடு ஷானியா‘ டபுள் ஆல்பமாகத் திட்டமிட்டேன் ! தொடரும் சாகஸம் one shot சிங்கிள் ஆல்பம் என்பதால் ‘சுடும் பனி‘ fix ஆகிப் போனது. ஆக 5+2 என 7 இதழ்கள் உறுதியான நிலையில் - நமது fantasy நாயகர் ஆஜானுபாகுவாய் என் முன்னே நின்றார் மிரட்டலாய் ! 2016-ல் சந்தா Z-ல் தோர்கலை இணைக்கலாம் என்ற எண்ணத்தில் mainstream சந்தாவில் அவருக்கு இடம் தராது போக ; பின்னர் சந்தா Z டீலில் விட்டுப் போக - 2016-ல் இந்த lovable நாயகருக்கு இடமின்றிப் போனது ! அந்தத் தவறை திரும்பவும் செய்திட வேண்டாமென்ற முன்ஜாக்கிரதையில் இன்னொரு சிங்கிள் ஆல்பம் + டபுள் ஆல்பம் என்ற தொகுதி உடன்படிக்கை போட்டு விட்டேன் - தோர்கலோடு ! ஆக 7+2 = 9 இடங்கள் பூர்த்தியான நிலையில் எஞ்சியது ஒரே ஸ்லாட் தான்! அந்த வெற்றிடத்தை நிரப்பிட வருகிறார் ட்யுராங்கோ! இவருமொரு ப்ராங்கோ- பெல்ஜியக் கௌபாயே ! ஒற்றைக் கழுகு....குறைவாய்ப் பேச்சு / நிறைவாய் செயல் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ; இவருக்குமே ஒரு கை செயலற்றுப் போக - இடதுகையே இவரது சாதிக்கும் கரம் ! THE GREAT SILENCE என்றதொரு இத்தாலிய கௌபாய் திரைப்படத்தை சார்ந்த முதல் ஆல்பத்தோடு துவங்கும் இந்தத் தொடர் - The Good, the Bad and the Ugly ; "Once Upon a Time in the West" போன்ற 'ஹிட்' ஹாலிவுட் திரைப்படங்களை ஆங்காங்கே தொட்டுச் செல்லுமொரு கிளாசிக் western !  பிரபல ஓவியர் Yves Swolfs-ன் கைவண்ணத்தில், வண்ணத்தில் மிளிரும் இந்தத் தொடரில் 17 ஆல்பங்கள் மட்டுமே உண்டு என்பதால் ஆண்டாண்டு காலமாய் இவரைக் கொண்டு ஜவ்வு இழுக்கப் போவதில்லை நாம் ! அது மட்டுமன்றி - முத்து 45-வது ஆண்டுமலரின் பொருட்டு ஏக் தம்மில் இவரது முதல் 4 ஆல்பங்களும் ஒரே edition ஆக வரவுள்ளது ! So அறிமுகமே 4 சாகசங்கள் ஒன்றிணைந்ததொரு அதிரடி ஆல்பத்தில் ! சத்தமின்றி யுத்தம் செய்‘! 2017-ன் முதலிதழ் ஆன பின்னணி  இதுவே ! So இதழ்களின் எண்ணிக்கையானது 10-ல் நின்றாலும், கதைகளின்  எண்ணிக்கையில் வழக்கமான 12-ஐத் தாண்டியிருக்கும் 2017-ன் சந்தா A -வினில் ! Here are the visuals !











Onto சந்தா B – இங்கே தான் ஏகப்பட்ட நேரம் ; சிந்தனை; உழைப்பு ; அவசியமாகிப் போனது ! 
  • இருப்பதே 10 இடங்கள் ; இதனில் இரவுக்கழுகாருக்கு எத்தனை ? 
  • இதர போனெல்லி crew-க்கு எத்தனை ? 
  • சமீபமாய் சாதித்த மர்ம மனிதன் மார்ட்டினுக்கு என்ன கௌரவம் ? 
  • மெகா சைஸில் ஏதேனும் ? 
  • டெக்ஸ் கதைகளில் சிங்கிள் எத்தனை ?டபுள் எத்தனை ? 
  • 650 + கதைகள் கொண்ட டெக்ஸ் தொடரில் எதைத் தேர்வு செய்வது ? 
என்று எக்கச்சக்கப் பாய்ப்பிறாண்டல்கள் இங்கே அவசியமாயின ! படித்தேன்... புரட்டினேன்... பக்கம் பக்கமாய் ஒரு லோடுக் கதைகளை ! இறுதியாய் ஒரு தீர்மானத்துக்கு வந்த போது - இரவுக் கழுகாருக்கென 8 ஸ்லாட்கள் & 9 கதைகள் ஒதுக்கிட முடிந்திருந்தது ! அவற்றுள் போனெல்லியின் நாவல் காமிக்ஸின் பிரதிநிதிகளாக ‘ஒரு தலைவன் ... ஒரு சகாப்தம்‘ + ‘Frontiera‘ வண்ணத்தில் – மெகா சைஸில் ஒரே இதழாகக் கைகோர்க்கின்றன- தீபாவளி மலராக ! ("மெகா சைஸ்" எனும் போது- அது ‘தலையில்லாப் போராளியின்‘ அளவென்பதை நினைவு கூர்க!) Tex கதைத் தேர்வுகளுக்குள்ளேயும் இயன்றளவு variety காட்டிட முனைந்திருக்கிறேன் ! புதுயுகக் கதாசிரியர்களின் கதைக்களங்கள் ; golden era -விலிருந்தும் சரிசமமான தேர்வுகள் என்று ‘தல‘ தாண்டவத்தின் பொருட்டு என் தலையை இயன்றமட்டிலும உருட்டியுள்ளது ஆண்டின் போக்கின் போது நிச்சயம் புரியும் ! சந்தா D-ன் மறுபதிப்புப் பட்டியலில் ஓரிடத்தை மரணத்தின் நிறம் பச்சை‘க்கெனவும் ஒதுக்கியிருப்பதால் - 9+1=10 என்றாகிறது இரவுக்கழுகின் கதை எண்ணிக்கை ! ஏற்கனவே Super 6-ல் உள்ள ‘டிராகன் நகரத்தையும்‘ சேர்க்கும் போது total 11 எனும் போது - 2017-லிலும் பிரத்யேக Tex தடம் தொடர்வது புரிந்திடும் ! மர்ம மனிதன் மார்ட்டினுக்கொரு Mystery Special – 2 கதைகளுடன் ; டைலன் டாக்கிற்கொரு இடம் ; ஜுலியா & ராபினுக்கு லயன் # 300-ல் இடங்கள் என இதர போனெல்லி பெருமக்களை இங்கும், அங்குமாய் நுழைக்க எத்தனித்திருக்கிறேன் ! நமது ‘தல‘ வழிவிட்டாலன்றி மற்றவர்களுக்கு அதிக இடஒதுக்கீடுகள் சாத்தியமாகாது என்பது நிச்சயம் உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் folks ! Maybe 2018-ல் நமது மஞ்சள் சட்டை மாவீரரை சற்றே cool off செய்திட ஏகோபித்த அனுமதி கிடைப்பின் - ஓரளவுக்கு சமவிகிதப் பங்கீட்டைப் பரிசீலனை செய்திடலாம் ! ஆனால் ஜெயிக்கும் குதிரைக்கு ஓய்வளிக்க இப்போதைக்கு அவசியம் தோன்றிடவில்லை என்பதால் Tex rocks on ! இறுதியாய் இருந்ததொரு இடத்திற்குள் தலைநுழைக்க ஜடாமுடி மேஜிக் விண்டுக்கும் - நமது இளவரசிக்குமிடையே தான் போட்டியிருந்தது ! விற்பனையில் கடைசியிடம் பெற்ற dubious distinction மேஜிக் விண்டிற்கு எதிராகச் சதி செய்திட- கல்தா அவருக்கும் ; சீட் இளவரசிக்கும் கிடைக்கிறது ! அதுமட்டுமன்றி, நமது லயனின் பயணத்தைத் துவக்கி வைத்த இளவரசி – 300-வது இதழ் எனும் மைல்கல்லிலும் இடம்பிடிப்பது ஒரு விதத்தில் பொருத்தமே என்று பட்டதால், இத்தாலியக் கூட்டத்தோடு நமத பிரிட்டிஷ் இளவரசியையும் கரம் கோர்க்கச் செய்ய நினைத்தேன் ! So மாடஸ்டியின் ‘சிறையில் ஒரு சிட்டுக்குருவி‘ மடிப்பாக்கத்திலும், இன்னபிற மா.மு.க. தொகுதிகளிலும் மைசூர்பாகு விநியோகத்துக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உருவான கதை இதுதான் ! மேஜிக் விண்டைப் பொறுத்தவரை இது end of the road அல்ல ! சின்னதொரு இடைவெளிக்குப் பின்பாக மீண்டு(ம்) வருவாரென்று எதிர்பார்க்கலாம்!








Next Stop – சந்தா C ! எனது ஆதர்ஷக் கதைக்களங்கள் துளி கூடச் சிரமம் தராது தம்மைத்தாமே தேர்வு செய்து கொண்டன ! எப்போதுமே விற்பனையில் உச்சத்தில் நிற்கும் ஒல்லிப் பிச்சான் லக்கி லூக்குக்கு 2 இடங்கள் என்று ஆரம்பித்த பட்டியல் கீழ்க்கண்டவாறு ஓடியது!

சிக்பில் – 1
க்ளிப்டன் – 1
மதியில்லா மந்திரி – 1
பென்னி – 1
ரின்டின்கேன் – 1

2016-க்கு ஆட்டத்தில் சேர்க்கப்பட்டிரா  ப்ளுகோட் பட்டாளத்தின் பட்டையைக் கிளப்பும் சாகஸமொன்றும் இம்முறை தயாராக நிற்க - பட்டியலின் எண்ணிக்கை 8-ஐத் தொட்டது - அவர்களது இணைப்போடு ! நமது நீலப் பொடியர்கள் SMURFS-க்கு மீதமிருந்த 2 இடங்களையும் ஒப்படைத்த போது சுலபமாய் ‘சுப மங்களம்‘ போட முடிந்தது கார்ட்டூனின் கதைத் தேர்வுகளுக்கு ! நவம்பரில் வரவிருக்கும் லியனார்டோ தாத்தா சூப்பராய் ஸ்கோர் செய்திடும் பட்சத்தில் ஸ்மர்ப்ஸ் -1; லியனார்டோ -1 என்று பங்கு பிரித்திடலாம் ! தாத்தாவின் செயல்பாடு so so என்றிருப்பின் ஸ்மர்ப்ஸ்கள் 2 இடங்களைத் தக்க வைத்துக் கொள்வார்கள் ! இவர்கள் தவிர, இன்னமும் 2 கார்ட்டூன் தொடர்களையும் தீவிரமாகவே பரிசீலனை செய்தேன் ! ஆனால் கிட்டத்தட்ட 80 கதைகள் கொண்ட லக்கி லூக் தொடர் ; 70 கதைகள் கொண்ட சிக் பில் ; 35+ ஆல்பம்கள் கொண்ட க்ளிப்டன் ; 67 ஆல்பம்கள் கொண்ட ப்ளுகோட் பட்டாளம் என்ற நடப்பு நாயகர்களுக்கிடையே மேற்கொண்டும் புதுசாய் 30/40 கதைகள் கொண்ட தொடர்களை கோர்த்து விட மனம் ஒப்பவில்லை ! So சந்தா C தொடர்கிறது அதே நாயகர்களோடு – ஆனால் அட்டகாசமான கதைகளோடு ! Here they are...!




மீண்டுமொரு piece of cake – சந்தா D என்பேன் ! மொத்தமே 10 இதழ்கள் தான் இங்கேயும் என்றான பின்பு :

- மின்சாரக் கையாருக்கு – 2
- மொட்டைத்தலை சகா கொண்டவருக்கு – 2
- பூப்போட்ட Jockey போட்டவருக்கு – 2
- முதுகில் சதாகாலமும் ஆக்சிஜென் டாங்கைச் சுமந்தே       செல்லும் அழகு சுந்தரருக்கு – 2

என்று பிரித்துக் கொடுத்து விட்டேன் ! இடம் # 9 – டெக்ஸின் வண்ண மறுமதிப்புக்கென ஏற்கனவே வாக்குக் கொடுத்திருக்க - இடம் # 10-ல் ஜான் சில்வரைப் போடலாமாவென்ற எண்ணம் எழுந்தது - சமீபமாய் அவரது முந்தைய இதழைப் பார்த்த போது ! So இவரது அறிமுக சாகஸமான ‘ஆகாயக் கல்லறை‘ + இன்னுமொரு புதுக்கதையும் இணைந்தொரு “சில்வர் ஸ்பெஷல்“ 2017-ன் பட்டியலில் இடம் பிடித்தது ! இவரை நீங்கள் நிச்சயமாய் reject செய்திட மாட்டீர்களென்ற நம்பிக்கையோடே அட்டவணையை அச்சடித்தும் விட்டோம் ! நீங்கள் மட்டும் அவருக்கு ஞாயிறுப் பதிவில் thumbs down தந்திருப்பின்- ‘அழகாய் அசடு வழிவது எப்படி?‘ என்ற புத்தகத்திற்கு நான் அவசரமாய் ஆர்டர் போட வேண்டி வந்திருக்கும் ! தப்பிச்சேன்டா சாமி ! These are the reprint selections !




ஆக சந்தாக்கள் 4 & இதழ்கள் 40-ம் தீர்மானமாகி விட்ட நிலையில் காத்திருந்தது சந்தா E தேர்வுகள் மட்டுமே ! இங்கேயும் 10 இதழ்கள் என்று நான் அறிவித்து விட்டால் பட்ஜெட்டிலும் சரி ; பணிச்சுமைகளிலும் சரி - அழுத்தம் பன்மடங்கு கூடிப் போய் விடுமென்று புரிந்தது ! அந்த முன்ஜாக்கிரதையில்தான் முன்கூட்டியே இங்கே 6 இதழ்கள் மட்டுமே என்று ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறிவித்திருந்தேன் ! அந்த 6 இதழ்களும் கூட ரொம்பவே கூடுதல் பட்ஜெட்டுடன் இருந்திட வேண்டாமே என்ற எண்ணமும் எனக்குள் விதை விட்டிருந்தது ! 'விலை ஜாஸ்தி' என்று ஆரம்பத்துச் செக்போஸ்டிலேயே புது வண்டியானது ஆட்டம் கண்டுவிடக் கூடாதென்பதால் நீளமான கதைத்தொடர்களை ; பருமனான தொகுப்புகளை நெருங்கிடவேயில்லை ! 4 பாகம் கொண்டதொரு கதையை ஒரே இதழாய் வெளியிடுவதென்றாலே விலை 300 / 400 என்று எகிறிவிடுமென்பதால் – அத்தகைய ஆக்கங்களுக்கு தூரத்திலிருந்தே சலாம் போட்டு விட்டேன் ! இதன் பொருட்டு சிலபல ருசிகரமான தொடர்களை (இப்போதைக்கு) பரிசீலனை செய்யும் வாய்ப்புகளை நாம் இழந்திருக்கலாம் தான் ; ஆனால் ஆரம்பத்திலேயே டாப் கியர் போடுவதை விடவும் சிறுகச்சிறுக வேகம் கூட்டிக் கொள்ளலும் விவேகமே என்றுபட்டது! So ஏகப்பட்ட அலசல்கள் ; ஆராய்வுகள் ; மண்டை நோவுகள் தொடர்ந்தன - சுத்தமாய் ஒரு மாதத்திற்கு ! எங்கெங்கோ- எப்போதெல்லாமோ நான் பார்த்திருந்த / கேள்விப்பட்டிருந்த தொடர்களையெல்லாம் பொறுமையாய் வரவழைத்து, ஆராய ஆராய- எனது தலைசுற்றல்கள் கூடியதே தவிர - விடைகள் கண்ணில்பட்ட பாடைக் காணோம் ! ஏற்கனவே நான் பதிவிட்டிருந்தது போல இம்முறை - ‘கிராபிக் நாவல்கள்‘ என்று அறிவித்தாலே அந்நாட்களில் காலராத்தடுப்பூசி போட வரும் ஆபீசரைப் போல டெரராய் யார் கண்களுக்கும் நான் தெரிந்திடக் கூடாதென்பதே எனது பிரதான இலக்காக இருந்தது ! மாறுபட்ட களங்கள் ; அதே நேரம் ரசிக்கக் கூடிய கதைகளாக அமைந்திட வேண்டுமென்ற வேட்கையில் தொடர்ந்தேன் ! அதன் பலனாய் கிட்டிய 6 கதைகளின் பட்டியல் இதோ!

* “பணமென்றால்...!“ – அறிமுகம் - ‘தி அண்டர்டேக்கர்‘ ! கொஞ்சம் திகில் ; கொஞ்சம் அதிரடி; நிறைய ஆக்ஷன்; நிறைவான கௌபாய் களம் ; முழு வண்ணத்தில் ! விரசமிலா ஒரு பெளன்சரின் பாணி என்று வைத்துக் கொள்ளுங்களேன் ?

* “என் சித்தம் சாத்தானுக்குச் சொந்தம்“ – One Shot ! காதல் ; காமம் ; வசீகரம் கலவையாகிடும் போது அதனை நிராகரிக்கும் வலிமை நிறையப் பேருக்கு இருப்பதில்லை என்பதை black & white-ல் அதிரடியாய் சொல்லுமொரு ஆக்ஷன் த்ரில்லர்!

* “ஒரு முடிவிலா இரவு“ – சில துவக்கங்களுக்கு முடிவுரை எழுதும் வாய்ப்புகள் காணாமல் போய் விடும் போது சில பல பிரளயங்கள் நிகழலாம் ! அத்தகையதொரு இரவின் நிகழ்வுகளே இந்த  சைக்கோ த்ரில்லர் ! Black & white!

* “கனவுகளின் கதையிது“ – எல்லாக் கனவுகளும் காலையானால் கலைந்து போவதில்லை ! கனவுகள் கற்பனையின் வெளிப்பாடாகவும் எல்லா நேரங்களிலும் இருந்திடுவதில்லை ! நேற்றைய மனிதர்கள் இன்றைய உலகுக்கு சேதி சொல்ல இதுவொரு பாலமானால்...? படித்துப் பாருங்களேன் இந்த one shot த்ரில்லரை !

* “நிஜம் நிசம்பதமாகிறது“ – ஒரு அசாத்தியச் சித்திர அதகளம் ! மனிதனின் துவேஷங்கள், புதியவர்களை ஏற்க மறுக்கும் பகையுணர்வுகள் ; யுத்தத்தின் வலிகள் ; தனிமையின் பயங்கள் என்று ஏராளமான உணர்வுகளைச் சொல்லும் ஒரு powerful நாவலின் காமிக்ஸ் ஆக்கமிது ! மிரளச் செய்யும் படைப்பிது - மிக வித்தியாசமான சைஸில் ! Black & white !

* காலம் தவறிய காலன் : SCI-FI ஆக்ஷன் த்ரில்லர் ; அதிரடிக்கு கதைக்களம் ; மிரட்டும் சித்திரங்கள் !! Again in b&w !



உங்களை ரூம் போட்டு அழச் செய்யும் ரகக் கதைகளல்ல இவை எதுவுமே ! எல்லாமே ஒரு விதத்தில் commercial ஆகவும், இன்னொரு பார்வையில் ஆழமாகவும் தென்படக்கூடிய படைப்புகளே ! இன்னமும் அமானுஷ்யம் ; Zombies ; Apocalypse ; எதிர்காலக் கதைகள் ; காதல் கதைகள் ; நிஜ வாழ்க்கைக் கதைகள் என ஏகப்பட்ட ரகங்கள் நமக்கென காத்துக் கிடக்கின்றன ! So இந்த முதல் சுற்றில் இந்த மாறுபட்ட வாசிப்புகளுக்கு நாம் தந்திடக்கூடிய வரவேற்புகளோ / விமர்சனங்களோ தான் இந்த வழித்தடத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்திடும் ! 
இந்த 6 இதழ்களின் தேடலின் பொருட்டு நான் சுற்றி வந்திருக்கக் கூடிய கதைத் தொடர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம் ! அவற்றையெல்லாம் பார்க்கும் போது தான் - இன்னமும் எத்தனை அற்புதங்களை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது ! இந்த நிலையில்- பால்ய நினைவூட்டல்களை மட்டுமே செய்திடக்கூடிய புராதனங்களை தொடர்ந்து விரட்டிச் செல்வது அத்தனை உற்சாகம் தரும் விஷயமாய்ப்பட மறுக்கிறது ! நாம் நேரத்தையும், முயற்சிகளையும், செலவிடும் ஒவ்வொரு ரிப் கிர்பிக்கும், காரிகனுக்கும்,, சார்லிக்கும்  பன்மடங்கு ஈடாகக் கூடிய ஒரு நூறு கதைகள் காத்துள்ளன folks ! பழமையைப் போற்றுவோம் – ஆனால் பழமையே இலக்கென்று நமக்கு நாமே கால்கட்டுக்கள் போட்டுக் கொள்ள வேண்டாமே ? எல்லையில்லாக் கற்பனைகள் சிறகடிக்கும் ஒரு புதுவானத்தைப் பார்த்த பரவசத்தின் முன்பாய் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னர், அரை நிஜார்களோடு நாம் திரிந்த நாட்களை நினைவுபடுத்தித் தரும் அடையாளாச் சின்னங்களை ஒரு அளவுக்கு மேல் ஒப்பிடல் அபத்தமாய்ப்படுகிறது ! நம் எல்லைகளை - பழமையின் தேடலில் நாமே சுருக்கிக் கொள்ள வேண்டாமே ? எனது தேடல்கள் நாள் 1 முதலாகவே  100/100 வாங்கிடாது போகலாம்தான் ; இந்தப் புது பாணிகளுக்கு பரிச்சயம் வளர்த்துக் கொள்ளல் நேரமெடுக்கும் சமாச்சாரமாகிடலாம் தான் ! 'அட....எனக்கெதற்கு இந்த கனமான வாசிப்புகளெல்லாம் ?' என்ற கேள்விகள் தோன்றிடலாம் தான்  ! God willing இந்தப் பொறுப்பில்  எனக்கிருக்கும் 120 மாத அவகாசத்துக்குள் இந்தப் புதிய பூமிகளையும் ஆராய வாய்ப்புக் கிட்டின், நிச்சயமாயொரு மறக்க இயலா அனுபவம் காத்திருக்கும் என்றுபடுகிறது ! அதற்காக ஒட்டுமொத்தமாய் இதனுள் குதிக்கச் சொல்லவில்லை நான் ; வழக்கமான entertainment தடங்கள் அதே வேகத்துடனும், உற்சாகத்துடனும் தொடரட்டும் ! ஒரேயொரு ஓரத்து வண்டிப்பாதையினை மட்டுமேனும் - புதுக் தேடல்களுக்கென ஒதுக்கிடுவோமே ? ஒவ்வொரு ஆண்டும் நான் ஒப்பிக்கும் அதே ராகமாய் இது தோன்றிடலாம்தான் ; ஆனால் இம்முறை சந்தா E என்ற தடம் நனவாகிறது எனும் போது - we are not kidding any longer !

சந்தா E தொடர்பாய் சின்னதொரு முக்கியத் தகவலும் கூட! ஏற்கனவே ரெகுலர் சந்தாக்களுக்கான இதழ்களை சப்ளை செய்து ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கத் திண்டாடி வரும் வேளைகளில் இந்தப் புதுக் கத்தையினையும் கடனுக்கு அனுப்பி பளுவை ஏற்றிக் கொள்வதாக இல்லை ! So சந்தா நீங்கலாக மிஞ்சிப் போனால் 200 அல்லது 250 பிரதிகள் மட்டுமே அச்சிடவுள்ளோம் (of course ஏஜண்ட்கள் முன்பணம் தந்து ஒத்துழைத்தால் எண்ணிக்கை கூடிடும் தான் ) இந்தத் தம்மாத்துண்டு பிரிண்ட்ரன்- விலைகளை எசகுபிசகாக ஏற்றிவிடும் தான் ; ஆனால் இந்த ஒரேயொரு முறை மட்டும் இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் நஷ்டமே எழுந்தாலும் அதனை நாமே சமாளிப்பது என்ற தீர்மானத்தில் விலைகளை நிதானமான அளவுகளுக்கே அமைத்திடுகிறோம் ! So 2017-ன் இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி ரகமாய் இருக்குமென்பதால் பொதுவான விலை சார்ந்த ஒப்பீடுகள் இல்லாதிருப்பின் மகிழ்வோம் ! “கட்டாயம் சந்தா கட்டச் செய்ய இதுவொரு யுக்தி !“ என்ற விமர்சனங்கள் இங்கே எழலாம் தான் ; “குறைவான எண்ணிக்கையெனில் இது க்ரேமார்கெட்டை ஊக்குவிக்கும் !“ என்ற எச்சரிக்கைகளும் எழலாம் தான் ! ஆனால் நமக்குள்ள சிரமங்கள் நமக்கே பிரத்யேகமானவை எனும் போது - அவற்றைச் சமாளிக்கும் தீர்மானங்களும் நமதாகவே இருக்க வேண்டிப்போகிறது ! So சந்தா E-க்கு மட்டுமாவது subscribe பண்ணுவதா ? அல்லது உங்கள் நகர ஏஜெண்டை தாஜா செய்து முன்பணம் அனுப்பச் செய்வதா ? அல்லது அப்போதைக்கு ஆன்லைனில் பார்த்து வாங்கிக் கொள்வதா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !

ஆக, இது தான் 2017-ன் பயணத் திட்டம் ! நிதானமாய் எல்லாவற்றையும் பரிசீலித்தான பின்பு எனது சிந்தனைகள் பயணித்த பாதையினை நீங்களும் கண்டுகொள்ள சாத்தியமாகின் all will be well !


எனது "விஞ்ஞானபூர்வ விளக்கப் படலத்துக்குப்" பின்னேயும் உங்களுள் சிலருக்கு எழக்கூடிய சிலபல கேள்விகள் என்னவாகயிருக்கும்? என்று யூகிப்பதிலும் சிரமமில்லை என்பதால் - இதோ முன்ஜாக்கிரதை முத்தண்ணாவின் முன்கூட்டிய கேள்வி-பதில்கள் :

* 40 ரெகுலர் இதழ்கள் மட்டுமே என்பது ரொம்பவே குறைவி்ல்லையா?

எண்ணிக்கைகள் 40-ல் நின்றால் கூட – 2017-ன் பக்க எண்ணிக்கை கணிசமானதொரு நம்பர் ! ‘ட்யுராங்கோ‘ 4 பாகம் கொண்டதென்பதை மறந்து விட வேண்டாமே ! And 2016 -ல் டபுள் ஆல்பங்கள் மொத்தமே இரண்டு தான் ! ஆனால் 2017-க்கோ மொத்தம் 3 ! தவிர லயன் # 300-ல் – 4 கதைகள் ; தீபாவளி மலரில் 2 கதைகள்; மார்டினுக்கு 2 கதைகள் என்று திட்டமிடப்பட்டிருப்பதையும் கவனியுங்களேன் ! ‘நிறைய இதழ்கள் வருகின்றன - அந்த வேகத்திற்கு ஈடு தந்து படிக்க முடியவில்லை!‘ என்ற புகார்கள் சரிசெய்யப்பட வேண்டியவைகளே என்பதால் இந்தச் சின்ன எண்ணிக்கைக் குறைப்பு முயற்சி !

* தோர்கல் சந்தா A-வில் இடம் பிடிக்கத் தான் வேண்டுமா?

ஒரு அட்டகாசமான பந்தயக் குதிரையினை இனிமேலும் ஓரம்சாரங்களில் ஒண்டச் செய்வதாக இல்லை ! Fantasy கூட ஒரு தவிர்க்க இயலாக் கதைரகமே எனும் போது தோர்கல் நமது திட்டமிடல்களில் ஒரு தவிர்க்க இயலா அங்கமாகிப் போவார் வரும் நாட்களிலும் !

* சாகஸ வீரர் ரோஜர் இல்லாவிட்டால் தமிழகம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் நல்லுலகில் ‘பந்த்‘ நடைபெறுமே? பரவாயில்லையா?

அவரது கதைகளை வெளியிடக் கூடாதென்ற திட்டமெல்லாம் கிடையாது ! அந்தத் தொடரிலிருந்து உருப்படியான சாகஸங்களைத் தேர்வு செய்வது தான் சிரமமாக உள்ளது ! இப்போது ரோஜரின் இரண்டாம் சுற்று துவங்கியுள்ளது – புதியதொரு அவதாருடன் ! அதன்  ஆல்பம் # 2 இந்தாண்டு தான் வெளிவந்துள்ளது ! அது எத்தனை இதழ்களோடு முற்றுப் பெறுகிறது என்பது பற்றித் தெரிந்தான பின்பு – இந்தப் புதுயுக ரோஜரைப் பரிசீலனை செய்யலாமென்றுள்ளேன் !

* டேஞ்சர் டயபாலிக் is gone தானா ?

Black & white இதழ்களின் பெரும்பான்மையை மறுபதிப்புகளும் ; இரவுக் கழுகாரும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் நிலையில் என் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதே (வியாபார) நிஜம் ! இன்னும் ஒன்றரையாண்டுகள் பொறுமை காத்தால் இந்த Fleetway மறுபதிப்புகளை ஓரளவிற்கு மங்களம் பாடியிருப்போம் ! அப்போது open out ஆகிடும் வாய்ப்புகளை டயபாலிக் போன்றோருக்குத் தருவது பற்றித் தைரியமாக யோசிக்கலாம் !

* லார்கோ & ஷெல்டன் – தலா ஓரிடம் தானா ?

அவர்களது தொடர்களிலேயே இன்னமும் எஞ்சியிருப்பது தலா ஒவ்வொரு சாகஸமே என்பதால் – 2018 வரை அவர்களைத் தொடரச் செய்ய நினைத்தேன் ! தவிர இவர்களுக்குக் கூடுதலாய் வாய்ப்பளிப்பதாயின் LADY S-ன் கோட்டாவைக் காலி செய்தால் மட்டுமே அது சாத்தியமாகியிருக்கும் ! 2016-ன் அட்டவணைக்கும், 2017-ன் அட்டவணைக்கும் மத்தியில் ‘பளிச்‘ வேறுபாடுகள் இல்லாது போயின் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் நேரிடக் கூடுமென்பதால் LADY S & ட்யுராங்கோ அறிமுகமாகிறார்கள்!

* டெக்ஸில் ‘அந்த‘ 550+ பக்கக் கதை கிடையாதா? கண்டனப் போஸ்டர்கள் அச்சிடவுள்ளோம் !!!

துரோகத்துக்கு முகமில்லை‘ ; (காத்திருக்கும்) ‘சர்வமும் நானே‘!; ‘தற்செயலாய் ஒரு ஹீரோ‘; ‘நீதிக்கு நிறமேது?‘ போன்ற கதைகளைப் படித்தான பின்பு - ‘டெக்ஸ்‘ என்ற இயல்பான நீதிக்காவலர் மீது நமக்கு அதிகமாகிடும் மரியாதையை ஒரு fantasy கதைக்களத்தினுள் இறக்கி விடுவதன் மூலம் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாமேயென்று நினைத்தேன் ! ‘அந்த‘ 550+ கதையானது மாயாஜால மெபிஸ்டோவோடு மோதும் சாகஸம் ! தற்பேதைய Tex எடிட்டர் திரு.மௌரோ போசெல்லியின் தலைமையில் நமது இரவுக் கழுகாரின் கதைகள் இயல்பான; தரமான புதுக்களங்களைத் தேடிப் பயணித்து வரும் போது நாம் இந்த விட்டலாச்சார்யா பாணி Tex=க்கு ‘ஜே‘ போட்டால் பொருத்தமாக இருக்குமா ? பக்க நீளத்தை மட்டுமே பார்க்காது - கதையின் போக்கையும் கவனமாய் பரிசீலனை செய்யும் கடமை எனக்குண்டல்லவா?

* குண்டூ புக்ஸ் இவ்வளவு தானா? இன்னும் நிறைய எதிர்பார்த்தோமே ??

ஒரு புது வரவையும் நமது சாப்பாட்டு மேஜைக்கு அனுமதிப்பதாக இருப்பின், கூடுதலாய் சமைத்திடத் தேவைப்படும் ; அல்லது ஏற்கனவே உள்ளோர் கொஞ்சம் குறைத்துச் சாப்பிட்டாக வேண்டி வரும் ! யதார்த்தம் இது தானே ? So- சந்தா E எனும் புதுவரவை இணைத்தான பின்பும் சந்தாத்தொகைகள் 2016-ன் அளவுகளை ஓவராய் கடந்திடாது இருக்க வேண்டுமெனில் சில பல பத்தியங்கள் நமக்குத் தேவையன்றோ ? ஏற்கனவே “இரத்தக் கோட்டை“யும் காத்துள்ளது 2017-க்கென....! So திட்டமிடல்களில் நமக்குள்ள கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட இயலாதே ? 

நியாயமாய்ப் பார்த்தால் – நமது கதைத் தேர்வுகள் ; பொருத்தமான விலைகள் என்று எழுதிப் பார்த்து, டோட்டல் போட்டு அந்தத் தொகையையே சந்தாவென்று அறிவித்தாக வேண்டும் ! ஆனால் இம்முறை நான் செயல்பட்டதோ கீழிருந்து மேலாய் ! அதாவது டோட்டலை முதலில் போட்டுக் கொண்டு அங்கிருந்து ரிவர்ஸ் கியரில் பயணத்தைத் தொடங்கினேன் ! So ‘புஷ்டியான புக்குகளின்‘ தேடலை விடவும் ‘ஆரோக்கியமான சந்தாவின்‘ வேட்கைக்கு பிரதானம் தர நேரிட்டது ! Hope I was right !!

*தலையில்லாப் போராளி‘ சைஸில் முயற்சிக்கவில்லையா ?

கலரில் முயற்சிக்கிறோம் இம்முறை அந்த மெகா சைஸில் !! டெக்ஸின் நாவல் காமிக்ஸ் # 1 & 2 இணைந்து ஒரே ஆல்பமாய் வண்ணத்தில், அட்டகாசமாய்க் காத்துள்ளது!

‘தலையில்லாப் போராளி‘யை முதல் முறை இந்த மெகா சைஸில் பார்த்த உற்சாகம் அடுத்த (அதே) முயற்சியின் போது ஒரு 25% குறைவான உத்வேகத்தை உண்டாக்கலாம் ! அதனையே வண்ணத்தில் முயற்சித்தால் ? சும்மா அதிராதா ? So இருக்கும் வரையறைக்குள் இயன்ற வேறுபாடுகளைக் காட்ட முயற்சிப்பதே எங்களது லட்சியமாக இருந்திடுகிறது!

* டிடெக்டிவ் கதைகள் அவ்வளவாய் காணோமே? கககபோ !

ரிப்போர்டர் ஜானி ; CID ராபின் நீங்கலாக – டைலன் டாக்கும், மார்டினும் – அசாத்தியங்களைத் தம் பணிகளில் துப்பறியும் ஸ்பெஷலிஸ்டுகள் தானே ? And ஜுலியா ஒரு pure டிடெக்டிவ் என்றில்லாவிடினும், க்ரைம், போலீஸ், மர்மம் என்ற களத்தில் உலா வருபவர் தானே ? பொதுவாகவே டிடெக்டிவ் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது தான் - தற்போதைய காமிக்ஸ் உலகினில் ! சோடாபுட்டிக் கண்ணாடி டிடெக்டிவ் ஜெரோமைப் பரிசீலித்தேன் ; but  இடப்பற்றாக்குறையில் மனுஷனுக்கு வாய்ப்பில்லாது போய் விட்டது !  

* ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணி நாயகரை லபக்கி இருப்பதாகச் சொன்னது என்னாச்சு?

அவரது ஆல்பம் # 3 2017-ல் வெளிவரவுள்ளதாம் ! அது வெளியான பின்பாக மூன்று பாகங்களுக்கும் சேர்த்து ஒரே கான்டிராக்டாகப் போட்டுக் கொள்வோமே என்று படைப்பாளிகள் கேட்ட போது மறுக்க முடியுமா ?

* XIII – இரத்தப் படலம் மர்மம் (spin-offs) எதையும் காணோமே ?

2017-ல் மனுஷனுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்போமே ? உங்களுக்குச் சுற்றுகிறதோ - இல்லையோ ; எனக்கு ரங்க ராட்டினத்தில் அரை டஜன் தடவைகள் சவாரி செய்த உணர்வு எழுகிறது!

* கேப்டன் டைகர் ?

இரத்தக் கோட்டை!

* மேஜிக் விண்டுக்கு துரோகம் செய்த பாவத்துக்கு ஷமானின் சாபங்கள் விரட்டியடிக்கும் !

ஒன்றுக்கு 4 வாய்ப்புகள் கிட்டியும், ஏதோவொரு விதத்தில் வாசக அபிமானத்தை ஈட்டாது போய் விட்டாரே மனுஷன் ! Poorest performer in sales என்று புள்ளி விபரங்கள் பறைசாற்றும் போது, தீர்மானம் என் கைகளிலிருந்து நழுவி விடுகிறதே!

* சந்தா E ?

எனக்குமே இது முற்றிலுமொரு புது அனுபவம் ! கண்களை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டு யானையைத் தடவிடத் தயாராகி வருகிறேன் ! தும்பிக்கையைப் பிடித்து ஆசி வாங்கிடுவேனா ? தூர்ப்பகுதியைத் துளாவி மணக்க மணக்க சாணத்தைச் சாகுபடி செய்யப் போகிறேனா ? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் ! கதைச் சுருக்கங்களின் வாசிப்புகள் ; நிறைய இன்டர்நெட் தேடல்கள் ; சில பல அயல்நாட்டு வாசகர்களின் அபிப்பிராயக் கோரல்கள் என்று எனது தேர்வுகளின் பின்னே ஏகமாய் முயற்சிகள் இருப்பினும் - அவற்றை முழுமையாய் மொழிபெயர்த்து, கதைக்களத்தினுள் இறங்கிடும் வரையில் எனது அனுமானங்கள் மேலோட்டமானவைகளாக மட்டுமே இருந்திட முடியும் ! ஆனாலும் இவை சாதித்துக் காட்டுமென்ற நம்பிக்கையோடு பயணம் புறப்படத் தயாராகிறேன் ! கலப்படமில்லா நிஜமிது folks ! எப்போதையும் விட இப்போது உங்கள் துணை எனக்கு அவசியம் !

* டி-ஷர்ட் உண்டா இம்முறை ?

நோ ! ஆனால் MC-வின் 45வது ஆண்டு; லயனின் இதழ் # 300; முத்து இதழ் # 400; பதிவினில் 25 இலட்சம் பார்வைகள் என ஏராளமான முக்கிய தருணங்களை 2017 தாங்கி நிற்பதால் இந்தாண்டின் 12 மாதங்களிலும் சந்தாதாரர்களுக்கு சிறுசிறு surprises காத்திருக்கும் ! அவை என்னவென்பதை அந்தந்த மாதத்து கூரியர் டப்பாக்களைப் பிரிக்கும் வேளைகளில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் ! இந்த சர்ப்ரைஸ்ஸ் வரிசையில் சீனியர் எடிட்டரின் உபயம் ஒன்றும் காத்துள்ளது என்பது கொசுறுச் சேதி ! சந்தாவில் அல்லாத நண்பர்களும் இந்த surprise களை எட்டிட வாய்ப்பு இல்லாது போகாது - ஆனால் அது சற்றே தாமதமாய் ; உரிய விலை தந்து பெறும் விதமாகவே அமைந்திடும் ! “சந்தாதாரர்கள்“; கடைகளில் வாங்குபவர்கள்“ என்ற யதார்த்தத்தைத் தாண்டி சத்தியமாய் எங்கள் பார்வைகளில் எவ்வித ஏற்ற-இறக்கங்களும் கிடையாது ! ஆனால் சந்தாவெனும் பிராணவாயுவைத் தொடர்ந்து நமக்குச் செலுத்தி வரும் நண்பர்களை ஒரு மைல்கல் ஆண்டில் மட்டுமாவது மகிழ்விப்பது எங்களது கடமையென்று தோன்றியது ! அவர்களது உதவிகளின்றிப் போனால் இங்கே நாமிருந்த தடம் கூட மிச்சமிராது ! சந்தாக்களின் பெயரைச் சொல்லிப் போடப்படும் சாலைகளும் ; நட்டப்படும் சாலையோர மரங்களும், விளக்குகளும் பயன் தருவது நம் எல்லோருக்கும் தானே ? So சின்னதொரு ‘தேங்ஸ்‘ சொல்லும் முயற்சி மட்டுமே இது ! ஆகையால் இதனையும்  ஒரு வாட்சப் விவாதப் பொருளாக்கிக் கொண்டு குழப்பிக் கொள்ளாதிருப்பின் மகிழ்வேன் ! 

இதற்கு மேலும் நான் இங்கே தொடர்ந்து கொண்டிருப்பின், படித்து படித்து உங்கள் கண்கள் என்னதைப் போலாகி விடக் கூடும் ! So விடைபெறுகிறேன் guys - என் ஆற்றலுக்குட்பட்ட முயற்சிகளை செய்துள்ளேன் என்ற சிறு திருப்தியோடு ! அதே திருப்தி உங்களுக்கும் தோன்றிடும் பட்சத்தில் – கடந்த சில மாதங்களது மெனக்கெடல்களின் வலி காணாமல் போயே போயிருக்கும் ! இன்னொரு நெடும் பயணம் நமக்கெனக் காத்துள்ளது ! நல்லதொரு துவக்கமாய் இன்றைய பொழுது அமைந்திடும் பட்சத்தில் உசேன் போல்டுக்கு செம சவால் தந்திடுவோம் என்ற திட நம்பிக்கை கொள்ளலாம் அல்லவா ? ஆண்டவனின் ஆசியும், உங்களது ஆதரவும் தொடரும் வரை- அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்க்காது!

இப்போதைக்கு எனது பணி முடிந்தது 2017-ன் திட்டமிடலைப் பொறுத்த வரைக்கும் ! இனி பந்து உங்களது கோர்ட்டில் தான் ! So தூள் கிளப்புங்கள் !

அப்புறம் ‘அக்டோபர் இதழ்கள்‘ என்றதொரு சமாச்சாரத்தையும் மறந்து விடாதீர்களேன் ப்ளீஸ் ? படிக்க, ரசிக்க, விமர்சிக்க நேரம் ஒதுக்கிட மறவாதீர்கள்! இன்று மதியத்துக்கு முன்பாகவே கூரியர்கள் / பதிவுத் தபால்கள் என சகலமும் புறப்பட்டுவிட்டன ! நாளை தூத்துக்குடி நகரில் துவங்கிடும் புத்தக விழாவினிலும் நமது புது இதழ்களை வாங்கிடமுடியும் - நமது ஸ்டால் நம்பர் 47-ல் ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now!

P.S : விரல் ரேகைகள் தேயும் அளவுக்கு இந்தப் பதிவில் டைப்போ-டைப்பென்று டைப்பியிருப்பதால் - இந்த ஞாயிறுக்கு இன்னுமொரு புதிய பதிவிட சத்தியமாய் விரல்களில் திராணியிராது ! So ஞாயிறு அவசியப்பட்டால் ஒரு உப பதிவு போட்டுவிட்டு, ஜாலியாய் அரட்டைக்குத் தயாராகிடுவேன் !

Sunday, 25 September 2016

ஒரு வெள்ளி ரிலீஸ் !

நண்பர்களே,

வணக்கம். அக்டோபரின் வண்ண இதழ்கள் இரண்டுமே தக தகப்பதை ரசித்துக் கொண்டே இதை டைப்புகிறேன்! லக்கி லூக் எப்போதும் போலவே கலரில் கலக்குகிறாரெனில் - ஜேசன் ப்ரைஸ் ஒரு surprise package என்றுதான் சொல்ல வேண்டும் ! ரொம்பவே வித்தியாசமான கதைக் களம் மட்டுமன்றி - கலரிங்கிலும் ஒரு அதகளம் காத்துள்ளது நமக்கு ! இந்த பாணி வர்ணங்களுக்கு முழு நியாயம் செய்திடும் பொருட்டு பிரத்யேகமானதொரு shade -ல் சிகப்பு மை மட்டும் அவசியப்பட்டது ! இறக்குமதி செய்யப்பட இங்க் வகைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தைப் பிடித்து அந்தச் சிகப்பையும் வாங்கி விட்டதால் - "எழுதப்பட்ட விதி" கண்களுக்கொரு விருந்தாக அமைந்திருப்பதை அடுத்த சில நாட்களில் பார்த்திடவிருக்கிறீர்கள் ! ஏற்கனவே ஸ்பைடரார் அச்சாகித் தயாராகி விட்டார்  என்பதால் - திங்கட்கிழமை பொழுதினில் "தற்செயலாய் ஒரு ஹீரோ" மாத்திரமே பிரிண்ட் காணக் காத்திருப்பார் ! So வியாழன் மாலை - பிரதிகள் நான்கு + 2017 அட்டவணை உங்களைத் தேடித் புறப்படும் ! அன்றிரவே இங்கே நமது பதிவிலும் அட்டவணையினை வலையேற்றம் செய்து விடுவோம் என்பதால் - சில வாரங்களாக நீடித்து வந்ததொரு சன்னமான சஸ்பென்ஸுக்கு மங்களம் பாடி விடும் வேளை நெருங்கிவிட்டது ! "அட..இதுக்குத் தான் இத்தனை பில்டப்பா ஒய் ?"  என்ற கேள்விகளும்   எழலாம் ; "அடடே ....2017-ன் நாட்கள் ரம்யமாய் அமையும் போலுள்ளதே !!" என்ற ஆச்சர்யக் குறிகளும் எழலாம் என்பதால் இரண்டையுமே சமாளிக்குமொரு ஜென் நிலை ஏதேனும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குமா ? என்று தேடித் கொண்டிருக்கிறேன் ! பற்றாக்குறைக்கு - அட்டவணையோடு அதன் பின்னணி பற்றிய (வழக்கமான) மெகா விளக்கவுரையினையும் இப்போதே மண்டைக்குள் தயாரித்துக் கொண்டு வருவதால் - ஆபீஸிலும், வீட்டிலும் உள்ள மோட்டுவளைகள் எனது பிரியத்துக்கு உகந்த காட்சிப் பொருட்களாய் ஆகி வருகின்றன !  உள்ளூர் கருப்பசாமி கோவிலுக்கோ ; அருகிலுள்ள தர்காவுக்கோ கூட்டிப் போய் எனக்கு மந்திரித்துத் தாயத்துக் கட்ட யாரேனும் தயாராகும் முன்பாக அந்த உரையினை முடித்து விட்டால் தேவலை என்று தோன்றுகிறது ! 

சாவகாசமாய் 2017-ன் அட்டவணையினைக் கையில் ஏந்திப் புரட்டும் இந்த நொடியினில்  - "இதன் உருவாக்கத்துக்கு ஏன்டாப்பா இத்தனை அலம்பல் ?" என்ற கேள்வி என் முன்னே தலைகாட்டி நிற்கிறது!  அட்டவணையின் புது வரவுகளையோ  ; சந்தா E-ன் கதைகளையே யூகிக்க வாய்ப்புகள் சொற்பம் என்பதைத் தாண்டி - நமது "ரெகுலர்களின்" பட்டியலை நிச்சயமாய் டயபாலிக் அகில் கூடப் போட்டிருப்பான் !! 'ஆனால் இதற்கேன் இத்தனை சிந்தனை அவசியமானது அண்ணாச்சி ?' என்று என்னை நானே இப்போது கேட்டுக் கொண்டால் - "ஹி..ஹி"..என்று ஒருகாலத்தில் பளீர் வெள்ளையாயிருந்த முத்துப் பற்களை மாத்திரமே காட்சிப் பொருட்களாய் முன்னிறுத்த முடிகிறது ! ஆஞ்சநேயர் வாலின் நீளத்துக்குப் போட்டியாய் நமது நாயகர்களின் பட்டியல் இருக்கும் போது - மடியினில் இடம் யாருக்கு ? ; மனதினில் இடம் யாருக்கு ? என்ற சிந்தனைகளே நேரத்தை முக்கியமாய் விழுங்கியுள்ளது புரிகிறது ! எது எப்படியோ - வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் ரிசல்ட்டையே அன்றைக்கே அறிய சாத்தியமாகிவிட்ட இந்நாட்களில் - நமது "வெள்ளி ரிலீசுக்கு" உங்கள் மதிப்பெண்கள் என்னவாக இருக்குமோ ? என்பதுதான் எங்களது மில்லியன் டாலர் கேள்வி ! ஏதோ பார்த்து, அனுசரித்துக் கரைசேர்த்து விடுங்க பாஸ்.......!டெம்போ வாடகைலாம் ரொம்பவே கூடிப் போச்சு!! (MV சார் - நீங்க உரக்கப் புலம்புறீங்க ; நான் உள்ளாற புலம்புறேன் !! வேற்றுமை அவ்வளவே !!)

போதுமிந்த "அட்டவணை ஆலாபனை" என்பதால் - நடப்புக்குத் திரும்புவோமே ?! நமது வலைப்பக்கத்திற்கு இத்தாலியில் எத்தனை ரெகுலர் பார்வையாளர்கள் உள்ளனர் என்பதைக் கடந்த வாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது ! TEX IN INDIA என்று போனெல்லி தம் ஹோம் பேஜில் நமது இதழ்களைப் பற்றிப் போட்டது ஒருபக்கமிருக்க, அங்குள்ள டெக்ஸ் ரசிகர்கள் மட்டுமன்றி "டைலன் டாக்" ரசிகர் மன்றத்தினரும் சுறுசுறுப்பாகி விட்டனர் ! தங்கள் ஆதர்ஷ நாயகர் உள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக "ஈரோட்டில் இத்தாலி" இதழில் டை.டா. ரசிகர்கள் இதுவரை 45 இதழ்கள் வாங்கி விட்டனர் ! டெக்ஸ் ரசிகர்களோ - நமது பதிவிலுள்ள அட்டைப்படங்களைப் பார்த்து ; அவற்றை இணைத்தனுப்பி - "இதில் 5....அதில் 3.." என்று ஆர்டர் செய்துவருகின்றனர் ! இது பற்றாதென - பெல்ஜியத்தில் உள்ள 2 ரோஜர் ரசிகர்கள் 1987-ல் நாம் வெளியிட்ட  ரோஜர் கதைகள் உள்ளனவா ? என்ற கேள்வியோடு துவங்கி - தற்போதைய வண்ண இதழ்கள் இரண்டிலும் தலா 20 பிரதிகள் வாங்கியுள்ளனர் !! காமிக்ஸ் காதலுக்கும், சேகரிப்பு ஆர்வங்களுக்கும்  மொழி ஒரு தடையே ஆகாது போலும் !! புரட்டிப் புரட்டிப் பார்ப்பதைத் தாண்டி வேறேதும் சாத்தியமில்லை என்றாலும், அந்த குட்டியான  சந்தோஷத்திற்காகவே சிலபல ஆயிரங்களை செலவிடும் ஆர்வங்களை என்னவென்பது ? அங்கே ஆயிரங்கள் செலவிடும் ஆர்வலர்கள் ஒருபக்கமெனில் - "நான் அதற்குச் சிறிதும் சளைத்தவனல்லவே !" என்று தொடர்ச்சியாய் நிரூபித்து வருகிறார் நமது நண்பர் ஒருவர் ! அவரது பணியிடம் ஓமான் நாட்டினில் மஸ்கட் ; துவக்க நாட்கள் முதலாய்த் தீவிர வாசகர் ; 2012 முதலான நமது மறுவருகையினில் ஒரு நம்ப முடியாப் பங்கெடுத்து வருபவர் !! யெஸ் - கடந்த 4 ஆண்டுகளாய் ஒவ்வொரு மாதத்து இதழ்களிலும் 2 பிரதிகள் வாங்கிடுகிறார் ! அதனில் 1 செட் எல்லோருக்கும் போலவே ஏர் -மெயிலில் பிரயாணிக்கும் ; இரண்டாவது செட்டோ ஒவ்வொரு மாதமும் சுமார் 3000 ரூபாய் செலவினில் கூரியரில் பறக்கின்றது மஸ்கட் நோக்கி !! ஆண்டொன்றுக்குத் தோராயமான கூரியர் செலவுக்கே ரூ.40,000+ செலவிடும் இந்தக் காமிக்ஸ் காதலை என்னவென்பது ?! Phew !! 

சமீபமாய் நமது முந்தைய கிட்டங்கியொன்று மராமத்தின் பொருட்டு காலி செய்யப்பட - சிலபல சுவாரஸ்யமான முந்தைய இதழ்கள் கண்ணில்பட்டன ! அவற்றை இன்றைக்குப் பகலில் புரட்டிக் கொண்டிருந்த போது - ஏகப்பட்ட மலரும் நினைவுகள் படையெடுத்தன ! "சிங்கத்தின் சிறு வயதில்" - ஒரு பக்கம் ஓடினாலும், அங்கே குறிப்பிட்ட சில மைல்கல் இதழ்களைத் தாண்டி மற்றவையின் மீது பார்வைகளைச் செலுத்தப் பொறுமை இருப்பதில்லை ! So - ஜிகினாப் பூச்சில்லா சிலபல low key நாயகர்களின் கதைகளை பெரிதாய் நான் சிலாகித்ததில்லை அங்கும், எங்கும் ! வரும் நாட்களில் - மாதத்தில் ஏதேனுமொரு வாகான வேளையினில்  வெளிச்ச வட்டமறியா நாயகர்கள் / இதழ்களை பற்றி இங்கே எழுதிடலாமென்று நினைத்தேன் ! 

என் கையில் சிக்கிய முதல் இதழ் - (முத்து காமிக்சின்) "ஆகாயக் கல்லறை" ! செம குட்டியான பாக்கெட் சைசில் ; ரூ.2-50 விலையில் 1988-ல் வெளியாகியிருக்கக் கூடிய இதழ் ! வெளியீடு நம்பர் 174 என்பதைத் தாண்டி வேறெந்த அடையாளமும் இல்லையென்பதால் - மங்கிவரும் எனது நினைவுகளை மட்டுமே நம்பி யூகம் செய்திருக்கிறேன் ! முத்து காமிக்சின் பொறுப்பு என் கைக்கு வந்த பிற்பாடு தயாரான இதழே என்பதால் நிச்சயம்  1988/89 -ஐ இது தாண்டியிருக்காது ! 128 பக்கங்கள் ; நியூஸ்பிரிண்ட்டில் black & white  ; அச்சின்றிப் பின்பக்கம் காலியாகக் காட்சி தருமொரு   மெலிதான ராப்பர் ; "காமிக்ஸ்டைம் " ; "வாசகர் கடிதம்" என்று மருந்துக்கு கூட ஏதுமிலா 'அட்டை டு அட்டை கதை' என்ற பாணி - என சகலத்தையும் குறு குறுவென்று பார்வையிட்டேன் ! 64 பக்கங்கள் வீதம் இரு முழுநீளக் கதைகள் உள்ளே இடம்பிடித்திருக்க - அவையிரண்டுமே ஏஜெண்ட் ஜான் சில்வரின் ஆக்ஷன் சாகசங்கள் !! Fleetway சரக்குகளை வளித்துத் துடைத்துக் கொண்டிருந்த நாட்களவை ! மாயாவி ; ஸ்பைடர் ; ஜானி நீரோ போன்ற "வெயிட் பார்ட்டிக்களின்" கதைகள் கிட்டத்தட்ட காலி என்றான நிலையில் - கிடைத்த அடுத்தநிலை நாயகர்களின் கதைகளை பயன்படுத்தி வந்தோம் ! அவர்களுள் ஒருவர் தான் "ஜான் சில்வர்" என்று நம்மால் பெயர்மாற்றம் கண்ட JOHN HAVOC ! 

பாவப்பட்ட மனுஷன் ஒரு பைலட் ; மேலதிகாரிகளின் குளறுபடியால் ஒரு சோதனையோட்டப் பணி சொதப்பலாய் முடிந்துபோக - சுலபமான பலிகடாவாவது ஜான் சில்வர் தான் ! அவரது பைலட் லைசன்ஸ் ரத்தாகிப் போக - "எங்களுக்கு இந்தக் காரியத்தை முடித்துக் கொடு ; உனது லைசென்ஸை மீட்டுத் தருகிறோம் !" என்று சொல்லியே உளவுத் துறை அவரைக் கொண்டு காரியம் சாதிக்கிறது ! இதுதான் கதைக் களம் ; அழகான சித்திரங்களோடு, விறுவிறுப்பாய்ப் பலகதைகள் TOPSECRET Library என்ற தொகுப்பினில் வெளியாகியிருந்தது ! எனக்கு ரொம்பவே பிடித்ததொரு தொடருது !  சுவாரஸ்யமான இந்தத் தொடருக்கும், இந்த நாயகருக்கும், எங்களது நகரோடு ஏதோவொரு பூர்வ பந்தம் உண்டோ - என்னவோ தெரியாது ; ஆனால் மனுஷன் எங்கள் ஊரில் மட்டும் 3 பதிப்பகங்களின் கைகளில் உலா போயுள்ளார் ! 
"விபரீத விளையாட்டு" ; ரவுடிக் கும்பல்" என்று 2 கதைகளோடு 1980-களில் முத்து காமிக்ஸில் இவர் தலைகாட்டிய போது ஆசாமியின் பெயர் "ஜான் ஹேவக்" தானா ? "ஜான் சில்வர்" என்று பெயர் மாற்றியது (பின்னாட்களில்) அடியேன்தானா  ? போன்ற கல்வெட்டில் பதிக்க வேண்டிய வரலாற்றுத் தகவல்கள் என்னிடமில்லை ! ஆனால் கதைப் பஞ்சமென்று, போட்ட கதைகளையே மறுபதிப்பிட்டுக் கொண்டிருந்த நாட்களில் கூட இந்த நாயகரின் நினைவு அந்நாட்களது முத்து காமிக்ஸ் நிர்வாகத்தில் யாருக்குமே வந்திராது போனது ஏன் என்பது தான் புதிரே ! So முத்து காமிக்ஸ் இவரைத் தமிழ் பேச வைத்ததெனில் - "செல்சன்ஸ் காமிக்ஸ்" என்ற பெயரில் சிவகாசியிலிருந்து சிலகாலம் மட்டுமே வெளியானதொரு ஆங்கில காமிக்ஸிலும் இவர் தலைகாட்டினார் ! மூன்றாவதாய் ஜான் நடமாடியது "மேத்தா காமிக்ஸ்" என்ற இன்னொரு சிவகாசித் தயாரிப்பினில் !!  

நாம் லயன் காமிக்ஸ் துவங்கிய அதே தருணத்தில் - அங்கே சென்று அடைக்கலமாகியிருந்த முல்லை தங்கராசன் - பதிப்பகத் துறைக்குப் புதியவர்களை கொண்டு இந்த இதழினை ஆரம்பித்திருந்தார் ! நமது ஓவியர் ; டைப்செட்டிங் ஆட்கள் ; டெஸ்பாட்ச் பிரிவினர் என சகல ஆட்களையும் லவட்டிச் சென்றது மட்டுமன்றி - டில்லியில் இருந்த fleetway ஏஜெண்ட் மூலமாக ஜான் ஹேவக்  கதையின் உரிமைகளையும்  தேற்றி இருந்தார்  ! எனக்கு காதில் புகை வண்டி வண்டியாய் வெளியான நாட்களவை ! இதில் கொடுமை என்னவென்றால் - மேத்தா நிறுவனத்தின் இளைய மகன் எனது பள்ளி நண்பர் ; இன்று வரைக்கும் தொடரும் 45+ ஆண்டு நட்பு எங்களது ! அவரோ அந்நேரம் கல்லூரியில் இருக்க, சிவகாசியில் அவரது தந்தையும், மூத்த சகோதரரும் அச்சுக்கூடம் நடத்தி வந்தனர் ! அவர்களை எப்படியோ காமிக்ஸ் துறைக்குள்  "மு.த" இழுத்து வந்திட - ஜான் ஹேவக் தனது மூன்றாம் (சிவகாசி)  இன்னிங்சைத் தொடங்கியது இப்படித் தான் ! நமது ஏஜெண்ட்கள் ; தொடர்புகள் என சகலத்தையும் பயன்படுத்தி - அதே ரூட் பிடித்து மேத்தா பிரதிகளையும் விற்பனை  செய்திட "மு.த." முயன்று, ஆரம்பத்தில் அதனில் வெற்றியும் கண்டார் தான் ! ஆனால் "ராணி காமிக்ஸ்" எனும் புயல் மார்கெட்டில் சுழற்றியடித்த அந்த நாட்களில் எவ்வித variety-ம் இல்லாது ஒரே தொடரின் / நாயகரின் கதைகளை போட்டுக் கொண்டே போனதாலோ-என்னவோ அந்த முயற்சி அதிக காலம் தொடர்ந்திடவில்லை ! சீக்கிரமே மூடுவிழா நடந்துவிடுமென்ற நிலை நெருங்கிய பொழுது "மு.த" நமக்குத் தூது விட்டார் - மீண்டும் தாய்க் கழகத்தில் ஐக்கியமாகிடும் ஆர்வத்தில் ! ஆனால் அந்நேரத்திற்குள் ஒரு மாதிரியாய் நமது லயன் காமிக்ஸ் காலூன்றியிருக்க, நான் குறுக்கே படுத்து விட்டேன் - இந்த இணைப்புப் படலத்துக்குத் தடையாக ! பணியாட்கள் ; வியாபாரத் தொடர்புகள் என சகலத்தையும் இங்கிருந்து கிளப்பிப் போயிருந்தாரென்ற அதிருப்தி எனது தந்தைக்கும் இருந்ததாலோ - என்னவோ நான் வைத்த சக்கையை மீறி அவரும் எதுவும் செய்திடவில்லை! 

கிடைத்த அடுத்த முதல் வாய்ப்பின் போது டில்லிக்குப் பயணமானவன் - ஜான் ஹேவக்கின் உரிமைகளை வாங்குவதில் குறியாக இருந்தேன் ! அந்தக் கொள்முதலின் பலனே "ஆகாயக் கல்லறை" ! வாங்கி சில ஆண்டுகள் மேஜையினில் முடங்கியே கிடந்தன தான் இவை ; பிரான்க்கோ-பெல்ஜிய படையெடுப்பின் காரணமாய் ! ஆனால் இன்னொருமுறை இந்த உரிமைகளை கோட்டை விட்டிடக் கூடாதென்ற வேகத்தில்  பணம் முடங்கினாலும் பரவாயில்லை என்று தீர்மானித்தேன் ! பின்னாட்களில் MC பொறுப்பு என்னிடம் வந்தான வேளையில் ஜான் சில்வர் ரொம்பவே கைகொடுத்தார் என்பதை மறக்க இயலாது ! Low key நாயகரே ; ஒரு லார்கோ வின்ச் ; ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு தடாலடி செய்பவரும் அல்லதான் ; பூப்போட்ட அண்டராயர்கள் இவருக்குப் பொருந்தாது - ஆனால் கனகச்சிதமான சாகச வீரர் இவர் !! இவரை   நினைக்கும் போதெல்லாம் ஆரம்ப நாட்களது சடுகுடுக்களும் ஞாபகத்துக்கு  வருமென்பதால் எனக்கு இவர் மீது கொஞ்சம் பிரியம் ஜாஸ்தியே ! இன்னமும் வெளியிடாது நாம் வைத்திருக்கும் இவரது சாகசங்கள் இரண்டோ ;  மூன்றோ  உள்ளன ! வேளை பிறப்பின் அவற்றை வெளிச்சம் பார்க்க அனுமதிப்போமா guys ? 

See you around soon !! Bye for now !

P.S : அக்டோபர் இறுதியில் வெளியாகவுள்ள XIII Mystery தொடரின் ஆல்பம் # 10 !! 


Sunday, 18 September 2016

அக்டோபரை நோக்கி....!

நண்பர்களே,

வணக்கம். கோடையில் காவிரியில் சொட்டுத் தண்ணீர் இருப்பதில்லை ; வைகை நதிப்படுகைகளோ கபடி மைதானமாய் உருமாற்றம் காண்பது வழக்கம் ; ஏரி... குளம்... கண்மாய் என சகலமும் முள்காடாகக் காட்சி தருவது நமக்குப் புதிதல்ல ! "என்றைக்காவது ஒரு நாள் கற்பனைகளுக்கும் இது போலொரு வறட்சி நேரிட்டால்- கிட்டத்தட்ட 675 ஆல்பங்களைத் தொடக் காத்திருக்கும் நமது இரவுக் கழுகாரின் கதி என்னாகுமோ ?" என்ற ரீதியிலான கோக்குமாக்கான சிந்தனைகள் மோட்டுவளையத்தை ஸ்டைலாகப் பரிசீலனை செய்யும் ஏதேனுமொரு ஓய்வான ஞாயிறின் போது அடியேனுக்கு எழுந்திடுவதுண்டு.......! அதே வன்மேற்கு ; அதே டெக்சாஸ்... அரிசோனா... நியூ மெக்ஸிகோ ; துளியும் மாற்றம் காணா அதே ரேஞ்சர்கள் ; "யாஹூ"...."வோ" ...என்று ஆழமான 'மணிரத்ன முன்னோடி' டயலாக் பேசிடும் செவ்விந்தியர்கள் ; புத்தியை புளியமரத்தின் உச்சியில் கழற்றி வைத்துத் திரியும் செம்பட்டைத்தலை ஜெனரல்கள் ; அமர்க்களமாய் வசனம் பேசி, அனாவசியமாய் சில்லு மூக்குகளுக்கு சேதாரத்தைக் கண்டுகொள்ளும் போக்கிரிகள் ; என்ற ரவுண்டுகளை ஏகமாய் அடித்தான நிலையில் இன்னமும் எதைத்தான் விட்டு வைத்திருப்பார்கள் – புதிதாய்க் கதைகளை உற்பத்தி செய்திடும் பொருட்டு ? என்று அவ்வப்போது ஆழமாய் 'ரோசனை' செய்யத் தோன்றும் !  ஆனால் போன மாதத்து ‘டெக்ஸ் கதைத் தேர்வுப் படலத்தின்‘ போது கிட்டத்தட்ட 75 கதைகளின் கருக்களைப் பரிசீலித்த போது – மனிதனின் கற்பனை சக்திக்கு எல்லைகளும் கிடையாது ; வறட்சிக்கு வாய்ப்பும் கிடையாதென்று புரிந்தது ! 

அதே காய்ந்து போன பாலைமண்ணில் நம்மவர்களை உலவச் செய்து போரடித்து விட்டதா ? ஒண்ணும் பிரச்சனையில்லை ; க்யூபா நாட்டுக்குக் கப்பலேற்றி விட்டால் போச்சு ! அர்ஜெண்டினாவிற்கு ‘பேக் அப்‘ செய்தால் போச்சு ! அடிதடி... புரட்சி... சலூன் சண்டைகள்... ஆயதக் கடத்தல்கள் என்ற மாமூலான plot-கள் சலித்து விட்டனவா ? கவலைப்பட அவசியமே கிடையாது – கோபம்... துரோகம்... பொறாமை... காதல்... நிறவெறி...பதவி வெறி... என்ற மனித உணர்வுகளை முன்நிறுத்திக் கதைகளை உருவாக்க படைப்பாளிகள் தயார் ! இம்மாதம் காத்திருக்கும் “தற்செயலாய் ஒரு ஹீரோ” இதற்குப் பொருத்தமானதொரு உதாரணம் என்று சொல்லலாம் ! சூழ்நிலைகள் ஒரு மனிதனை எவ்விதம் மாற்றுகின்றன ? ; ஒரு மனிதன் சூழ்நிலைகளை தனக்குச் சாதகமாய் எவ்விதம் உருமாற்றிக் கொள்கிறான் ? என்பதை 110 பக்கங்களுக்குள் compact ஆகச் சொல்லியிருக்கும் விதத்தைப் பார்க்கும் போது - ‘தல‘ என்றைக்குமே (கற்பனைப் பஞ்ச) ஆபத்துக்கு அப்பாற்பட்டவரென்பது புரிகிறது ! கடைசியாக போனெல்லிக்கு நான் விசிட் அடித்த சமயம் – ORFANI என்றதொரு எதிர்கால உலகுக் கதையின் வண்ண presentation ஒரு அறையில் ஓடிக் கொண்டிருந்தது. ஓரிரு நிமிடங்கள் மட்டுமே அங்கு நிற்க முடிந்தது ; அவர்கள் பேசிக் கொண்டதும் சுத்தமாய்ப் புரியவில்லை தான் ! ஆனால் ஓவியர் / கதாசிரியர் கூட்டணியின் பணியாற்றும் பாணிகள் ; அங்கே சிதறிக் கிடந்த சித்திரங்கள் ; ஒவ்வொரு frame-க்கும் அவர்கள் செய்துள்ள ஆய்வின் பின்னணிகள் ; நாயகனை / வில்லனை அவர்கள் ஓராயிரம் கோணங்களில் வரைந்து பார்த்திருப்பது என்பதையெல்லாம் பார்த்த போது மிரட்டலாக இருந்தது ! ஒரு ஹை-டெக் பாணிக்குப் படைப்பாளிகள் மாறி ஏககாலமாகி விட்டதென்று மட்டும் புரிந்தது ! So கதைக் கருக்களில் மாத்திரமின்றி ; கதை சொல்லும் விதங்களிலும் மாற்றங்கள் / புதுமைகள் சதா காலமும் back end-ல் அரங்கேறி வருகின்றன என்பதால் என் பயம் அனாவசியம் என்பது புரிகிறது ! இதோ- இம்மாத டெக்ஸ் சாகஸத்தின் அட்டைப்பட முதல் பார்வை!
இதுவொரு டெக்ஸ் போஸ்டரினை அடித்தளமாக்கிக் கொண்டு நமது ஓவியர் உருவாக்கியுள்ள சித்திரம் ! எழுத்துக்களை நுழைத்துள்ளதைத் தாண்டி இங்கே நமது டிசைனர்களுக்கு வேறு எந்த வேலையும் இருந்திருக்கவில்லை ! கதைகளுள் நாம் அடிக்கடிப் பார்த்திடும் புகைமண்டிய சலூன் காட்சியினை இதற்கு முன்பாக இத்தனை நேர்த்தியாக நாம் அட்டைப்படத்திற்குக் கொணர்ந்ததாய் எனக்கு ஞாபகமில்லை ! உங்களுக்கும் இந்த அட்டைப்படம் பிடித்திருப்பின் சூப்பர் ! And இதோ உட்பக்கத்தின் preview-ம் கூட! 

கதை நமது ஆதர்ஷ மௌரோ போசெல்லியினுடையது ! சித்திரங்கள் Andreucci என்றதொரு (புது) ஓவியர் ! போன மாதத்து “துரோகத்துக்கு முகமில்லை” ஒரு முழுநீள க்ளாசிக் சாகஸமெனில் – “தற்செயலாய் ஒரு ஹீரோ” புதுயுக டெக்ஸின் compact சரவெடி!
Boselli - The Boss !!
அக்டோபரின் நமது 4 இதழ் கூட்டணிக்குள் ஒரு புதியவரும் உண்டு ! ‘ஜேஸன் ப்ரைஸ்‘ ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நமது ரேடாரில் தட்டுப்பட்டவர் தான் ; ஆனால் சற்றே முதிர்ந்த கதைக்களமென்ற காரணத்தால் இவரது கதைகளை நமது ஓடுதளத்தில் தரையிறங்க அனுமதி தரத் தயக்கம் காட்டி வந்தோம் - அந்நாட்களில் ! ஆனால் நமது ரசனைகளில் ‘பௌ.மு.‘; ‘பௌ.பி.‘ என்றதொரு நிலைப்பாடு உருவான பின்பாக ஜேஸன் ப்ரைஸ் கதைகளுக்கு ஷட்டர் போட வேண்டிய அவசியம் காணாது போய் விட்டது என்பேன் ! வித்தியாசமானதொரு டிடெக்டிவ் இந்த செம்பட்டைக்கேச மனிதர் ! அவர் உலா வரும் அரங்கமோ 19-ம் நூற்றாண்டின் துவக்க நாட்களது இலண்டன் ! வித்தியாசமான சித்திர பாணிகள் ; செம சுவாரஸ்யமான கதையோட்டம் என  இந்த 3 பாகத் தொடர் பயணிக்கிறது. தொடர்கதை போல அமைந்திடாதிருப்பதால் இவற்றைத் தனித்தனியாகவும் ரசிக்க முடிகிறது ! But still – பெரியதொரு இடைவெளியின்றி – அக்டோபர் ‘16 ; டிசம்பர் ’16 & ஜனவரி ’17 என்ற அட்டவணையில் இதனைத் தொய்வின்றி நிறைவு செய்திடவுள்ளோம் ! இதோ- “எழுதப்பட்ட விதி”யின் அட்டைப்பட முதல் look!
100% ஒரிஜினல் டிசைன்களே முன்னட்டைக்கும்; பின்னட்டைக்கும் ! இதிலொரு சுவாரஸ்யமான side track-ம் உள்ளது. இந்தத் தொடரை 2014-க்கு வெளியிடுவதென தீர்மானம் செய்து - இந்த ஒரிஜினல் அட்டைப்படத்தைப் பரிசீலனை செய்தேன் - 2013-ன் இறுதியின் போது ! டிசைன் ரொம்பவே இருண்டு போயிருப்பதாகவும் ; ‘டல்‘ ஆக இருப்பதாகவும் அன்றைய தேதிக்கு எனக்குத் தோன்றிட- நமது ஓவியரைக் கொண்டு இதே டிஸைனை அச்சு அசலாக வரையச் செய்தேன் - சற்றே ‘பளிச்‘ வர்ணங்களோடு ! அவரும் அதை நிறைவேற்றியிருந்தார் - ஒரு நுணுக்கமான பெயிண்டிங்கோடு ! ஆனால் தொடரையே அப்போதைக்கு பரணில் போட்டு விட்டதால் - பெயிண்டிங்கையுமே அதனோடு பேச்சுத் துணைக்கு அனுப்பி வைத்திருந்தேன் ! இந்தாண்டு ஏணியைப் போட்டு கதையைக் கீழிறக்கிய சமயம் - ‘உள்ளேன் ஐயா‘ என்று சித்திரமும் கைதூக்கி நின்றது. ஆனால் நமது தற்போதைய ரசனைகளுக்கு இந்த ‘எக்ஸ்ட்ரா நம்பர்‘ வர்ண மேம்பாடு அவசியப்படாதென்றுபட்டது. அதுமட்டுமன்றி கதையின் darkish mood-க்கு அந்த ஒரிஜினல் அட்டைப்படம் முழு நியாயம் செய்வதும் புரிந்தது. So பரணை மீண்டும் பெயிண்டிங்குக்குக் காட்டி விட்டு, ஒரிஜினலோடு கிளம்பி விட்டோம் ! இதோ கீழிருப்பது நமது ஓவியரின் கைவண்ணம் ! பாருங்களேன் - மனுஷனின் மெனக்கெடலை ! கம்பியூட்டரில் கொஞ்சம் நேரம் செலவிட்டிருந்தால் அதே ஒரிஜினல் டிசைனில் இருளைக் குறைத்து - வெளிச்சத்தை அதிகமாக்கிட சாத்தியங்கள் உண்டு என்ற ஞானம் கூட எனக்கு அந்நாட்களில் இல்லாதிருக்க - "எடுறா வண்டியை ! போடுறா டிசைனை !"  என்று சீறிக் கிளம்பியிருக்கிறேன் !! Phew !!!! 
And  இதோ உட்பக்கத்திலிருந்தும் ஒரு ட்ரைலர் ! எது மாதிரியும் இல்லாதொரு சுவாரஸ்யப் புது மாதிரி இந்தக் கதை என்பதால் அக்டோபரில் உங்களது வாசிப்புகள் களைகட்டப் போவது உறுதியென்று படுகிறது!
அப்புறம் போராட்டக் குழுவின் நிஜாரில்லாத் தலைவர்... சாரி... சாரி...... "நிகரில்லாத்" தலைவரின் அதிரடி சீற்றத்தை அடுத்த மாதமும் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தைத் தவிர்க்கும் பொருட்டு - சிங்கத்தின் சிறுவயதுக்குள் புகுந்து கொண்டிருந்த சமயம் ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம் கண்ணில் பட்டது ! நமது துவக்க காலத்து வாசகர்களுக்கு இது நினைவிருக்கலாம்; எனக்கே கூட இதைப் பார்த்தான பின்பு – ‘அட... இப்படியும் ஒரு வேலை பண்ணினோம்லே!‘ என்ற நினைவு பளீரிட்டது! இதோ 1990-ல் நாம் விநியோகித்த ‘லயன் ஆல்பம்‘ ! ஒவ்வொரு மாத அட்டைப்படத்தின் பின்பக்கமும் இதனில் ஒட்டிடத் தேவையான (நமது) நாயகர்களின் படங்கள் இருந்திருக்கும். அவற்றை வெட்டியெடுத்து ஆல்பத்தில் ஒட்டி, அந்த நாயகரைப் பற்றி ‘நச்‘சென்று ஏதேனும் எழுதிப் பத்திரப்படுத்திட வேண்டும் ! 1990 டிசம்பரில் இவற்றை நமக்கு அனுப்பித் தந்தால் அதற்குக் குலுக்கலில் பரிசு! 'ஷப்பா... என்னவொரு அசகாய மார்கெட்டிங் யுக்தி !' என்று என்னை நானே முதுகில் அன்றைக்குத் தட்டிக் கொண்டேனோ இல்லையோ- பூர்த்தி செய்யப்பட்ட அந்த ஆல்பங்களில் ஒரு சிறு கத்தையினை பத்திரமாக நமது கிட்டங்கியில் கால்நூற்றாண்டு கழிந்த நிலையில் பார்க்க முடிந்த போது ஒரு இனமறியா சந்தோஷம் எனக்குள் ! இதோ மைலாப்பூரிலிருந்து நண்பரொருவர் அனுப்பியுள்ள ஆல்பத்தின் ஸ்கேன் ! 











இவற்றில் அந்நாளைக்குப் பங்கேற்றவர்கள் இங்குள்ளீர்களெனில் up your hands please !! இது சார்ந்த நினைவுகள் இன்னமும் இருப்பின் – நிச்சயமாய் அதைக் கேட்பதில் எல்லோருக்கும் ஆர்வமிருக்கும் தானே ? 

See you around all !! Have a great Sunday !